Ad

ஞாயிறு, 13 நவம்பர், 2022

``பேருக்கு கட்டிட்டு பேருந்து நிறுத்தம்'னு போர்டு வெச்சுட்டாங்க!" - குமுறும் கண்டாச்சிபுரம் மக்கள்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் இந்திரா நகர், அம்பேத்கர் நகர் என இரண்டு பேருந்து நிறுத்தங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், ``இரண்டு பேருந்து நிறுத்தங்கள் இருந்தும் என்ன பயன்... இங்குப் பேருந்துகள் நிற்பதே கிடையாது. சாலையிலிருந்து பல மீட்டர் தூரம் தள்ளி புதர் மண்டிய இடத்தில் ஒரு பேருந்து நிறுத்தமும், மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கால்வாய்க்கு அருகில் மற்றொரு பேருந்து நிறுத்தமும் அமைத்திருக்கிறார்கள்" எனப் புலம்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். கண்டாச்சிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 38-ல் காவல் நிலையம் அருகே சாலையைவிட்டு சுமார் 15 மீட்டர் இடைவேளையில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிழற்குடையின் குறுக்கே கால்வாய் இருப்பதால், பயணிகள் பயன்பாடின்றி கிடக்கிறது. மேலும், இந்த நிழற்கூடம் அமைந்திருக்கும் அம்பேத்கர் நகரில் பேருந்துகள் நிற்பதில்லை என்பதால், அம்பேத்கர் நகர் மற்றும் இந்திரா நகர்ப் பகுதி மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தத்துக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தம்

2019-2020-ல் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் தொகுதி உள்ளூர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.5,00,000 லட்சம் மதிப்பீட்டில் அம்பேத்கர் நகர்ப் பகுதியில் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த நிழற்கூடத்துக்கு 150 மீட்டர் தொலைவில் 2014-2015-ல் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கட்டிய இந்திரா நகர் நிழற்குடை அமைந்திருக்கிறது. ஆனால், அங்கும் பேருந்துகள் நிற்காததால் அந்த நிழற்குடையும் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``2014-2015-ல் இந்திரா நகர்ப் பகுதியில் எம்.எல்.ஏ வெங்கடசேனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. ஆனால், அங்கு கொஞ்ச காலம்தான் பேருந்துகள் நின்று சென்றன. அதன்பிறகு அங்கு நிற்பதில்லை. தற்போது இந்திரா நகர் பேருந்து நிறுத்தம் சமூக விரோதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாலை வேளைகளில் அங்கு அமர்ந்து கொண்டு மது அருந்தும் இளைஞர்கள், பகுதி மக்களை போதையில் அச்சுறுத்தி வருகின்றனர்.

அருகிலேயே காவல் நிலையம் இருந்தும், இந்த அட்டூழியம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், இந்திரா நகர் பேருந்து நிறுத்தத்தில் கால்வாய் இருப்பதால், அதை மழைக்கு ஒதுங்குவதற்குக் கூட பயன்படுத்த முடிவதில்லை. இந்திரா நகர் பேருந்து நிறுத்தத்தின் நிலைதான் இப்படி என்றால், 2019-ல் கட்டப்பட்ட அம்பேத்கர் நகர் பேருந்து நிறுத்தத்தின் நிலை இதைவிடப் படுமோசம். அங்கு எதற்காக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி பேருந்து நிறுத்தம் அமைத்தார்கள் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. 2019-2020-ல் ரவிக்குமார் எம்.பி-யின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த நிழற்கூடத்தை நெடுஞ்சாலையைவிட்டுப் பல மீட்டர் தூரம் தள்ளி கட்டியிருக்காங்க. குறுக்கே கால்வாய் ஓடுறது கூடவா தெரியாது அவங்களுக்கு... சாலையைவிட்டு இவ்வளவு தள்ளி கட்டியிருக்காங்க, இத யாரு பயன்படுத்துவா... புதர் மண்டி கிடக்கு. இதுல இருக்குற `பயணியர் நிழற்குடை' பலகைய எடுத்திட்டா, இது பேருந்து நிறுத்தம்'னு யாருக்குமே தெரிய வாய்ப்பில்ல.

இந்தப் பேருந்து நிறுத்தம் கட்டி இதுவரைக்கும் ஒருநாள்கூட இங்க பேருந்து நின்னு நாங்க பார்த்ததே கிடையாது. இந்த அம்பேத்கர் பேருந்து நிறுத்தத்துக்கு பக்கத்துலயே தாலுகா ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன்'லாம் இருக்கு. ஆனா பேருந்து நிக்குறதில்ல. இந்திரா நகர், அம்பேத்கர் நகர் மக்கள் ரெண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து பக்கத்துல இருக்க பேருந்து நிறுத்தத்துக்கு போய்தான் அவசரத்துக்கு பேருந்து பிடிக்க வேண்டியதா இருக்கு. இது தொடர்பா அதிகாரிங்க கிட்ட பல முறை முறையிட்டும் எந்த பயனுமில்ல. பள்ளிக் கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள், பெண்கள்'னு எல்லாருக்குமே ரொம்ப சிரமமா இருக்கு. அரசு உடனடியாக இந்த விஷயத்த கவனத்துல கொண்டு நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

பயன்பாடின்றி கிடக்கும் `பயணியர் நிழற்குடை'களை பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா?!



source https://www.vikatan.com/news/tamilnadu/the-people-of-kandachipuram-are-urging-government-officials-to-renovate-the-bus-stands-and-bring-them-into-use

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக