Ad

சனி, 10 டிசம்பர், 2022

“என்னுடைய மாடும் ஆடும் காத்திட்டு இருக்குங்க; பதவி போனாலும் கவலையில்லை!” - அண்ணாமலை

தமிழக பா.ஜ.க., இளைஞரணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க., இளைஞரணி தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா மற்றும் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை, “புவி வெப்பமயமாதல் காரணமாக தமிழகத்தில் அடிக்கடி புயல் போன்ற பாதிப்புகள் வருகின்றன. குஜராத்தில் பேரிடர் மேலாண்மைக்கு என தனியாக கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். அதேபோல தமிழகத்திலும் நிபுணர்களை வைத்து பேரிடர் மேலாண்மைக்கென சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சருக்கு யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்க அதிகாரம் இருக்கிறது. குடும்ப ஆட்சியை முன்னிலைப்படுத்தி தான் தி.மு.க., அரசே இயங்குகிறதென தொடர்ந்து நாம் குற்றச்சாட்டை வைத்து வருகிறோம். அப்படியிருக்க முதலமைச்சரின் மகனை (உதயநிதி ஸ்டாலின்) அவர்கள் அமைச்சராக்கினால், குடும்ப ஆட்சிக்காகத் தான் முதலமைச்சர் வேலை செய்கிறார் என்பது மக்களுடைய கருத்தாக இருக்கும். ஆன்லைன் கேம்ஸ் இளைஞர்களை பெரிதாக பாதிக்கிறது. நாம் எல்லாருமே மொபைல் போனில் அடிக்ட் ஆன தலைமுறையாக இருக்கிறோம். ஜாம்பீஸ் போல் ஆகிவிட்டோம். ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தப்பட வேண்டும். இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய அபாயம் இருக்கிறது என்பது தான் பா.ஜ.க.,வின் தீர்க்கமான கருத்து. ஆனால், கவர்னர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் சி.இ.ஒக்களைச் சந்தித்தது என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது” என்றார்.

அண்ணாமலை

தொடர்ந்து பேசியவர், “தமிழக அமைச்சர்களின் அடுத்தக்கட்ட ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். 2-3 அமைச்சர்களின் ஊழல் விவரங்களை எடுத்திருக்கிறோம். சாமான்ய மனிதன் பேசும் அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பா.ஜ.க., ஆட்சியில் இல்லை. அப்படியிருக்க, தமிழகம், கேரளா, தெலங்கானாவில் மட்டும் தான் ஆளுநரை விமர்சித்து, அரசியலுக்காக பேசி வம்புச் சண்டையாக கொண்டு போகிறார்கள். தார்மீக யுத்தமாகக் கருதி மாநில அரசு கொஞ்சம் கொஞ்சமாக மதுவிலக்கை அமல்படுத்தி முழுவதுமாக மூடட்டும். அதற்கான முன்னெடுப்பை எடுத்தால் முதல் ஆளாக எழுந்து நின்று நான் கை தட்டுவேன்” என்றவரிடம், ‘உங்களுடைய பதவி போகப் போவதாக முதல்வர் சூசகமாக பேசியிருக்கிறாரே’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “முதலமைச்சரால் (மு.க.ஸ்டாலின்) முதலமைச்சராக இல்லையென்றால் வாழ முடியாது. அவரெல்லாம் பல காலமாக ரேஞ்ச் ரோவர் காரில் போனவர். எனக்கு என்னுடைய மாடும் ஆடும் காத்திருக்கு. என்னை புடிச்சிட்டு வந்து கட்டுப்படுத்தி இந்தப் பதவியில உட்கார வச்சிருக்காங்க. நான் தரையில் கூட படுக்குறதுக்கு ரெடி. முதலமைச்சரால் அது முடியாது. அவங்க எல்லாம் பவருக்குப் பழகிட்டாங்க. அதனால பதவி போனாலும் எனக்கு இதப்பத்தி எல்லாம் கவலை கிடையாது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/tamilnadu-bjp-president-annamalai-speech-in-trichy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக