குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுவருகின்றன. பா.ஜ.க கூட்டணியைவிட எதிர்க்கட்சிகள் வசம் அதிக வாக்கு சதவிகிதம் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது! இதில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முனைப்புக் காட்டிவருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இது தொடர்பாக இந்தியா முழுவதுமிருக்கும் எதிர்க்கட்சிகளுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் அவர்.
கடிதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, இடதுசாரிகள் என மொத்தம் 22 எதிர்க்கட்சிகளுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் மம்தா. எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொருட்டு இந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஜூன் 15 அன்று, டெல்லியில் நடக்கும் என்றும் மம்தா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், `மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், எதிர்க்கட்சி தலைவர்களைக் குறிவைத்து நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு சீர்குலைந்துவிட்டது. இத்தகைய சூழலில், எதிர்க்கட்சிகளின் வலிமையைக் காட்ட வேண்டும். ஜனநாயகத்தின் பாதுகாவலராகத் திகழும் நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மிகவும் முக்கியமானது. ஜனநாயகக் கொள்கைகள் சீர்குலைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சிகளின் குரல் ஒருங்கிணைந்து ஒலிக்க வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள் அதிருப்தி!
டெல்லியில் ஜூன் 15-ம் தேதி அன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஒன்றுகூடி ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள். இந்த நிலையில், அதே தேதியில் மம்தாவும் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, ``மம்தா பானர்ஜி எனக்கும் கடிதம் எழுதியிருப்பதை சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரிந்துகொண்டேன். வழக்கமாகப் பிற கட்சிகளுடன் பரஸ்பர கலந்துரையாடல்கள் மூலமாக, தேதி, இடம் உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டு, பின்னர்தான் இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால், மம்தா ஒருதலைபட்சமாகக் கடிதம் அனுப்பியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம். ஆனால், எந்தவொரு ஒருதலைபட்சமான நடவடிக்கையும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதித்துவிடும்'' என்று கொந்தளித்திருக்கிறார்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பாரா மம்தா?
இது குறித்து தேசிய அரசியலை உற்று நோக்கும் சிலர், ``2024 தேர்தலில், தேசிய அரசியலில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் மம்தா. அதற்கான முன்னோட்டமாகக் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயன்றுவருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்த்துக்கொள்ள அவர் விரும்பினாலும், பிரதமராகத் தன்னையே முன்னிறுத்த வேண்டும் என மம்தா விரும்புவதாகத் தெரிகிறது. அதனால்தான், இதுபோன்ற ஒருங்கிணைப்பு வேலைகளில் அவர் இறங்கியிருக்கிறார்.
ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மம்தாவின்கீழ் ஒருங்கிணைந்து செயல்பட விரும்பவில்லை என்பதே உண்மை. மேலும், மம்தா தனியாக இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்பட்டு, அது பா.ஜ.க-வுக்கு சாதகமாகிவிடும் வாய்ப்புகளும் இருக்கின்றன. தி.மு.க தலைவர் ஸ்டாலின், மம்தாவோடு நல்ல நட்புறவிலிருந்தாலும், காங்கிரஸோடு கைகோர்த்து நிற்கவே விரும்புவதாகத் தெரிகிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் காங்கிரஸுடன் கைகோர்க்க விரும்புவதால், மம்தா தலைமையில் ஒருங்கிணைய முன் வர மாட்டார்கள். எனவே, மம்தாவின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி தோல்வியில் முடியும் வாய்ப்புகளே அதிகம்!'' என்கிறார்கள். விடை நாளை (15-06-2022) தெரிந்துவிடும்!
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-mamatas-move-in-presidential-elections
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக