Ad

சனி, 10 டிசம்பர், 2022

பெருந்துறை: கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளிலும் உடைப்பு; 800 ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலில் இரு கரைகளிலும் ஏற்பட்ட திடீர் உடைப்பால் வெளியேறிய நீர் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிரையும், கரும்பு, மஞ்சள் பயிரை மூழ்கடித்ததால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரை கொண்டு ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் முதல் போக பாசனத்துக்குட்பட்ட கீழ்பவானி வாய்க்காலின் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் இரட்டைமடை மதகுகளுக்குட்பட்ட பகிர்மான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்த சில தினங்களிலேயே பெருந்துறை அருகே வாவிக்கடை பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. பின்னர் நசியனூர் பகுதியிலும், கடந்த அக்டோபரில் சத்தியமங்கலம், செண்பகபுதூர் மாரப்பநகர் பகுதியிலும் என 4 இடங்களில் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.

இடதுகரை உடைப்பு வழியாக வெளியேறும் வாய்க்கால் நீர்.

வாய்க்காலின் கரைகள் மண் வாய்க்காலாக இருப்பதால் அடிக்கடி கரைகளில் உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் பெருந்துறை, வாய்க்கால்மேடு பகுதியி்ல் 54-வது மைல் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் வலதுகரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலில் 1,300 கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் நீரின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் உடைப்பு ஏற்பட்டதும் பயங்கர வேகத்துடன் தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. வாய்க்கால் உடைந்தது குறித்து கேள்விப்பட்ட மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். இந்த வாய்க்கால் தண்ணீர் அதிவேகமாக பாய்ந்ததால் அருகாமையி்லுள்ள நல்லாம்பட்டி, முள்ளம்பட்டி வாய்க்காலின் மதகுகள் அடைக்கப்பட்டன. தொடர்ந்து வாய்க்காலில் இருந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில் மாலை 6.15 மணியளவில் இடதுகரை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.

வலதுகரை உடைப்பு வழியாக வெளியேறும் வாய்க்கால் நீர்.

கீழ்பவானி வாய்க்காலை பொறுத்தவரை இடதுகரையில் தான் ஆயக்கட்டு பாசனம் பெறுகிறது. இதனால் அதிகவேகத்துடன் சென்ற தண்ணீர் அப்பகுதியில் பயிரிட்டுள்ள நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை மூழ்கடித்தது. தற்போது வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுக்க சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்களை மூழ்கடித்துள்ளது. எங்கு நோக்கிலும் வெள்ளநீர் சூழ்ந்து விளைநிலங்கள் அனைத்தும் சேதமடைந்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமி கூறுகையில்,
``தற்போது வாய்க்காலில் இருந்து தண்ணீர் வடிந்து செல்ல 5 முதல் 6 மணி நேரம் ஆகக் கூடும். வாய்க்கால் தண்ணீர் வடிந்த பிறகே வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தொடங்க முடியும். தற்போது இடதுகரையில் உள்ள ஆயக்கட்டு பாசனப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் விளை நிலங்களும், வலது கரையில் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

விளைநிலங்களுக்குள் புகுந்த வாய்க்கால் உடைப்பு நீர்.

ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு பின் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இதுவரை 4 முறை வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை வாய்க்கால் உடைப்பு ஏற்படும் போதும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எதிர்பாராத இந்த இடர்பாடு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். வாய்க்காலின் இரு கரைகளிலும் பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக குவிந்ததால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு மக்களை அப்பகுதிக்குள் வர விடாமல் விரட்டியடித்தனர்.

இந்நிலையில் இடதுகரையில் இருந்து விளைநிலங்களின் வழியாக வெளியேறிய தண்ணீர் பாலபாளையம் கிராமத்திற்குள் புகுந்தது. கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த நூற்பாலைக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்தவர்களை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் ஈரோடு, பெருந்துறை தீயணைப்பு நிலையத்தினரும், போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/breakage-in-bhavani-lower-canal-water-flooded-farmlands

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக