Ad

வெள்ளி, 9 டிசம்பர், 2022

`டாஸ்கை முடித்தால் உடனுக்குடன் பணம்’ - மேலாளரை நம்பவைத்து ரூ.5 லட்சம் மோசடி... ஒருவர் கைது!

திருப்பூர் மாவட்டம், பொல்லிக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யாசர் அராபத் (33). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் நண்பர்களான திருப்பூரைச் சேர்ந்த சபரீசன், மணிகண்டபிரபு இருவரும், தாங்கள் இருவரும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளதாகவும், மிகவும் பாதுகாப்பானது என யாசர் அராபத்திடம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் நாள்தோறும் கொடுக்கும் டாஸ்குகளை முடித்தால் நமக்கு கமிஷன் பணம் கொட்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மோசடி

இதை நம்பி முதலில் ரூ. 73 ஆயிரத்து 500 யாசர் அராபத் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். அடுத்ததாக, பல்வேறு தவணைகளில் ரூ. 4 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். கமிஷன் கிடைக்கும் என்று நம்பி காத்திருந்த யாசர் அராபத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுதொடர்பாக, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திடம் கேட்டபோது, ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் செலுத்தினால், கமிஷனுடன் உடனடியாக திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் என மொத்தமாக ரூ. 5.39 லட்சத்தை யாசர் அராபத் செலுத்தியும், கமிஷன் தொகை வரவில்லை.

சித்தரிப்பு படம்

இதுகுறித்து கேட்டதற்கு மேலும், ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்தை செலுத்துமாறு கேட்டதால், சந்தேகமடைந்த யாசர் அராபத், திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், செல்போன் எண்கள், வங்கிக் கணக்கு விவரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில், மோசடியில் ஈடுபட்டது ராணிப்பேட்டை வசந்தம் அவென்யூவை சேர்ந்த என்.சந்தோஷ்குமார் (54) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். யாசர் அராபத்தின் நண்பர்களான சபரீசன், மணிகண்டபிரபுவுக்கும் பணம் கொடுக்காமல் சந்தோஷ்குமார் ஏமாற்றி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.



source https://www.vikatan.com/news/crime/tirupur-online-cheating-one-person-arrest-by-cyber-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக