Ad

திங்கள், 5 டிசம்பர், 2022

`வீடுகளில் விரிசல்; நிலத்தடி நீர் பாதிப்பு' - கல் குவாரிக்கு எதிராக திரண்ட 7 கிராம மக்கள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பிரிதி கிராமம், இளையாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கிவருகிறது. இந்த கல் குவாரியானது, 14 ஏக்கர் நிலத்தில் இயங்கிவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த கல் குவாரியை எடப்பாடியைச் சேர்ந்தவர் நடத்திவருவதாக தெரிகிறது. இந்த கல் குவாரியில், கடந்த ஒரு மாத காலமாக அங்குள்ள கற்களை வெடிகள் வைத்தும், கெமிக்கல் பயன்படுத்தியும் எடுத்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த பகுதி, ஊர் மக்கள், பா.ஜ.க தெற்கு ஒன்றிய தலைவர் சசி தேவி தலைமையில், 700 க்கும் மேற்பட்டோர் குவாரியை முற்றுகை இடச் சென்றனர்.

குவாரியை முற்றுகையிட்ட மக்கள்

ஆனால், அங்கு டிப்பர், லாரி கல்லுடைக்கும் இயந்திரங்கள் என்று எதுவும் இல்லாமல், 300-மீட்டர் அளவிற்கு நிலம் தோண்டப்பட்டு, கற்கள் உடைக்கப்பட்டு மட்டும் ருந்தது. இந்தப் பகுதியில் கிரானைட் கற்கள் எடுப்பதால், சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, வீடுகளில் விரிசல் விடும் சூழல் ஏற்படும் என்று ஊர் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர், பன்னீர் குத்திபாளையம் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, அங்கு இருந்த மக்கள் கூறும்போது, ``இந்தக் கல் குவாரியில் வெடி வைப்பதால், அருகில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படுகிறது. கெமிக்கல் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் பயிர்கள் வாடி விடுகிறது. இதே போல, சுத்தியுள்ள 10 கிலோமீட்டர் அருகிலுள்ள சித்தம் பூண்டி என்ற கிராமத்தில் குவாரிகள் அமைத்து, அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிராம மக்கள் நீர் இன்றி தவித்து வருகின்றனர். இதனால், விவசாய நிலங்கள் பாழடைந்து விட்டது. அதே நிலை இங்கு ஏற்படுவதற்கு முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய வளம் நிறைந்த இந்த கிராமப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருவதால், இந்த குவாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குவாரியை முற்றுகையிட்ட மக்கள்

இந்த பகுதியில் குவாரி அமைக்க தடை கோரி பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும், வட்டாட்சியரிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஊர் நலன் கருதி விவசாய பகுதியாக உள்ள கிராமத்தில் குவாரி அமைக்க தடை செய்ய அரசு உத்தரவிட வேண்டும். இல்லை என்றால், தொடர்ந்து குவாரிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்" என்றனர். குவாரியை ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட திரண்டதால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.



source https://www.vikatan.com/news/tamilnadu/namakkal-people-protest-againsr-stone-quarry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக