Ad

திங்கள், 12 டிசம்பர், 2022

சேலம்: அரசு மருத்துவமனைக்குள் கைதிக்கு கஞ்சா, செல்போன் சப்ளை செய்த போலீஸார்... தீவிர விசாரணை!

சேலம், அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சை பெற பலத்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஸ்ட்ராங் ரூம் எனும் சிகிச்சை பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறையிலிருந்து, சென்னையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிறுநீரக பாதிப்பிற்காக சிகிச்சை பெற வந்தார். இவர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டதாக தெரிகிறது. அங்கே அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எப்போதும் ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பு பணியில் சேலம் அரசு மருத்துவமனை போலீஸார் மற்றும் மாநகர ஆயுதப்படை போலீஸார், சிறை காவலர்கள் இருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் மாநகர ஆயுதப்படையை சேர்ந்த ஏட்டு மணி உள்ளிட்ட நான்கு போலீஸார் பணியில் இருந்திருக்கின்றனர். அப்போது கைதிக்கு செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலத்தை ஏட்டு மணி கொடுத்திருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. அந்த கைதி செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.

கஞ்சா

இதையடுத்து, ஸ்ட்ராங் ரூமிற்கு வந்த போலீஸ் உயரதிகாரிகள் கைதியிடமிருந்து செல்போன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த கைதி யாரிடமெல்லாம் பேசினார் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் செல்போன், கஞ்சா சப்ளை செய்த ஏட்டு மணியிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஏட்டு மணி உள்ளிட்ட நான்கு போலீஸாரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்து, மீண்டும் ஆயுதப்படைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா `சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்' என்று உத்தரவிட்டார். அதன் பேரில் சேலம் தெற்கு துணை கமிஷனர் லாவண்யா கைதிக்கு செல்போன், கஞ்சா கொடுத்த ஏட்டு மணி உள்ளிட்ட நான்கு போலீஸாரிடமும் விசாரணையை தொடங்கியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/police-gave-ganjas-cell-phone-to-a-prisoner-in-salem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக