Ad

சனி, 4 ஜூன், 2022

உடைத்துப் பேசுவோம்: "தொட்டா தீட்டுன்னு சொல்லுவாங்க. ஆனா கொரோனா காலத்துல..."- வியாசர்பாடி சக்திவேல்

"எல்லாரும் நாங்க தொட்டா தீட்டுன்னு சொன்னாங்க... ஆனா, கொரோனா சமயத்தில் இறந்து போன சொந்தங்ககிட்ட அவங்க குடும்பமே நெருங்காதப்ப தொட்டா தீட்டுன்னு சொல்லிட்டு செத்துப் போனவங்களை நாங்கதான் எங்கக் கையால தொட்டுத் தூக்கி அடக்கம் பண்ணினோம்!" என்றவாறு பேசத் தொடங்கினார் சக்திவேல்.

வியாசர்பாடி சுடுகாட்டில் பிணங்களை எரித்துக் கொண்டிருக்கும் இவர் ஆம்புலன்ஸ், இறுதி ஊர்வல வண்டி, ஐஸ் பாக்ஸ் உட்பட பலவற்றையும் இல்லாதவர்களுக்கு இலவசமாய் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுத்து உதவி வருகிறார். ஆனந்த விகடன் 'உடைத்துப் பேசுவோம்' நிகழ்ச்சிக்காக திருநங்கை நேஹா அவரைப் பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டியிலிருந்து...
வியாசர்பாடி சக்திவேல்

"வியாசர்பாடி சக்திவேல் என்கிறவன் இறப்புக்கான வேலை செய்றவன். என் தாத்தா இந்த வேலை செய்துட்டு இருந்தாரு. என் அப்பா மிலிட்டரியில் வேலை பார்த்தார். தாத்தாவுக்குப் பிறகு அந்தத் தொழில் எனக்கு செட்டாச்சு. ஏதேதோ வேலை செய்தேன். ஆனா இறப்பை கடைசி வரைக்கும் கொண்டு போய் சேர்க்கிற வேலைதான் எனக்கானதாச்சு. கண்ணாடிப் பெட்டியில் இறந்தவங்களை வைக்கிறதெல்லாம் பெரிய, பெரிய பணக்காரங்க வீட்டில் மட்டும்தான் இருந்துச்சு. ஸ்லம் ஏரியாவில் இதுசார்ந்த எந்த வசதியும் இல்லை. இங்கிருக்கிறவங்களுக்கு அது மிகப்பெரிய காட்சிப் பொருளாகத்தான் இருந்துச்சு. அதனாலேயே என் சொந்த செலவில் அதையெல்லாம் ரெடி பண்ணினேன். அது எங்க மக்களுக்கும் கிடைக்கணும்னு செய்தேன்.

சாவு திடீர்னு வரும். இல்லாதவங்களுக்கு இலவசமாகவே எல்லாமே செய்வேன். இருக்கிறவங்ககிட்ட வாங்கிக்குவேன். சாவுன்னாலே வியாசர்பாடி சக்திவேல்னு ஆகிடுச்சு. என் அம்மாவுக்கு இந்தத் தொழில் பண்றதுல விருப்பம். ஆனா, இந்த வேலை பார்க்கிறதுனால சொந்தபந்தம் ஒரு மாதிரியாதான் பார்ப்பாங்க. சுடுகாட்டு வேலை பார்க்கிறான்னு முகம் சுளிப்பாங்க. ஆனா, அதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல. யாருக்குத்தான் சுடுகாட்டில் வேலை பார்த்தால் பிடிக்கும்.

பேய், பிசாசுன்னுலாம் ஒண்ணும் கிடையாது. அப்படியான அமானுஷ்யத்தையும் நான் இங்க பார்த்தது இல்ல. பேய் பிடிச்சிருக்கு அதை எடுக்கிறேன்னு சொன்னா ஒருத்தன் உங்களை ஏமாத்துறான்னு அர்த்தம். உண்மையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை.
வியாசர்பாடி சக்திவேல்
யாருமேயில்லைன்னு சொல்றவங்களுக்கு நான்தான் பிள்ளை. இருக்கிறவங்களுக்கு ஆயிரம் சொந்தம்... இல்லாதவங்களுக்கு இந்த வியாசர்பாடி சக்திவேல். அப்படி யாரும் இல்லாத பலருக்கு பிள்ளையாய் கொள்ளி போட்டிருக்கேன். என்னைப் பெத்தவங்க உயிரோட இருக்கும்போதே பலருக்குக் கொள்ளி வச்சுருக்கேன். அப்ப நான் கொள்ளி போடுறவங்க எல்லாரும் எனக்கு அப்பா, அம்மாதானே! அதையெல்லாம் நான் ஒரு பெரிய பாக்கியமாகத்தான் நினைக்கிறேன்.

கொரோனா காலத்தில் தொடர்ந்து வேலை பார்த்தேன். அதனால ரெண்டு மாசமா ரோட்டோரத்தில், வண்டியில் அப்படியேதான் தங்கியிருந்தேன். அந்தச் சமயத்தில் பணம் சம்பாதிச்சு என்ன பண்ணப் போறோம்னு தோணுச்சு. அந்த டைமில் இலவசமா வண்டியெல்லாம் ஓட்டினேன். எங்களை பார்த்தா தீட்டு, தொட்டா தீட்டுன்னு சொல்லுவாங்க... ஆயிரம் கோடிக்கு சொத்து அதிபதியாகக் கூட இருந்திருப்பாங்க... அவங்க செத்துப் போனதும் அவங்க பையனே தூரத்துல நின்னுதான் அப்பாவை பார்த்துட்டு இருப்பான். நாங்கதான் எங்க கையால தொட்டு இறுதிச் சடங்கு செய்தோம். எவன் பார்த்தா தீட்டுன்னு சொன்னாங்களோ அவன்தான் எல்லாமே செய்தான். அவன் தீட்டு கிடையாது. அவன் செய்றதுதான் சேவைன்னு நினைக்கணும். அப்படி நினைக்கிறதுகூட வேண்டாம். மனுஷனா நினைச்சா அதுவே போதும்.

இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் அண்ணன் எனக்கு பழக்கமானார். அவர்தான் 'பூலோகம்' படத்தில் என்னை நடிக்க வச்சார். அவர்கூட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். அகிலன் படம் பண்ணிட்டு இருக்கார். அந்தப் படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார். அவர் எனக்கு சொந்த அண்ணன் மாதிரி! எனக்கு சினிமா வில்லன் ஆகணும்னுதான் ஆசை. அது மிகப்பெரிய போராட்டம். இந்த வேலையும் செய்துட்டு அதையும் பார்க்க முடியல. இது என் வேலையாகவும் ஆகிடுச்சு, வாழ்க்கையாகவும் ஆகிடுச்சு. அதனால இதை விட்டுட்டு போக முடியல.

வியாசர்பாடி சக்திவேல்

வியாசர்பாடின்னாலே பொறுக்கி பசங்க இருப்பாங்கன்னு எல்லாரும் சொல்லுவாங்க. இங்க ஒருத்தன் கீழே விழுந்தா பத்து பேர் ஓடி வந்து உதவுவாங்க. உண்மையாகவே நல்ல, நல்ல மனிதர்கள் இருக்கிற இடம் இது. திறமையான பலர் எங்க ஏரியாவில் இருக்காங்க. ஈசிஆர் முழுக்க கஞ்சா அடிச்சிட்டு பணக்கார பசங்க சுத்திட்டு இருப்பாங்க. அப்ப ஈசிஆர் பொறுக்கிப் பசங்க சுத்துற இடம்னு ஏன் சொல்ல மாட்டேன்றீங்க? எல்லா இடத்திலும் எல்லாரும் இருக்காங்க. இங்க எல்லா சாதியினரும் இருக்காங்க. இது சமூகக்கூடம். சினிமாக்காரங்கதான் இப்படிக் காட்டுறாங்க. நிஜமா படம் எடுக்கிறோம்னு சொல்லிட்டு தவறா எங்க ஏரியாவை பத்தி காட்டுறாங்க. நீங்க நினைக்கிற மாதிரி எங்க ஊர் மோசமான ஊரெல்லாம் இல்ல. எல்லா ஊரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எங்க ஊர் எங்களுக்கு சொர்க்க பூமி.

சென்னை யாருடைய சொந்த ஊரும் கிடையாது. சென்னைக்கு வேலைக்கு தேடி வந்தவங்கதான் அதிகம். நாங்களும் அப்படி வந்த குடும்பம்தான்! சென்னைக்கு வந்த பிறகுதான் நமக்கு எல்லாமே கிடைக்குது. அதையெல்லாம் வாங்கிட்டுதான் சிலர் சென்னையை பற்றி தவறா பேசுறாங்க.
வியாசர்பாடி சக்திவேல்

நான் ஆம்புலன்ஸ் டிரைவரா இருந்தப்ப கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தங்களுடைய கணவர் உடல்நிலை சரியில்லாம இறந்துட்டாரு. அவரைச் சொந்த ஊருக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லி அவங்க தாலியைக் கழட்டி என் கையில் கொடுத்தாங்க. 'என்கிட்ட அவர் கட்டின தாலியைத் தவிர எதுவும் இல்லை. தயவு செய்து சொந்த ஊருக்கு கூட்டிட்டு போங்க'ன்னு சொன்னாங்க. அம்மா நான் கொண்டு போய் விடுறேன். நீங்க அந்த தாலியை வைங்கன்னு சொல்லி அவங்களைக் கூட்டிட்டுப் போனேன். எத்தனை வருஷம் ஆனாலும் அதை என்னால எப்பவும் மறக்கமுடியாது. என்னால முடிஞ்ச வரைக்கும் இல்லாதவங்களுக்கு இலவசமாகவே எல்லா விஷயமும் பண்ணிட்டு இருக்கேன்."

இந்தத் தொழிலை நான் விரும்பி செய்றேன். சாவு வீட்ல கொடுக்கிற சந்தோஷம் எனக்கு பெருசா தெரியுது. சந்தோஷம் என்கிற வார்த்தையை பல இடங்களில் கேட்கலாம்... இறப்பு வீட்டில் நம்ம கையைப் பிடிச்சு சந்தோஷம் தம்பின்னு சொல்லுவாங்க. அது பலமுறை எனக்கு நடந்திருக்கு. இந்தத் தொழில் செய்றதை பாக்கியமா நினைக்கிறேன். கடைசி காலம் வரைக்கும் இதை செய்யணும்!

வியாசர்பாடி சக்திவேலின் நெகிழ்ச்சியான முழுப் பேட்டியையும் காண...



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/meet-vyasarpadi-sakthivel-who-handles-the-last-rites-of-the-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக