Ad

வெள்ளி, 2 டிசம்பர், 2022

ஒன் பை டூ: “ஆளுநர் பதவியே காலாவதியான பதவிதான்” என்ற கனிமொழி கருணாநிதியின் கருத்து?

சி.வி.எம்.பி.எழிலரசன், சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க

``உண்மைநிலையைச் சொல்லியிருக்கிறார். சட்டங்களையும் மசோதாக்களையும் காலாவதியாக்கும் செயல்பாடுகளால் தமிழக ஆளுநர் தன் பொறுப்பை மீறியிருக்கிறார். அதைத்தான் கனிமொழி சொல்லியிருக்கிறார். மாநில அரசின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர் ஆளுநர். அவர் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் அரசியலமைப்புக்கு எதிராகப் பேசுகிறார். தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்படுகிறார். ஆளுநரைப்போல அல்லாமல் ஓர் அரசியல்வாதியைப்போல நடந்துகொள்கிறார். நாடாளுமன்றத்துக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை சட்டமன்றத்துக்கு இருக்கிறது என்கிறது அரசியல் சாசனம். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒரு சட்டத்தை நிறைவேற்றி, அதை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கிறோம். அவரோ, அனுப்பப்படும் மசோதாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஆன்லைன் சூதாட்ட மசோதாவை வேண்டுமென்றே காலாவதியாக்கி முடக்கிப்போட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இனி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும். அறிஞர் அண்ணா ஆளுநர் குறித்துப் பேசிய வாசகம் இன்றைய தமிழக ஆளுநருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.’’

சி.வி.எம்.பி.எழிலரசன், கரு.நாகராஜன்

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர். பா.ஜ.க

``கனிமொழி கைதட்டலுக்காகப் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் அன்றைய ஆளும் அரசுக்கு எதிராக எத்தனை முறை ஆளுநரைச் சந்தித்திருக்கிறார்கள்... அப்போது மட்டும் ஆளுநர் தேவைப்பட்டாரா... அதே தி.மு.க-வினர் ஆளும் அரசாக மாறியதும், `ஆளுநர் பதவி காலாவதியான பதவி, ஆளுநர் தேவையில்லை’ என்கிறார்கள். தி.மு.க-வைப் பொறுத்தவரை ஆளுநர் என்பவர் வெறும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைபோல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்றைய தமிழக ஆளுநர் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போடுபவர் கிடையாது. மக்களுக்குத் தேவையான எந்த மசோதாவும் காலதாமதம் செய்யாமல் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்ட மசோதா விவகாரத்தில் கால தாமதம் ஆனது உண்மைதான். ஆனால், அதற்கான காரணம் இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் நிலை என்ன.. என்ன நடக்கிறது என்பதையெல்லாம் ஆய்வு நடத்தி ஆளுநர் ஒரு முடிவுக்கு வர வேண்டாமா... தமிழக அரசு ஒரு விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டால், `காலாவதியான முதல்வர்’ என்று சொல்வது சரியாக இருக்குமா... இதெல்லாம் இவர்களின் இரட்டை வேடம்.’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-kanimozhi-comments-on-governor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக