திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு குற்றாச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார். தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாகவும். முதல்வர் பற்றி தான் கோர்ட்டில் வாக்கு மூலம் அளித்ததால் அவர் சார்பில் தன்னை ஷாஜ் கிரண் என்பவர் மிரட்டியதாகவும் ஸ்வப்னா தெரிவித்திருந்தார்.
தனது நண்பரான சரித் மீதும், தனது வழக்கறிஞர் மீதும் வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்யப்பட்டு நெருக்கடி கொடுப்பதாகவும் கூறிவருகிறார் ஸ்வப்னா சுரேஷ். ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து தார்மீக பொறுப்பேற்று பினராயி விஜயன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ கட்சியினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலைநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை குறிவைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயன் அவரின் சொந்த மாவட்டமான கண்ணூரில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் தனது சொந்த வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் நேற்று கண்ணூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற பினராயி விஜயன் பாதுகாப்பு காரணங்களாக அரசு விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டார்
அதே சமயம் அரசு விருந்தினர் மாளிகையின் அருகே இளைஞர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பினராயி விஜயன் அங்கிருந்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றபோதும் அவர் செல்லும் வழிகளில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கறுப்பு ஆடைகள் அணியக்கூடாது, கருப்பு மாஸ்க் அணிய கூடாது என்று போலீஸார் கெடுபிடி காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக சமூக வலைத்தளங்களிலும் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். கறுப்பு நிற மாஸ்க், உடை அணிந்து முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற சிலர் தடுக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றன. கறுப்பு ஆடைக்கு தடை விதித்தது சம்பந்தமாக கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முகநூலில் முதல்வர் பினராயி விஜயன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் பேசிய முதல்வர், "இந்த சமூகத்தை தவறாக வழி நடத்தும் விதமாக ஒரு பிரசாரம் நடந்து வருகிறது. கறுப்பு நிறத்தில் மாஸ்க் அணியக்கூடாது, கறுப்பு நிறத்தில் ஆடைகள் அணிய கூடாது என தவறாக பிரசாரம் செய்கிறார்கள். கேரளத்தில் யாருக்கும் எந்த உடை விருப்பமோ அந்த உடையை அணிந்து கொள்ளலாம். விரும்பிய உடை அணிந்து கொள்வதற்காக மிகப்பெரிய போராட்டம் நடந்த மாநிலம் கேரளம். அதனால் நம் மாநிலத்தில் மாற்றம் ஏற்பட்டது.
இங்கு எந்த வழியிலும் அந்த உரிமை பறிக்கப்படமாட்டாது. தவறான கருத்துக்களை சில சக்திகள் பரப்பி வருகின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். கறுப்பு உடைகள், கறுப்பு மாஸ்க் ஆகியவை அணியக்கூடாது என கேரள அரசு தீர்மானித்திருப்பதாக பொய் பிரசாரம் செய்துவருகின்றனர்.
கேரளத்தில் இடதுசாரிகள்தான் மக்களின் எல்லா தனிப்பட்ட உரிமைகளையும் பெற்றுத்தந்தார்கள். அப்படிப்பட்ட இடதுசாரி அரசு ஆட்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட ஆடைகள் அணியக் கூடாது என்ற தீர்மானம் ஏற்படுத்தப்படவில்லை. அரசை களங்கப் படுத்துவதற்கு வேறு ஒன்றும் கிடைக்காததால் பொய் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறார்கள். மக்களின் தனிப்பட்ட உரிமைகளை எல்லாவகையிலும் பாதுகாக்க அரசு எப்போதும் மக்களுடன் நிற்கும். மக்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளை தடுக்க அரசு எப்போதும் தனிக் கவனத்துடன் செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/is-black-colour-dress-mask-banned-in-kerala-cm-pinarayi-vijayan-events
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக