வறுமையும் துயரமும் ஒருசேர துரத்துகிறது. உதவிக்கரம் நீட்டுவதற்கும் இ-பாஸ் எடுத்துச் செல்ல வேண்டிய சூழல். அந்த அளவுக்கு கொடுமையான வலிகளைத் தந்திருக்கிறது கொரோனா. குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டோரின் நிலையோ... மிகப் பரிதாபம். கொரோனா அச்சம் காரணமாக, அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றும் அதே நேரத்தில், ஆதரவற்றோரையும் கண்டும் காணாமல் கடந்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
இதயத்தை நொறுக்கும் இப்படியான சூழலிலும், சாலையோரம் பொது இடங்களில் இறுகப்பிடித்த வயிறுடன் சுருண்டு கிடந்த ஆதரவற்ற முதியோர்களை மீட்டு அரவணைத்திருக்கிறார்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள். ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் இதுநாள் வரை வேலூர் மாவட்டத்தில் 95 முதியவர்களையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 முதியவர்களையும் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து உணவளித்துவருகிறார்கள்.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் மீட்கப்பட்ட 113 முதியவர்களையும் ஆரம்பத்தில், அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து சமூக ஆர்வலர்கள் மூலமாகத் தேவையான உதவிகளைச் செய்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக நலத்துறையின் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா, ‘‘பொதுமக்களிடமிருந்து போன் மூலமாக வரும் தகவலின் அடிப்படையில்தான் ஆதரவற்றோரை மீட்கிறோம்.
மீட்கப்பட்ட வயதானவர்களில் பலர் உடல்நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தப் பின்னர் வீட்டு முகவரியை கேட்டுப் பெறுகிறோம். வீடுகளுக்குச் செல்ல விருப்பப்பட்ட முதியோரை குடும்பத்தினரிடம் பேசி ஒப்படைத்துவருகிறோம். யாரும் இல்லாத ஆதரவற்றோரை முதலில் பள்ளிகளில் தங்க வைத்திருந்தோம். இப்போது, அவர்களை காப்பகங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருக்கிறோம்’’ என்றார்.
சமூக நலத்துறையின் இந்தச் சேவையை வேலூர் மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.
source https://www.vikatan.com/news/tamilnadu/vellore-social-welfare-officers-rescue-113-elderly-people
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக