Ad

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இமாசலப் பிரதேசம்: ஆட்சியை அகற்றிய ஆப்பிள்!

இமாசலப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 68 இடங்களில் காங்கிரஸ் 40 இடங்களை வென்றுள்ளது. பா.ஜ.க 25 இடங்களிலும் சுயேச்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன. இமாசலப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய முதல்வரை காங்கிரஸ் கட்சி இன்று முடிவு செய்ய உள்ளது.

ஆப்பிள் விவசாயம்

1985-ம் ஆண்டுக்குப் பிறகு இமாசலப் பிரதேசத்தில் பா.ஜ.க,  காங்கிரஸ் என மாறி மாறி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், இந்த முறை பா.ஜ.க படுதோல்வி அடையக் காரணம், ஆப்பிள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் ஆப்பிள் விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடம் ஏற்பட்ட அதிருப்தியே ஆட்சியை இழக்க முக்கிய காரணமாக விளங்குகிறது.

இமாசலப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் ஆப்பிள் விவசாயமும் அதைச் சார்ந்த தொழிலும்தான் முக்கியமாக விளங்குகிறது, ஆப்பிள் சாகுபடி ரூ.5,000 கோடி வருவாயை இமாசலப் பிரதேசத்துக்கு ஈட்டித் தந்து மாநிலத்தின் மொத்த வருவாயில் 13.5% பங்களிப்பை செய்கிறது.

ஆப்பிள்

இமாசலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபைத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஆப்பிள் விவசாயமே முக்கியத் தொழிலாகும். மற்ற தொகுதிகளிலும் ஆப்பிள் சாகுபடியும் அதைச் சார்ந்த தொழில்களும் வருவாயில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல தொகுதிகளில் ஆப்பிள் விற்பனையாளர்கள் அதிகம். இவர்களே இமாசலப் பிரதேச தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். எனவே, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரு கட்சிகளும் ஆப்பிள் விவசாயிகளை பாதிக்காத வகையில் நடந்துகொள்வது வழக்கம்.

இமாசலப் பிரதேசத்தில் பா.ஜ.க முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் ஆட்சி நடந்தபோது, அட்டைப் பெட்டிகளில் வைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் ஆப்பிள்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அதிகரித்தது. அத்துடன் எம்.ஐ.எஸ்ஸில் வழங்கிய ஆப்பிளுக்கான நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை என்பதும் விவசாயிகளுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது.

அதானி குழுமத்தின் ‛அதானி அக்ரி பிரெஷ்' நிறுவனம்தான் இமாசலப் பிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகளிடம் அதிக அளவு ஆப்பிளை கொள்முதல் செய்து வந்தது.

இந்நிறுவனம் வழங்கிய வாக்குறுதிகள் படி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு ஆப்பிளை கொள்முதல் செய்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆப்பிள் விவசாயம்

இத்தகைய காரணங்களால் ஆப்பிள் விவசாயிகள் வீதிகளில் இறங்கி கடுமையாகப் போராடினர்.

இந்நிலையில், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், ``மாநிலத்தில் ஆப்பிள் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு தோட்டக்கலை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் பரிந்துரைப்பதன் அடிப்படையில் ஆப்பிளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். அது அதானியின் நிறுவனமாக இருந்தாலும் சரி, இந்த ஆணையம் உறுதி செய்யப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் படி ஆப்பிளை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும்'' என்று அறிவித்தது.

சுதாரித்துக்கொண்ட பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில், ``மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போது அட்டைப் பெட்டிகளில் விற்பனையாகும் ஆப்பிள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்படும்" என அறிவித்தது. ஆனால், பா.ஜ.க-வின் கடைசி நேர இந்த அறிவிப்பை விவசாயிகள் நம்பவில்லை. மொத்தத்தில் பா.ஜ.க ஆட்சியை இழக்க ஆப்பிள் மீதான ஜிஎஸ்டி விதிப்பும், விவசாயிகளின் அதிருப்தியும் காரணமாகிவிட்டது.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/himachal-pradesh-apple-removed-the-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக