Ad

செவ்வாய், 6 டிசம்பர், 2022

ஒன் பை டூ: பிரதமரின் தமிழக வருகை பாதுகாப்பு விவகாரம்... அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

வினோஜ் பி செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க

``பிரதமர் மோடி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவரின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியது மாநில அரசின் பொறுப்பு. தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த ஒரு சம்பவத்தால் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்ட களங்கம் பல ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை நீங்கவே இல்லை. தமிழகத்தின் மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பு காரணமாக, பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். அப்போதெல்லாம், பிரதமரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரதமருக்குத் தேவையான பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது தமிழக காவல்துறையின் கடமை. பிரதமருக்கு எஸ்.பி.ஜி குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உண்மைதான். ஆனால் அவர்கள் `இந்த இடத்தில், இந்த வழியில் பாதுகாப்புக் கருவிகளைப் பொருத்தங்கள்’ என்று சொல்வார்கள். அதை முறையாக, தமிழக காவல்துறை செய்ய வேண்டும். ஆனால், பல இடங்களில் பழுதடைந்த கருவிகளைப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு துறை, பிரதமர் பாதுகாப்பில் அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க சார்பில் ஒரு குழுவாக ஆளுநரைச் சந்தித்து மனு வழங்கியிருக்கிறோம். இதில் அரசியல் செய்யவேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது!’’

வினோஜ் பி செல்வம், சிவ.ஜெயராஜ்

சிவ.ஜெயராஜ், செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசியலைவிட அசிங்கம் செய்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக பா.ஜ.க தலைவராக எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால், அண்ணாமலையைப்போல மிகக் கேவலமாக அரசியல் செய்யும் அரசியல்வாதியை இதுவரை யாரும் கண்டதில்லை. பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்று மூன்று மாதங்கள் ஆகின்றன. இதுவரை பாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும், குளறுபடி இருந்ததாகவும் உள்துறை அமைச்சகமும், பிரதமர் பாதுகாப்பு அலுவலகமும் எந்த அறிக்கையும் அறிவிப்பும் வெளியிடவில்லை. தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அண்ணாமலை தொடர்ந்து ஆதாரமற்ற பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஓர் அமைச்சர் எட்டு முறை அனுமதி கேட்ட பிறகே ஆளுநரைச் சந்திக்க அனுமதி கிடைக்கிறது. ஆனால், அண்ணாமலை ஆளுநரை மிகச் சுலபமாகச் சந்திக்கிறார். தனது அரசியல் விளம்பரத்துக்காகவும் தற்போது இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார் அண்ணாமலை. பிரதமர் வருகை சமயத்தில் பாதுகாப்பு விவகாரத்தில் நேரடியாகத் தமிழக முதல்வர் முழு கவனம் செலுத்தினார். தமிழக அரசும், காவல்துறையும் மிகச் சிறப்பான பாதுகாப்பை உறுதிசெய்திருந்தன!’’



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-modi-visit-protection-issue-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக