Ad

சனி, 4 ஜூன், 2022

கருப்பட்டி மைசூர்பாகு I மாம்பழ கலாகண்ட் I வாழைப்பழ அல்வா - இனிப்பு ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வாரம் முழுவதும் வாய்க்குப் பூட்டு; வார இறுதியில் ஒரு நாள் மட்டும் விரும்பியதை உண்ண அனுமதி - எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கான முதல் அட்வைஸ் இதுவாகத்தான் இருக்கும்.

Sweet

`சீட் டே' எனப்படும் அந்த ஒருநாளில் ருசித்து மகிழ வித்தியாசமான இனிப்புகளின் செய்முறை இங்கே...

கருப்பட்டி மைசூர்பாகு

தேவையானவை:

கடலை மாவு - ஒரு கப்

கருப்பட்டி (பனை வெல்லம்)

- ஒரு கப் (பொடிக்கவும்)

நெய் - கால் கப்

எண்ணெய் - ஒரு கப்

சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்

கருப்பட்டி மைசூர்பாகு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து, அது உருகியதும், கடலை மாவைச் சேர்த்து, மணம் வரும் வரை நிறத்தை மாற்றாமல் நடுத்தர தீயில் வறுக்கவும். பிறகு, ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும். வறுத்த கடலை மாவில் ஒரு கப் எண்ணெய்யை ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். இதைத் தனியாக வைத்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீருடன் கருப்பட்டி சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அது கரையும் வரை நன்கு கிளறவும். பிறகு, அசுத்தங்களை அகற்ற அதை வடிகட்டி, சுக்குத்தூளைச் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை மீண்டும் கொதிக்க வைக்கவும்.

தீயைக் குறைத்து வைத்து, கடலை மாவு கலவையைச் சேர்த்து, கட்டிகளைத் தவிர்க்க தொடர்ந்து கிளறவும். அது கெட்டியாக ஆரம்பித்ததும், நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து வாணலியின் பக்கங்களைவிட்டு வெளியேறும் வரை கிளறவும். இது ஒன்றாக வரத் தொடங்கும்போது, அடுப்பில் இருந்து அகற்றி, கலவையை நெய் தடவப்பட்ட ஒரு தட்டில் மாற்றவும். சிறிது ஆறியதும் கத்தியைப் பயன்படுத்தி விரும்பிய வடிவங்களில் வெட்டவும். அது முழுமையாகக் குளிர்ந்த பிறகு, துண்டுகள் போடவும்.

சுவையான, ஆரோக்கியமான கருப்பட்டி மைசூர்ப்பாகு தயார்.

பேரீச்சம்பழ பிர்னி

தேவையானவை:

பேரீச்சம்பழம் - 10

பாஸ்மதி அரிசி - 2 டீஸ்பூன்

பால் - 3 கப்

பனை சர்க்கரை - 2 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

நறுக்கிய நட்ஸ் - அலங்கரிக்கத் தேவையான அளவு

பேரீச்சம்பழ பிர்னி

செய்முறை:

அரிசியைக் கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பேரீச்சம்பழத்தில் கொட்டைகளை நீக்கி தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியபின், அரிசியை வடிகட்டி மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அதை ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும்.

அதே மிக்ஸியில், ஊறவைத்த பேரீச்சம்பழத்தைச் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலைக் கொதிக்க வைக்கவும். அது கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைக்கவும். பாலில் அரைத்த அரிசி மற்றும் பேரீச்சம்பழக் கலவையைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் தொடர்ந்து நன்றாகக் கிளறவும். அதில் பனை சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, கிளறிக்கொண்டே இருக்கவும். தொடர்ந்து 15 - 20 நிமிடங்கள் கிளறவும். கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கி நட்ஸ் தூவி அலங்கரிக்கவும்.

இதை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரூட்டி பரிமாறவும்.

* 100 கிராம் பேரீச்சம்பழத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவு 63 கிராம்.

மாம்பழ கலாகண்ட்

தேவையானவை:

மாம்பழ ப்யூரி - 2 கப்

பனீர் - 200 கிராம்

கண்டென்ஸ்டு மில்க் - 200 மில்லி (ஒரு டின்)

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

குங்குமப்பூ - ஒரு சிட்டிகை

நட்ஸ் - அலங்கரிக்கத் தேவையான அளவு

நெய் - சிறிதளவு

மாம்பழ கலாகண்ட்

செய்முறை:

ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும். மாம்பழத்தை நறுக்கி ப்யூரி செய்யவும். பனீரை குருணையாக மசித்து தயாராக வைக்கவும். ஒரு வாணலியில் மாம்பழ ப்யூரியை ஊற்றி மிதமான தீயில் கிளறவும். அதில் பனீர் மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும். நன்கு கலந்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அது கெட்டியாக ஆரம்பித்ததும், ஏலக்காய்த்தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து 10 நிமிடங்கள் கிளறவும். அது கெட்டியாகி, பக்கங்களை விட்டு வெளியேற ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும்.

கலவையை நெய் தடவப்பட்ட தட்டில் மாற்றவும். சமமாகப் பரப்பவும். நறுக்கப்பட்ட நட்ஸ் தூவி அலங்கரிக்கவும். அதை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் குளிரூட்டவும். செட்டானதும் எடுத்து விரும்பிய வடிவங்களில் வெட்டிப் பரிமாறவும்.

வாழைப்பழ அல்வா

தேவையானவை:

வாழைப்பழம் (பெரிய சைஸ்) - 2

சர்க்கரை - கால் கப்

நெய் - 4 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

முந்திரி - 10 (உடைக்கவும்)

வாழைப்பழ அல்வா

செய்முறை:

வாழைப்பழத்தைத் தோல் உரித்து, துண்டுகளாக நறுக்கி, நன்றாகப் பிசையவும். அல்லது தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடாக்கவும். முந்திரி சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். நெய்யிலிருந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதே கடாயில், பிசைந்த வாழைப்பழத்தைச் சேர்த்துக் கிளறவும். அது கெட்டியாக ஆரம்பித்ததும், சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். மீதமுள்ள நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா நெய்யை உறிஞ்சிப் பளபளப்பாக மாறும். அல்வா பொன்னிறமாக மாறியதும், வறுத்த முந்திரி சேர்த்து, இரண்டு - மூன்று நிமிடங்கள் நன்கு கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.



source https://www.vikatan.com/food/food/mysurpa-kalakand-halwa-sweet-special-weekend-recipes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக