Ad

வெள்ளி, 9 டிசம்பர், 2022

எதிரெதிர் துருவங்கள்தான் ஒட்டிக்கொள்ளுமா? ~ OPEN-ஆ பேசலாமா - 5

ஒரே மாதிரியான குணாம்சம் கொண்டவர்களைக் காட்டிலும் எதிரெதிர் குணாம்சம் கொண்டவர்களது உறவுதான் வலுக்கும் என்றும் அதுதான் சரியான பொருத்தம் என்றும் சமூகத்தில் பொதுவாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. அதாவது, வாயாடி ஆணுக்கு, அமைதியான பெண், துணிச்சலான பெண்ணுக்கு சாதுவான ஆண்... இது மாதிரியான எதிரெதிர் குணங்கள்தான் ஒத்துப்போகும் என்பதாகக் கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

``குணாம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பொருத்தம் என்கிற கணக்கெல்லாம் இந்த நவீன கால சூழலுக்குப் பொருந்தாது" என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்...

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

``முந்தைய தலைமுறைகளில் பார்த்தால், ஆண் வேலைக்குச் சென்று பொருளீட்டுகிறவராகவும், பெண் ஆணைச் சார்ந்து குடும்பத்தை நிர்வகிப்பவராகவும் இருந்தனர். குடும்பத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தான் நடந்தன. விவாகரத்து பற்றியெல்லாம் யோசித்தே பார்க்காத தலைமுறையில் வேறுபட்ட குணாம்சம் கொண்டவரைக்கூட சகித்துக் கொண்டு வாழ்ந்தனர். சமூகக்காரணிகளுக்காகவும், குழந்தைகளுக்காகவும் இந்த சகிப்புத்தன்மையைக் கொண்டிருந்தனர். பெரும்பாலும் பெண்கள் கணவன் எப்படியிருந்தாலும் இதுதான் என் வாழ்க்கை என ஏற்றுக்கொண்டு பொருளாதாரத்தில் கணவரைச் சார்ந்து இருந்தார்கள். இப்படியான கட்டமைப்பில் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வதை சரியான பொருத்தம் எனச் சொல்லிவிட முடியாது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்கு வந்து விட்ட பிறகு, பாலின சமத்துவக் கருத்து வலுப்பெற்றிருக்கிற இன்றைய சூழலுக்கு இது பொருந்தாது. எக்காரணம் கொண்டும் சகித்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியம் இல்லை என்கிற உணர்வுக்குள் பெண்கள் வந்து விட்டனர்.

எனக்கு அதிகமாகக் கோபம் வருகிறது என்றால் அதை மாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்னிடம்தான் இருக்கிறது. அதனை சகித்துக் கொள்கிற மனைவி இருந்தால்தான் குடும்பம் சீராகப் போகும் என்று எதிர்பார்ப்பது தவறு. பெண்களுக்கும் இது பொருந்தும். முந்தைய தலைமுறையினரிடமிருந்து மாதிரிகளை எடுத்துக் கொள்வதே தவறானதுதான். `எங்க வீட்டில் எங்க அம்மாதான் எல்லா வேலையும் செய்வாங்க' என்று இன்றைக்கு ஓர் ஆண் சொல்லக்கூடாது. சமத்துவம்தான் உறவில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். ஒருவர் மட்டுமே விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தால் அந்த வாழ்க்கை கசந்துதான் போகும். இருவரும் வெற்றி பெறும் சூழலைத்தான் உருவாக்க வேண்டுமே தவிர ஒருவரைத் தோற்கடித்து இன்னொருவர் வெல்வது உறவுக்குப் பொருந்தாது.

நல்ல புரிந்துணர்வு கொண்டிருக்கிற எதிரெதிர் குணாம்சம் கொண்ட தம்பதியர், மண வாழ்க்கையில் ஜெயிப்பர். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களிடம் இருக்கும் போதாமையை நிரப்பக்கூடியவர்களாக இருக்க வேண்டும். கணவரைவிட குடும்பத்துக்கான பட்ஜெட் போடுவதில் மனைவி திறமையானவராக இருக்கிறார் என்றால் அந்தப் பொறுப்பை அவர் வசம் விட்டுவிட்டு தனக்குக் கைவரப்பெற்ற பொறுப்புகளை கணவர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தம்பதிகள் பேசி முடிவெடுத்துக் கொண்டால் அந்தத் தெளிவு வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இருவரும் பரஸ்பரம் தங்கள் குடும்பத்துக்காக சரிசமமாகப் பங்காற்றுவது முக்கியம். இந்த சமத்துவத்தைப் பின்பற்றினாலே போதும்" என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``ஆணாதிக்க சமூகத்தால் முன் நிறுத்தப்பட்ட கருத்துகளின் தொடர்ச்சியாகவே இதனைப் பார்க்க முடியும்" என்கிற மானுடவியலாளரான மோகன் நூகுலா...

``ஆண், ஆதிக்கம் செலுத்துகிறவனாகவும், பெண் என்பவள் சாதுவானவளாக அடங்கிப்போகிறவளாகவும் இருந்தால்தான் அந்த உறவு நிலைக்கும் என்கிற ஆணாதிக்க மனநிலையின் தொடர்ச்சிதான் இக்கருத்தும். இக்கருத்தின்படி பார்த்தால் கூட எதிர் குணாம்சம் கொண்டவரை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க முடியும்? தன் இணையர் இப்படியாகவெல்லாம் இருந்தால்தான் அது உறவில் சமநிலையாக இருக்கும் என்கிற முன் முடிவில் இருந்துதான் இதுபோன்ற எண்ணங்கள் உண்டாகின்றன.

மோகன் நூகுலா

ஆண் - பெண் திருமண உறவே இயற்கைக்கு முரணாக, மனித சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது என்பதால் அதில் முரண்கள் நிறைந்தே இருக்கும். தெய்வீகக் காதல் என்று சொன்னாலுமே கூட இந்த முரண்பாடு இல்லாமல் இருக்காது. அப்படியிருக்கையில் எதிர் குணாம்சம் உடையவரோடு முரண்பட மாட்டோம் என்று சொல்வது எந்த விதத்திலும் அர்த்தமற்றது. Hawk and Dove strategy... அதாவது ஒருவர் பருந்தைப் போன்று சீற்றமானவராக இருந்தால் அவருக்கு புறா போன்று சாதுவானரோடுதான் ஒத்துப்போகும் என்று சொல்லப்படுகிறது. இது ஆண் - பெண் உறவில் மட்டும் கிடையாது. நண்பர்களுக்குள்ளேயும் இருக்கிறது.

இரண்டு நண்பர்கள் ஓர் அறையில் தங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்களில் ஒருவரது கை ஓங்கியிருக்கும். ஒன்று அவர் நிறைய சம்பாதிப்பவராக இருக்கலாம் அல்லது `நான்தான்' என்கிற மன அமைப்பு கொண்டவராக இருக்கலாம் . இந்த இயல்பைத் தெரிந்து நண்பர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் அந்த உறவுக்கென எல்லைகள் இருக்கின்றன. அதுவரைதானே என்று பொறுத்துக் கொள்வார்கள். திருமண உறவு அப்படியல்ல. அது காலத்துக்கும் தொடர்வது என்பதால் அது பிரச்சனையாகத்தான் இருக்கும்.

பெண் - ஆண்

சமத்துவமற்ற உறவில், அடங்கியிருக்கிறவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த உறவை அவர்கள் ஏற்றுக்கொண்டாலுமே கூட அது குறித்து புழுங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். இத்தகைய சூழலில் வாழ்கிறவர்கள் தங்களின் இணையரின் இறப்பு அல்லது பிரிவுக்குப் பிறகு பெரும் விடுதலையை உணர்கிறார்கள். என்னுடைய அப்பா இறந்த பிறகு என் அம்மாவின் குணாம்சத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்ததை நாங்கள் கவனித்தோம். அதுவரையிலும் சாதுவானவராக, பெரிதும் ஏதும் பேசாதவராக இருந்த அவர், குதூகலமாகப் பேசத் தொடங்கினார். அவருக்குக் கிடைத்த விடுதலையே இந்த மாற்றத்துக்கு காரணம். 50 ஆண்டுகள் அந்நியோன்யமாக வாழ்ந்த தம்பதியர் எனக் காட்டிக் கொண்டாலுமே கூட அந்த உறவில் ஒரு புழுக்கத்தை அம்மா உணர்ந்திருந்தார் என்பது அப்போதுதான் புரிந்தது.

ஆண் - பெண் உறவுச்சிக்கல் என்பது எக்காலத்துக்குமானது. ஒரே குணாம்சம் கொண்டவர்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள். எதிர் குணாம்சம் கொண்டவர்கள்தான் பொருந்திப் போவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. மனப்புழுக்கத்தை அனுபவிக்காத தம்பதியே இல்லை. ஆதிக்கம் செய்யாத உறவு முறையே கிடையாது. அப்படியாகத்தான் இந்த உறவின் கட்டுமானமே இருக்கிறது என்கிற போது இது போன்ற கணக்கெல்லாம் செல்லுபடியாகாது" என்கிறார் மோகன் நூகுலா.

பார்வைக் கோணம்

சித்தாரா, இல்லத்தரசி: `ஒரே மாதிரியான கேரக்டர் கொண்ட தம்பதியர் சந்தோஷமா வாழுறதை நான் பார்த்திருகேன். என்னோட திருமண வாழ்க்கையில நாங்க ரெண்டு பேருமே எதிரெதிர் குணாம்சம் கொண்டவங்கதான். எனக்கு நிறைய ஊர் சுத்தப்பிடிக்கும். என் கணவருக்கு வீட்டுக்குள்ள இருக்கிறதுதான் பிடிக்கும். நான் ஒரு Photo freak, என் கணவருக்கு போட்டோ எடுத்துக்கவே பிடிக்காது இந்த மாதிரியான விஷயங்களெல்லாம் சின்ன ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அவர் அப்படித்தான்னு புரிஞ்சுகிட்டதால எந்தப் பிரச்னையும் இல்லை.

சித்தாரா

எதிரெதிர் குணாம்சம் கொண்டவங்கன்னு இல்லை பொதுவாவே யாரா இருந்தாலும் முதல்ல ஒருத்தங்களை ஒருத்தங்க புரிஞ்சுக்கணும். நல்ல கம்யூனிகேஷன் இருந்தாதான் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கவே முடியும். காதல் திருமணம் பண்ணிக்கிட்ட தம்பதிகள்கிட்ட கூட நல்ல கம்யூனிகேஷன் இருக்கிறதில்லை. என் கணவருக்கும் எனக்கும் நல்ல கம்யூனிகேஷன் இருக்கும். நாங்க எல்லாத்தை பத்தியும் பேசுவோம். ஒருத்தருக்கொருத்தர் நேரம் ஒதுக்குவோம். இந்த கம்யூனிகேஷன்ல கிடைக்கிற தெளிவுதான் உறவை வலுப்படுத்துதுன்னு நினைக்கிறேன்.

சில விஷயங்களில் ரெண்டு பேருமே ஒருத்தங்களுக்காக ஒருத்தங்க மாத்திக்கிறதுல தப்பே இல்லை. நான் அவ்ளோ சீக்கிரம் கோபப்பட மாட்டேன், ஆனா கோபம் வந்துச்சுன்னா அவ்வளவு சீக்கிரத்துல போகாது. அவரு உடனுக்குடனே கோபப்படுவாரு அதே வேகத்துல சமாதானமும் ஆயிடுவாரு. சண்டை வர்றப்ப யாரோ ஒருத்தர் இறங்கி வரணும். அவர் இறங்கி வரட்டும்னு ஈகோவோட நான் நிற்குறதும், அதே மாதிரி அவர் நிக்கிறதுமே தப்புதான். எதிர்துருவத்தின் மேலதான் ஈர்ப்பு இருக்கும்னு சொன்னாலுமே கூட, இந்த மாதிரியான விஷயங்கள் இருந்தால்தான் அந்த உறவே நிலைக்கும்."

மிதுன், உதவி இயக்குநர்: ``திருமண உறவுல கணவன் - மனைவிக்கு இடையே வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும். Opposite poles attract each other-னு சொன்னாலுமே கூட அந்த உறவு நிலைக்கிறதுக்கான நியாயத்தோட ரெண்டு பேருமே இருக்கணும். அந்த எதிர் துருவத்தை நாம கண்டடையுறதுக்கான சாத்தியங்கள் குறைவுதான். நம்ம குணாம்சத்தை பத்தியே நமக்கு முழுசா தெரியாதப்போ அடுத்தவங்க குணாம்சத்தை வெளிப்படையா பார்த்தெல்லாம் முடிவெடுக்க முடியாது. அவ்வளவு கான்ஷயஸோடவெல்லாம் காதலும் வராது. ஒருத்தரையொருத்தர் பிடிச்சு திருமணம் பண்ணிக்கிட்டா அந்த உறவுக்கு ஏத்த மாதிரி ரெண்டு பேருமே தங்களை மாத்திக்கிட்டு அந்த உறவுக்குள்ள பொருத்திக்கணும்.

மிதுன்

நான் கோபக்காரன், எனக்குப் பொறுமையான மனைவி வேணும்னெல்லாம் தேட முடியாது. ரெண்டு பேரும் திறந்த உரையாடல் மூலமா பேசி அந்த மாற்றத்தை நிகழ்த்தணும். வெளிய இருந்து பார்க்குறப்போ என் மனைவியும் நானும் எதிரெதிர் குணாம்சம் கொண்டவர்கள்ங்குற மாதிரி தெரிஞ்சாலுமே கூட, எங்களோட பார்வை, ஆர்வம், ஈடுபாடு எல்லாம் ஒன்னா இருக்கும். ஒருத்தரை ஒருத்தர் சப்போர்ட் பண்ணி வளர்த்திக்கிட்டுப் போகணும். நான் கோபப்படுறப்போ அவங்க சாந்தமாவும், அவங்க கோபப்படுறப்ப நான் சாந்தமாவும் ஒரு பிரச்னையை அணுகினால்தான், அது சமத்துவம். அதுதான் உறவு நிலைச்சிருக்கத் தேவை".



source https://www.vikatan.com/lifestyle/relationship/do-opposites-stick-together-open-ah-pesalama-5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக