Ad

வெள்ளி, 2 டிசம்பர், 2022

கட்டா குஸ்தி விமர்சனம்: குஸ்தி போடும் மனைவியும் தெனாவட்டு கணவனும் - ஜெயிக்கிறதா இந்த கலாட்டா சினிமா?

கணவனும் மனைவியும் போடும் சண்டையில் யார் வெற்றியாளர் என்பதை காமெடி ட்ரீட்மென்ட்டும், மருந்துக்குப் பெண்ணியமும் கலந்து தந்தால் அதுதான் `கட்டா குஸ்தி'.

கேரள மாநிலம் பாலக்காட்டில், கட்டா குஸ்தி வீராங்கனையான கீர்த்திக்கு (ஐஸ்வர்யா லெட்சுமி) தீவிரமாக மாப்பிள்ளைப் பார்த்துக்கொண்டிருக்கிறது அவரின் குடும்பம். குஸ்தி வீராங்கனை என்பதால், வரும் சம்பந்தங்கள் எல்லாம் தள்ளிப் போகின்றன. மறுபுறம், பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராவுக்கும் (விஷ்ணு விஷால்) பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோரை இழந்த வீராவுக்கு, அவருடைய மாமாவான கருணாஸே ஒரே சொந்தம். சில பொய்யைச் சொல்லி, இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார் ஐஸ்வர்யாவின் சித்தப்பா முனீஸ்காந்த். இந்தப் பொய்கள் தெரிய வரும்போது, இருவரும் போடும் கட்டா குஸ்தியைத் திரைப்படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

கட்டா குஸ்தி விமர்சனம்

சொந்தமாகப் பெரிய வீடு, தென்னந்தோப்பு எனச் சொத்துக்கள் இருப்பதால் தெனாவட்டாகத் திரிகிறார் விஷ்ணு விஷால். தனக்கு வரும் மனைவி நீண்ட கூந்தலுடனும், தனக்கு அடங்கிப் போகும் படியாகவும், குறிப்பாகப் படிக்காத பெண்ணாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் அவரின் கதாபாத்திரம் 80களின் தமிழ் சினிமா நாயகர்களை நினைவூட்டுகிறது. ஆனால், அந்தக் கதாபாத்திரத்தைச் சமகாலத்துக்கு ஏற்றார் போல அடுக்கடுக்கான காட்சிகளால் கலாய்த்து எடுத்திருக்கிறார் இயக்குநர். குறிப்பாக அந்த இன்டர்வெல் பிளாக்கும், அதன் பிறகு வரும் காட்சிகளும் சிறப்பான கலாட்டா. வீராவாக வரும் விஷ்ணு விஷால், ஆக்‌ஷன், காமெடி எனத் தனது சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஆனால், கீர்த்தியாக வரும் ஐஸ்வர்யா லெட்சுமிதான் அவரையும் ஓவர்டேக் செய்து அதகளம் செய்திருக்கிறார். குஸ்தி போடுவது, தன்னுடைய கனவை நோக்கி ஓடுவது, அது தகரும்போது உடைவது, பொய்களை மறைக்கப் போடும் நாடகங்களில் நடக்கும் காமெடி, இடைவேளையில் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரம் எனப் படம் முழுவதுமே, ஐஸ்வர்யா லெட்சுமியின் ஆட்டம்தான்.

முதல் பாதியில், வீராவின் மாமாவாக வரும் கருணாஸும், நண்பராக வரும் காளி வெங்கட்டும் காமெடியில் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் கதையை நகர்த்த உதவியிருக்கிறார்கள். கணவன் - மனைவி உறவு குறித்து, இருவரும் விவரிக்கும் காட்சிகளும், அதற்கு கவுன்ட்டராக பெண்கள் அடிக்கும் பதில்களும் காமெடி குஸ்தி. ஐஸ்வர்யா லெட்சுமியின் சித்தப்பாவாக வரும் முனீஸ்காந்தும் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். காமெடியில் மட்டுமல்ல, உருக்கமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

கட்டா குஸ்தி விமர்சனம்
இரண்டு வில்லன்கள் இருந்தாலும், அவர்களுக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. திரைக்கதையில் ஒட்டாமலேயே வந்து போகிறார்கள். அதிலும் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் கோச் என்றாலே பாலியல் ரீதியாகச் சீண்டுபவராகவும், பணத்திற்காக எதையும் செய்பவராகவும் இன்னும் எத்தனை படங்களுக்குக் காண்பிப்பார்களோ?!

ஐஸ்வர்யா லெட்சுமியின் அப்பாவாக வரும் கஜராஜ், அம்மாவாக வரும் ஶ்ரீஜா ரவி 'சீரியல்' கதாபாத்திரங்களாகவே வந்துபோகிறார்கள். அதிலும் ஸ்ரீஜா ரவி, பெண் எப்படியிருக்க வேண்டும் என்று பேசும் அட்வைஸ் காட்சிகள் எந்தக் காலத்தில் எழுதப்பட்டவையோ! சில காட்சிகளே வந்தாலும், கருணாஸின் மனைவியாக வரும் கதாபாத்திரம் மனதில் நிற்கும்படியாக இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லி 'பத்ரி' பாக்ஸிங் ரெஃபரன்ஸ் வசனத்தில் மட்டும் பலமான கைதட்டல் பெறுகிறார்.

பொள்ளாச்சி, தொண்டாமுத்தூரில் நடைபெறும் கதையில் ஏன் மதுரை வட்டார வழக்கு, சிறைக்குச் சென்ற மாமா குறித்து விஷ்ணு விஷால் கண்டுகொள்ளாதது ஏன், விஷ்ணு விஷால் மீது ஐஸ்வர்யா லெட்சுமிக்குக் காதல் வரக் காரணம் என்ன... எனத் திரைக்கதையில் லாஜிக் ஓட்டைகள் எக்கச்சக்கம். அவற்றை ஒன்லைன் காமெடிகளால் சரிக்கட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், ஸ்போர்ட்ஸ் டிராமா என்ற பெயரில் இன்னும் எத்தனை தமிழ்ப் படங்கள் சம்பந்தப்பட்ட விளையாட்டுகளைக் காவு வாங்கும் என்பது தெரியவில்லை. "அவன் ரூல்ஸ் மீறி அடிக்கிறான் சார்" என்று ஒருவர் லாஜிக்குடன் கேள்வி கேட்க, "அதனால என்ன, மக்கள் ரசிக்குறாங்க பாருங்க" என்று வசனம் வைத்துச் சமாளிக்க முயல்வதெல்லாம்... நோ கமென்ட்ஸ்! பாலக்காடு ரெஸ்ட்லிங் அகாடமி பாவம் சாரே!

கட்டா குஸ்தி விமர்சனம்

அதேபோல காமெடி யுக்தி இறுதி காட்சிகளில் சுத்தமாகக் கைகொடுக்கவில்லை. எளிதில் யூகிக்கும்படியான காட்சிகள், சீரியஸான காட்சிகளுக்கு 'காமெடி' வசனங்கள் எனப் படம் அங்கே சறுக்குகிறது. ஆணும் பெண்ணும் சமம்தான் எனப் படம் சொல்ல வந்தாலும், க்ளைமாக்ஸில் கதாநாயகி கதாநாயகனை வெல்லும் தருணத்தைத் தவிர்த்தது ஏன் என்ற கேள்வி எட்டிப் பார்க்கவே செய்கிறது. "உன் புருஷன் உன்கூட சண்டை போடாமயே ஜெயிச்சுட்டான்" என்று ஐஸ்வர்யாவின் அம்மா சொல்லும் வசனம், அதுவரை பேசிய பெண்ணிய விஷயங்களை உடைத்து, இது ஒரு ஆண் மைய சினிமா என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பெண் உரிமை, பெண்ணியம் குறித்தான ஓர் உரையாடலை ஒரு கமெர்ஷியல் சினிமாவில் புகுத்தியது ஆரோக்கியமான விஷயம்தான் என்றாலும், பிற்போக்கான கதாபாத்திரங்களின் பிற்போக்கான எண்ணங்களுக்குப் பாடம் புகட்டாமல், கணவன் - மனைவி சண்டையை மட்டும் கவனத்தில் கொள்ளும் அந்த க்ளைமாக்ஸ் பலவீனமே! "இங்கு ஒரு பெண் விளையாட்டில் சாதிக்க, முதலில் அவள் குடும்பத்தை வென்றாக வேண்டும்" என்பது போன்ற வசனங்கள் மட்டும் ஆறுதல்.

கேரள நிலப்பகுதி, பொள்ளாச்சி நிலப்பகுதி, குஸ்தி ஆடுகளம் என ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா படத்திற்கு அழகைச் சேர்த்திருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் மூன்று பாடல்களும் தொந்தரவு இல்லாமல் வந்துபோகிறது என்றாலும், 'மைக் டைசன்' பாடல் தனித்துத் தெரிகிறது. பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்கிறார். பிரசன்னா ஜி.கே-வின் படத்தொகுப்பு ஆக்‌ஷன் காட்சிகளில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

கட்டா குஸ்தி விமர்சனம்
பழகிப் போன கதைதான் என்றாலும், அதில் குஸ்தியைப் புகுத்தி, பெண்களின் குரலைப் பிரதிபலிக்க முயலும் படமாக `கட்டா குஸ்தி'யைத் தந்திருக்கிறார்கள். பெண்ணியம் சார்ந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி, படத்திலிருக்கும் ஆண் மைய வாதத்தை முற்றிலுமாக விலக்கியிருந்தால் இந்த குஸ்திக்கு இன்னும் பலமாகக் கைதட்டி ஆர்ப்பரித்திருக்கலாம்.


source https://cinema.vikatan.com/movie-review/vishnu-vishal-and-aishwarya-lekshmi-sports-drama-gatta-kusthi-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக