Ad

வியாழன், 10 நவம்பர், 2022

வேலூர் சி.எம்.சி `ராகிங்’ விவகாரம் - மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு!

வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி, பாகாயம் பகுதியில் இருக்கிறது. இந்த விடுதியில் தங்கியிருக்கும் ஜூனியர் மாணவர்கள் பலரையும் உள்ளாடையுடன் விடுதி வளாகத்தைச் சுற்றிவரச் செய்த சீனியர் மாணவர்களின் ‘ராகிங்’ வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதில், சீனியர் மாணவர்கள் செய்யும் பல அபத்தமான செயல்களும் பதிவாகியிருக்கின்றன. பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர்கள் தங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், சி.எம்.சி ராகிங் தடுப்பு கமிட்டிக்கு புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அதில், சீனியர் மாணவர்களால் தங்களுக்கு நேரும் உடல்ரீதியான கொடுமைகளையும் அவர்கள் விவரித்திருந்தனர்.

ராகிங் காட்சி

இதையடுத்து, சீனியர் மாணவர்களிடம் ராகிங் தடுப்பு கமிட்டிக்குழுவினர் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். முதற்கட்டமாக, சந்தேகத்தின் அடிப்படையில் 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இது குறித்து சி.எம்.சி கல்லூரி முதல்வர் சாலமன் சதீஷ்குமார், பாகாயம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீதும் ‘தமிழ்நாடு ராகிங் தடுப்புச் சட்டப்பிரிவின்’கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/crime/vellore-cmc-ragging-issue-police-case-against-7-medical-students

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக