Ad

வியாழன், 3 நவம்பர், 2022

கர்நாடகா: கால்வாயிலிருந்து மீட்கப்பட்ட கார்; மாயமான எம்.எல்.ஏ மருமகன் உடல், அழுகிய நிலையில் மீட்பு

கர்நாடக மாநிலம் ஹொன்னாலி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யா. இவரின் மருமகன் சந்திரசேகர் (25) அக்டோபர் 30-ம் தேதி ஷிவமொக்காவிலிருந்து ஹொன்னாலிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ஆனால், வீட்டிற்கு வரவில்லை. அதைத் தொடர்ந்து அவரின் தந்தை ரமேஷ் தன் மகனை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரைக் கண்டுபிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

மீட்கப்படும் கார்

இந்த நிலையில், தாவங்கரே மாவட்டத்தில் உள்ளதுங்கா கால்வாயில் வெள்ளை நிற எஸ்யூவி கார் இருப்பதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறையினரால் அந்தக் கார், கிரேன் மூலம் கால்வாயில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. அப்போதுதான் இது பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா-வின் மருமகன் சந்திரசேகரின் கார் என்பது தெரியவந்தது. மேலும், அதற்குள் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அது எம்.எல்.ஏ-வின் மருமகன் சந்திரசேகரின் உடல் என்பது உறுதியானது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை," விபத்துக்குப் பிறகு கார் கால்வாயில் விழுந்ததா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.

கர்நாடக காவல்துறை

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்துவோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு எந்த வகையில் உதவி என்றாலும் செய்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/car-of-karnataka-bjp-mlas-missing-nephew-recovered-from-canal-decomposed-body-found-inside

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக