Ad

வியாழன், 1 டிசம்பர், 2022

வெற்றித் தலைமுறை! - நான்காம் தலைமுறை கண்ட ஏவி.எம்..!

பிசினஸ் என்பது தராசு போல. அதில் ஏற்ற இறக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால், துணிச்சலான முடிவு, சரியான திட்டமிடல்கள் மூலம் பிசினஸில் சாதித்தவர்கள் ஏராளம். தன்னுடைய வெற்றியை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தும்போது, தனிப்பட்ட ஒருவர் தொடங்கிய தொழில் ஆலமரமாக வளர்ந்து பெயர் சொல்லும் நிறுவனமாக மாறும். அப்படி பிசினஸில் கோலோச்சிய நிறுவனங்களின் தலைமுறை தாண்டிய வெற்றியைத்தான் இந்தத் தொடரில் நாம் காண இருக்கிறோம்.

சென்னை வடபழனியில் சுழன்று கொண்டிருக்கும் ஏவி.எம் உலக உருண்டை சென்னையின் அடையாளங்களில் ஒன்று. ஆனாலும், ஏவி.எம் தொடங்கப்பட்டது காரைக்குடி அருகிலுள்ள தேவகோட்டை ரஸ்தாவில்தான். கீற்றுக் கொட்டகையில் தொடங்கிய ஏவி.எம் ஸ்டூடியோ, ஏவி. மெய்யப்பன் என்ற ஆளுமையால் இன்று பெரும் மரமாக விரிந்து நிற்கிறது. 90 ஆண்டு கால பாரம்பர்யம் கடந்து ஏவி.எம் நிறுவனத்தின் அடுத்தடுத்த தலைமுறை மாற்றம் குறித்த தகவல்களைப் பகிர்கிறார், இந்நிறுவன இணை இயக்குநர் ஏவி.எம் கே.சண்முகம்.

வி.எம்.கே.சண்முகம்

“திரையுலகமே கொண்டாடும் ஆளுமை என் தாத்தா என்பதில் மிகுந்த பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். எத்தனையோ படங்களில் வெற்றிக்குப் பின்பும்கூட தாத்தா மிகவும் எளிமையாக வாழ்ந்தார். கடைநிலை தொழிலாளர்களையும் மதிப்புடன் நடத்துவார். அந்த எளிமை இப்போதும் எங்கள் குடும்பத்தில் தொடர்கிறது.

அவரிடம் இன்னொரு முக்கியமான விஷயம், அவரிடம் இருந்த ஆச்சர்யமான திட்டமிடல். ராஜேஸ்வரி தியேட்டர் தொடங்கப்பட்டபோது நான் சிறுவனாக இருந்தேன். அப்போது என்னை அழைத்து ஒரு பேப்பர் மற்றும் சில அளவுகளைக் கொடுத்து, வட்டம் வரைந்து, கொடுத்திருந்த அளவுகளை பேப்பரில் வெட்ட சொன்னார். வெட்டி முடித்து பிரித்துப் பார்த்தபோது, பேப்பரில் அத்தனை அழகான நட்சத்திரங்களின் வடிவம் இருந்தது. எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த ஒரு நபரால் கணிதம் மற்றும் அளவீடுகளில் எப்படி இவ்வளவு துல்லியமாக இருக்க முடிந்தது என்பதை இப்போதும் வியக்கிறேன். படிப்பு என்பதைத் தாண்டி சின்ன விஷயத்தைக்கூட சரியான திட்டமிடல் செய்ய வேண்டும் என்பதை எங்கள் குடும்பத்துக்குப் போதித்தவர். அந்தத் திட்டமிடல்தான் ஏவி.எம் நிறுவனத்தின் இத்தனை ஆண்டுக்கால பயணத்துக்கு முக்கியமான காரணம்.

அகலகால் வைப்பது அல்லது புது முயற்சிகள் எடுக்காமல் இருப்பது எனப் பெரும்பாலான தொழில்முனைவோர்கள் இந்த இரண்டு தவறு களைச் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஏவி.எம் இரண்டு நிலைகளையும் உடைத்து, சமநிலை கையாண்டு வெற்றிகளை சாத்தியமாக்கியது. ஆரம்பத்தில் ரெக்கார்டிங் கம்பெனியாக தொடங்கப்பட்ட எங்களுடைய தொழில், தயாரிப்பு நிறுவனம், டப்பிங் ஸ்டூடியோ, ரெக் கார்டிங் தியேட்டர், சின்னத்திரை நாடகங்கள் தயாரிப்பு, சவுண்ட் லேப் என அடுத்தடுத்து புது முயற்சிகளைச் செய்துகொண்டே இருந்தது.

அதே நேரம் நிதர்சனம் என்ன, தொழிலுக்கு இது தேவையா என்பதையும் யோசிக்கத் தவறியது இல்லை. கிராபிக்ஸ் பற்றி பெரிய அளவில் தெரியாதபோதே, ‘வேதாள உலகம்’ படத்தில் மந்திரக் காட்சி களை கேமராவை வைத்தே படம் பிடித்தது தொடங்கி, பாடல்களே இல்லாமல், ‘அந்த நாள்’ படத்தை எடுத்தது வரை புது முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்திருக்கிறோம்.

அதற்காக ஏவி.எம் நஷ்டமே சந்திக்காத நிறுவனம் என்பது அர்த்தமில்லை. எத்தனையோ படங்கள் மூலம் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ஏற்ற இறக்கங்களை சமாளித்து, நஷ்டத்தைக் கூடுமானவரை தவிர்த்த நிறுவனம் எங்களு டையதுதான்.

சென்னையில் இயங்கிய ராஜேஸ்வரி தியேட்டரை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். அந்த தியேட்டர் இயங்கிய வரை குறைந்த கட்டணத்தில்தான் டிக்கெட்டு களை விநியோகம் செய்தோம். ஆனால், நஷ்டம் ஏற்படத் தொடங்கும்போது எந்தத் தயக் கமும் இல்லாமல் தியேட்டரை மூடி துணிச்சலான முடிவை ஏவி.எம் எடுத்தது.

அதேபோன்றுதான் சினிமா வுக்கு ஆகும் செலவைக் குறைப் பதற்கான முயற்சியாகத் தொடங் கப்பட்ட ஏவி.எம் ஸ்டூடியோவை இப்போது இருக்கும் டெக்னா லஜிக்கேற்ப அப்டேட் செய்ய லாம் என்று பலர் அறிவுறுத் தினார்கள். ஆனால், இப்போது எல்லா டெக்னாலஜியும் போன் மற்றும் லேப்டாப்பிலேயே கிடைக்கிறது. படம் எடுப்பவர்கள் பெரும்பாலும் ஸ்டூடியோ செட்டப்பை விரும்பு வதில்லை என்பதால், ஸ்டூடியோவை மாற்றி அமைப்ப தால் பெரிய லாபம் கிடைக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்தோம். ஸ்டூடியோ எங்களுடைய அடையாளம்தான். அதற்காக ஆடம்பரமான செலவு களைச் செய்து நஷ்டம் ஏற்பட நாங்கள் விரும்பவில்லை. ஏவி.எம் நிறுவனமாக சினிமா சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். இப்படியான முடிவு எடுக்கும் திறனும் தாத்தாவின் பாடம்தான்.

திரைப்படங்களில் ஏவி.எம் கொடிகட்டி பறந்த தருணம். சினிமா நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தபோது, பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, 1970-ம் ஆண்டு தொடங்கி 1983-ம் ஆண்டு வரை ஏவி.எம் மொத்தமாகத் திரைப்படத் தயாரிப் பில் இருந்து விலகி இருந்தது. அந்த நேரத்தில் ஏவி.எம் நிறுவனம் சவுண்ட் ரெக்கார்டிங்கில் மீண்டும் கவனம் செலுத்தியது. அதே போன்றுதான் சீரியல்களும். கிரியேஷனில் சேனல்களின் தலையீடு அதிகரிக்கத் தொடங்கிய போது, சீரியல்கள் தயாரிப்பை நிறுத்தினோம்.

நாம் எந்தத் தொழில் செய்தாலும் நமக்கு அது மரியாதை தரும் வித மாக இருக்க வேண்டும்; சமூகத்தை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பது தலைமுறையாக நாங்கள் தொடரும் ஒன்று” என்று தங்களுடைய நிறுவனத்தின் துணிச்சலான முடிவுகளைப் பகிர்ந் தவர், தலைமுறை மாற்றங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்.

“எங்கள் தாத்தாவுக்கு நாலு மகன்கள். தாத்தா உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் போதே, ஒவ்வொருவருக்கும் ஒரு பணியை பிரித்துக் கொடுத்துவிட்டார். அந்த வகை யில் பெரியப்பா முருகன் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார். அப்பாவும் முருகன் பெரியப்பாவும் இணைந்து சினிமாவைக் கவனித்துக்கொண்டார்கள். சரவணன் சித்தப்பாவை எல்லாருக்கும் தெரியும்; நடிகர்கள் தேர்வு தொடங்கி, மக்கள் இணைப்பு வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டார். மற்றொரு சித்தப்பா, சினிமா விநியோகம் சார்ந்த பணிகளில் இருந்தார். இரண்டாம் தலைமுறையைப் பொறுத்தவரை, சினிமா சார்ந்த பணிகளிலும், எடிட்டிங் சார்ந்த பணிகளிலும் அதிக கவனம் செலுத்தினார்கள்.

நாங்கள் மூன்றாம் தலைமுறை. எங்கள் தலைமுறையினர் காலத்துக்கேற்ப டெக்னாலஜி சார்ந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். டிஜிட்டல் சார்ந்த எல்லா முயற்சிகளையும் எடுத்திருக்கிறோம். எங்கள் தலை முறையில் நாங்கள் நாலு பேர். தொழில் சார்ந்த பணிகளில் ஆளுக்கொரு பொறுப்பை எடுத்துக்கொண்டோம். கல்வி நிறுவனங்களைக் கவனித்துக்கொள்கிறோம்.

பொதுவாக, தலைமுறை சார்ந்த பிசினஸ் செய்யும்போது அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், ஏவி.எம் பொறுத்தவரை தொழில் சார்ந்த எங்களுடைய கொள்கை ஒன்றே ஒன்றுதான். கருத்துகள் வெவ்வேறாக இருந்தாலும் அவரவர் துறையில் கவனம் செலுத்துவதால், சிக்கல்கள் இல்லை. குடும்பமாக இப்போதும் அதே ஒற்றுமையுடன் இருப்பது எங்களுடைய கூடுதல் வெற்றி.

ஏவி.எம் நிறுவனம் அதன் சினிமா தயாரிப்புப் பணிகளை முழுவதும் நிறுத்திவிட்டதா எனச் சிலர் கேட்கிறார்கள். சினிமா தயாரிப்புப் பணிகளை மாற்றி அமைத்திருக்கிறோம். ஆரம்ப காலத்தில், தியேட்டரில் 100 நாள் ஓடிய படங்களின் எண்ணிக்கை அதிகம். இப்போதெல்லாம் மக்கள் தியேட்டருக்கு செல்வதே குறைந்துவிட்டது. நடிகர், நடிகைகளின் சம்பள உயர்வு, டெக்னாலஜி விலை ஏற்றம் போன்றவை நாம் எதிர்பார்த்த லாபத்தை நமக்குத் தருவதில்லை. அதனால் காலத்துக்கு ஏற்றவாறு ஓ.டி.டி-யில் எங்கள் பயணத்தைத் தொடங்க உள்ளோம். என் சகோதரரின் மகள்கள் ஓ.டி.டி-யில் பயணத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். அதன்படி பார்த்தால், ஏ.வி.எம் நிறுவனத்திலிருந்து நான்காம் தலை முறையினரும் வந்துவிட்டனர். மற்றவர்கள் திட்டமிடலில் இருக்கிறோம். காலத்துக்குத் தகுந்த மாறுதல்களுடன் இந்த நிறுவனம் இன்னும் பல தலைமுறைகளைக் கடக்கும்’’ என்று விடை பெற்றார்.

காலத்தின் தேவைக்கேற்ப மாறும் ஏவி.எம் இன்னும் பல தலைமுறை தாண்டி வளரும்!

(தலைமுறை தொடரும்)



source https://www.vikatan.com/business/news/avm-success-stories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக