Ad

வியாழன், 10 நவம்பர், 2022

``தொடர்ந்து மழை பெய்கிறது; இது நம்ம ராசி, உங்க ராசி" - முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, ஈரோட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை மாலை வருகை தந்தார்.

வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இத்திருமண விழாவுக்கு தலைமை வகித்தார். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ``எனது இல்லத் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கவில்லை. மக்களவைத் தேர்தல் நிதியாக முதல் நபராக ரூ.5,55,555 ஐ முதல்வரிடம் வழங்குகிறேன்” என்றார்.

 
முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசுகையில்,
``திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் மோடியுடன் நானும் பங்கேற்க வேண்டியிருப்பதால், இன்றைய தினமே, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். நான் திமுக இளைஞரணியில் இருந்தபோது அதன்  வளர்ச்சிக்காக சுற்றுப்பயணம் செய்தபோதெல்லாம், ஈரோடு அமைப்பாளராக இருந்த எவரெஸ்ட் கணேசன், கொங்கு மாவட்டங்களில் என்னை வரவேற்று, எனக்கு துணையாக இருந்தவர். அவரின் தம்பிகளில் ஒருவராக செயல்பட்ட செந்தில்குமார், முரண்டு பிடிக்கும் சுபாவம் கொண்டவர். விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தான் நினைத்ததைச் செய்ய வேண்டும் என நினைப்பவர். இந்த நிகழ்ச்ச்சிக்கு ஒப்புக்காகத்தான் என்னை தேதி கேட்டார். அவர் கட்டாயப்படுத்தாவிட்டாலும், மழையையும், எனது உடல்நல பாதிப்பு குறித்தும் கவலைப்படாமல் இந்தத் திருமணத்தில் பங்கேற்றுள்ளேன்.

வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றும் ஸ்டாலின்.

இங்கு வந்ததற்கு பலனாக கட்சிக்கு ஐந்து லட்சம் நிதியாக கிடைத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முதல்நபராக தேர்தல் நிதியை வழங்கியுள்ளார். அவர் கைராசிப்படி, நாளை முதல் தேர்தல் நிதி குவியப்போகிறது. திமுக ஆட்சி அமைந்தபோது, கொரோனா என்னும் கொடிய தொற்றுநோய் பாதிப்பைச் சந்தித்தோம். அதில் இருந்து மீண்டபோது, தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தொடர் மழை பெய்தது. நான் 1996-ம் ஆண்டு சென்னை மேயராக பொறுப்பேற்றதற்கு அடுத்த நாளில் இருந்து சென்னையில் தொடர்ந்து 10 நாள்களாக  தொடர் மழை பெய்தது. அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, மழை பாதிப்பை பார்வையிட்டபோது, ‘சென்னையில் ஸ்டாலின் மேயரானது முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது’ என்று கூறினார். அதேபோல இப்போதும் தொடர்ந்து மழை பெய்கிறது. நம்ம அதிர்ஷ்டத்தால் குடிநீர் பஞ்சமே ஏற்படாது. இது நம்முடைய ராசி. வாக்களித்த உங்களின் ராசி.

செந்திலின் தந்தை 1977-ல் திமுக வார்டு செயலாளராக இருந்தவர். அவரைத் தொடர்ந்து செந்தில் 1980-81இல் இளைஞரணி உறுப்பினராகச் சேர்ந்து, வார்டு செயலாளர், மாணவரணி, மாவட்ட பொருளாளர் என படிப்படியாக பதவிகளை வகித்து தற்போது மாவட்ட துணைச் செயலாளராக உள்ளார். நாளை அவருக்கு இதைவிட பெரிய பொறுப்புகள் அவருக்கு வரும். வர வேண்டும். படிப்படியாக வளர்ந்து சிறந்த செயல்வீரராக விளங்கி வருகிறார்.

மணமக்களுக்கு மோதிரம் அளிக்கும் ஸ்டாலின்.

கருணாநிதியின் குருகுலமாக விளங்கும் ஈரோட்டில் மூன்று இடங்களில் கருணாநிதிக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பெரியார் மண் என்பதால் 300 சிலைகள் கூட விரைவில் வைக்கலாம். முன்பெல்லாம் சீர்திருத்த திருமணம், சுயமரியாதை உணர்வோடு நடந்தால், அதனை கேலியும், கிண்டலும் செய்து கொச்சைப்படுத்துவார்கள். ஆனால், இன்றைய நாளில் சீர்திருத்தத் திருமணம் இல்லை என்றால்தான் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். 1967-இல் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றபோது, சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று உத்தரவிட்டதுதான் அதற்கு காரணம். அதன்பிறகு இன்று பல இடங்களில் சீர்திருத்த திருமணங்கள் பரவலாக நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்வதால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. குடிநீர் பஞ்சமில்லாத சுபிட்சமான நிலையை ஏற்படுத்தியுள்ளோம். நாம் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். இந்த ஆட்சிக்கு பக்கபலமாக நீங்கள் இருக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/mkstalin-speech-in-erode-marriage-function-about-rain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக