Ad

ஞாயிறு, 5 ஜூன், 2022

நாடோடிச் சித்திரங்கள்: தரம்சாலாவில் வாய்த்த போதி தருணங்கள்..! | பகுதி 37

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலையில் மனித இனத்தின் செருக்கு முழுவதுமாக அகன்று, இயற்கையின் மாற்றங்கள் ஓர் இனத்தையே வாழத் தகுதியற்றதாகச் செய்துவிடும் வல்லமை படைத்தது என்பதைக் காலம் உணர்த்தியிருந்தது. சாங்கா தாதா எப்போதும் கூறுவார் "இயற்கையின் ஆக்கத்தில் ஒரு சிறு துரும்பே மனிதன். நாம் அந்த அளவுக்குப் பேராசைகொண்டால் போதும், பெருமிதம்கொண்டால் போதும், வாழ்ந்தால் போதும், மடிந்தால் போதும்."

சாங்கா தாதாவைப் பல மாதங்கள் சந்திக்க முடியாமல் போனாலும், அவர் பராமரித்த தோட்டத்துக் காய் கனிகளும் கீரைகளுமே பொதுமுடக்கக் காலத்தில் எங்களுக்குப் பேருதவியாக இருந்தன. அலைபேசியில் பேசும்போதெல்லாம் அவரின் பழைய வானொலிப் பெட்டியிலிருந்து நாகாமி பாடல்கள் பின்னணியில் ஒலித்தபடி இருக்கும். "ஷாலுஜி... ஒரு முறை அந்த மடத்துக்கு போயிட்டு வரணும் ஷாலுஜி" என்பார் திடீரென்று. தரம்சாலாவில் எங்கெங்கு காணினும் பெளத்த மடங்களே இருக்கும். அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று புரியாமல் அவரிடமே கேட்டேன். அதற்கு அவர், "அங்க வெள்ளக்காரி ஒருத்தி கடை வெச்சிருக்காளே... நீங்ககூட அங்க போவீங்களே... அந்தக் கடைக்கு எதிரே இருக்குற மடம், அங்க போகணும்" என்றார்.

நாடோடிச் சித்திரங்கள்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கிழக்கு நாடுகளின் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தடைந்து, தரம்சாலாவில் மேற்கு நாடுகளின் பல வகை நறுமண திரவியங்கள் விற்கும் சிறிய கடை ஒன்று நடத்திவந்தார். ஏதேனும் தொழில் செய்து வாழ வேண்டுமென்பதால் 'அரோமாகோலஜி' பட்டதாரியான அவர் அது தொடர்பான சிறிய வியாபாரம் செய்துவருவதாகக் கூறினார். அவர் சேகரித்துவைத்திருந்த சில நறுமண திரவியங்களின் மணம், அதுவரை நான் அனுபவித்திராத பல புதிய உணர்வுகளை என்னுள் கிளர்ந்தெழச் செய்தது. அவருடைய கடைக்குச் செல்ல விரும்பியபோதெல்லாம் சாங்கா தாதாவை உடனழைத்துக்கொள்வேன். அவரை மடத்தின் வாயிலில் விட்டுவிட்டு நான் பெர்ஃப்யூம் கடைக்குள் நுழைந்துவிடுவேன். மணிக்கணக்கில் இத்தாலியப் பெண்மணியுடன் உரையாடுவேன். அவரும் ஓரியண்டல் ஃபிலாசபி பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைச் சற்று அதிகமாகவே என்னிடம் வெளிப்படுத்தினார். நாங்களிருவரும் வெகுநேரம் அவரவர் விருப்பத் தலைப்புகளில் உரையாடிக் களைத்துப்போவது வழக்கம்.

எப்படியாவது வாழ்வு சுமுகமாகிவிட்டால் போதும் என்று மனிதர்கள் அவசரமாக வாழத் தொடங்கிய தவிப்பை அனைவரிடமும் காண முடிந்தது.

வெகுநாள்களுக்குப் பிறகு சாங்கா தாதாவை அங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தரம்சாலாவின் கியோட்டோ மடத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளையில் அவரைச் சந்தித்தேன். கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மடத்தில் அமலில் இருந்தன. அதிகாலை வழிபாட்டு மந்திரங்கள் ஒலிபெருக்கியில் ஒலிக்க, துறவிகள் அனைவரும் நன்கு இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர். சாங்கா, மடத்தின் வெளியே மடத்தை நோக்கி அமைந்திருந்த கற்பலகையில் அமர்ந்திருந்தார். அவரது பார்வை மடத்தையும் மீறி அதன் பின்னணியில் நீண்ட கோடுகளாக விரிந்திருந்த மலைச்சிகரங்களின் மீது பதிந்திருந்தது. அவரை நெருங்கி அமர்ந்தபோதுதான் அவரால் என்னை அடையாளங் காண முடிந்தது. வெகுநாள்கள் பார்த்திராததால் அவர் முகத்தில் அர்த்தமுள்ள நீண்ட புன்னகையொன்று படர்ந்தது. அப்புன்னகையில் அன்பு மிகுந்திருந்தது. "வா என்னருகில் வந்து உட்கார்" என்று சைகையில் உணர்த்தினார். முன்பே கூறியதுபோல் என்னைப் பொறுத்த மட்டில் சாங்கா ஒரு பேரதிர்வு.

நாடோடிச் சித்திரங்கள்

மடத்தில் முதல் வேளை பிரார்த்தனை முடிந்து துறவிகளும், பயிற்சி சீடர்களும் வெளியே வந்தனர். சிறு குழுந்தைகளும் துறவு வாழ்வில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது பார்ப்பதற்கு ஒருபுறம் தெய்விகமாக இருந்தாலும், அவர்களை ஒழுக்க விதிகள் கொண்டு துறவானது நெருக்குகிறதோ என்றும் தோன்றாமலில்லை. குழந்தைகள் எத்தோற்றத்திலும் குழந்தைகள்தானல்லவா. தலைமயிர் மழிக்கப்பட்டு அரக்கு நிற அங்கிகள் அணிந்திருந்த அக்குழந்தைகள் பார்ப்பதற்கு தேவதைக் குட்டிகள் போலிருந்தனர்.

அவர்களது உலகத்தில் மாற்றமேதும் இருக்கவில்லை. அவர்களை கவனித்தபடியே நானும் சாங்காவும் நெடுநேரம் மெளனமாக அமர்ந்திருந்தோம்.

"அதோ தெரிகிறதே இரண்டடுக்கு மலைகள்... அவற்றின் பின்புறமிருப்பவை பசுமையில்லாத கன்மலைகளாகவும், முன்னேயிருக்கும் மலைத்தொடர் பசுமை போர்த்திக்கொண்டு வெள்ளியருவிகள் சூடிக்கொண்டிருப்பதும் தெரிகிறதா" என்றார் சாங்கா.

"ஆம்" என்றேன் கேள்வித் தொனியில்.

நாடோடிச் சித்திரங்கள்

"முன்புறமிருக்கும் மலைகளின் பசுமைக்கு, பின்னேயிருக்கும் நெடுமலைகள்தான் காரணம். சைபீரியாவிலிருந்து சீனத்தைக் கடந்து வீசும் பனிப்புயல்களைத் தடுத்து இயற்கை அரணாக நிற்பது அம்மலைகள்தான். இந்தப் பக்கத்தின் பசுமை முழுமைக்கும் அவைதான் காரணம். ஆனால் அவை வசீகரமற்றவை. பசுமையற்வை. உயிர்வளியற்றவை. கற்பாறைகளாக இறுகி நிற்பவை. அவற்றை நாம் கண்ணெடுத்தும் காண்பதில்லையல்லவா... பார்வைக்கு வசீகரமானவையே நம்மை கவர்கின்றன அல்லவா" என்றார்.

நான் ஆமோதிப்பதுபோல் தலையசைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு இரண்டு பெரிய நாய்கள் வந்தன. பனிப்பிரதேச விலங்குகளின் அடையாளமாக அடர்த்தியான ரோமமும் கொழுத்த சதையும் அவை நிஜத்திலும் நாய்கள்தானா என்கிற எண்ணத்தைத் தோற்றுவித்தன. அவை இரண்டும் சாங்காவின் அருகில் வந்து அவருடன் கொஞ்சி விளையாடத் தொடங்கின. சாங்காவும் அவற்றுடன் நெடுநேரம் விளையாடினார். அவற்றின் கழுத்தின் அடிப்புறத் தோல் பகுதியை வருடியபடியே அவற்றுடன் விளையாடினார்.

நாடோடிச் சித்திரங்கள்

சிறிது நேரத்திலெல்லாம் இரண்டு நாய்களும் அவர் மீது ஏறி அவரை தம் நாவால் வருடித் திளைத்தன. அன்பு எல்லா ஜீவன்களையும் சுலபத்தில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது என்கிற முரண்பட்ட கருத்து மனதில் உதித்தது. அன்பு கட்டுப்படுத்துமா. கட்டுப்படுத்துவது அன்பாகுமா... அன்பு ஒருவிதத்தில் மனிதனின் வேகத்தை குறைக்கும் என்பது உண்மை. பொங்கிப் பிரவகிக்கும் நதியின் பாதையில் எழும்பி நிற்கும் பாறைக்கு இணையானது அன்பு. வேகத்தைக் கட்டுப்படுத்தி திசைகள் மாற்றி வளமைக்கு வழிவகுப்பதே அன்பின் பொருள். நதியானது சேருமிடம் கடலென்றாலும், அதன் பயன் அதுவல்லவே... உயிர்ப்பித்து வளப்படுத்தும் செயலை நதியானது புரிய பாறைகள்தான் வழிவகுக்கின்றன. மனக்குதிரைக்கு கடிவாளமிட்டு கட்டுக்குள்வைத்திருக்க அன்பெனும் கட்டுப்பாடு அவசியம்.

பேசிக்கொண்டே மடத்திலிருந்து வெளியேறினோம். சாங்காவைப் பின்தொடர்ந்தன நாய்கள். மடாலயத்தின் கதவுகளுக்குப் பின்னே நின்று அவருக்காக வாலாட்டி விடையளித்தன. அவை தமது எல்லைகளைத் தெரிந்துவைத்திருந்தன. சாங்கா சிரித்துக்கொண்டே புகையிலைச் சுருட்டொன்றை புகைக்கத் தொடங்கினார்.

"ஊருக்குப் போகலையா சாங்கா, லாக்டெளன் இல்லையே இப்போ..." என்றேன்.

அவர் "இல்லை" என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்தார்.

"பிறகென்ன... ஊருக்குப் புறப்பட வேண்டியதுதானே..."

``அதுவல்ல... நீ சம்மதித்தால்... உன்னுடன் உடலுறவுகொள்ள விரும்புகிறேன்" என்றார்.

அதுதான் சாங்கா. அவர் எதையுமே அதன் உண்மையுருவில் பேசுபவர். அவரின் கேள்வி என்னை எவ்விதத்திலும் அசெளகரியப்படுத்தவில்லை. எந்நிலையிலும் மனிதனை ஆட்கொள்ளும் அடிப்படை உணர்வு காமம் என்பது புரியாதவளில்லை நான். காந்தியடிகள் தனது சுயசரிதையான 'சத்திய சோதனையில்' அவரின் தந்தை நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தபோது, தாம் அவரின் கால்களைப் பிடித்தபடி அமர்ந்திருந்தபோதும் தமது எண்ணம் முழுதும் படுக்கை அறையில் காத்திருந்த மனைவியின் உடல்மீதே கவனம் கொண்டிருந்ததாக எழுதியிருப்பார். அவரை மனதளவில் மகாத்மாவாக நான் ஏற்றுக்கொண்ட தருணம் அது. உண்மையை தரிசிக்கும் வல்லமை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது...

நாடோடிச் சித்திரங்கள்

``நீ சம்மதித்தால் உன்னுடன் உடலுறவுகொள்ள விரும்புகிறேன், மனம் சில நாள்களாக அமைதியின்றி தவிக்கிறது. என்னால் ஓர் அறைக்குள் அடைப்பட்டுக் கிடக்க முடியவில்லை. காடு, மலை என சுற்றித்திரியும் இயல்புடைய என்னை இந்த இயக்க முடக்கம் பெரிய அளவில் பாதித்துவிட்டது ஷாலுஜி (அவர் அப்படித்தான் என்னை அழைப்பார்). இப்போதைவிட கொடுமையான காலம் வரவிருப்பதாக இயற்கை எனக்குக் கூறுவதுபோலிருக்கிறது. நாம் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளோம். உயிருக்கு அஞ்சுபவனல்ல நான். மனிதர்கள் சிரிக்க மறந்துபோனார்கள். அதுதான் என்னை அச்சுறுத்துகிறது. அவ்விரு நாய்களும் என்னிடம் அன்பைப் பொழிந்தபோது மனதின் கட்டுகள் ஒவ்வொன்றாக விடுபட்டு மனதில் பெருங்கிளர்ச்சி மூண்டிருக்கிறது. அதே போன்றதொரு இலகுவான தன்மையை உன் அண்மையும் வழங்குகிறது. அதனால் கேட்கிறேன்... வேறெப்படியும் எனக்குக் கேட்கத் தெரியவில்லை தோன்றவுமில்லை. வீடு திரும்ப ஆலோசித்திருக்கிறேன். கட்டாய ஓய்வுக்கும் விண்ணப்பித்துவிட்டேன். ஒருவேளை இது நம் இறுதிச் சந்திப்பாகவுமிருக்கலாமல்லவா... அதனால்கூட எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறதோ... எது எப்படியிருப்பினும் உன்னிடம் கேட்டுத் தெளிவு பெறுவதே சரியென்று தோன்றியது. நீ சரியென்றால் உண்மையில் அகமகிழ்வேன். நீ மறுத்தால் அதையும் ஏற்பேன். உனக்குக் கொடுக்க வேறு சில பரிசுகளும் என்னிடமுள்ளன" என்று தெளிவான, உறுதியான தொனியில் பேசினார்.

சாங்காவுக்கு பதிலளிப்பது எனக்குச் சிரமமாகத் தோன்றவில்லை.

"இல்லை சாங்கா, எனக்கு உடன்பாடில்லை" என்று இயல்பாக மறுத்துவிட்டேன். அதன் பிறகு எவ்வித மன உளைச்சலுமின்றி இருவரும் இரண்டு மணி நேரம் பேருந்தில் சேர்ந்தே பயணித்தோம். பாலுறவு தொடர்பான கேள்விகளை சமிக்ஞைகளாகவும் சீண்டல்களாகவும் இல்லாமல் நேரடியாக அணுகும்போது அது இருவருக்குமே எளிதில் கடக்கக்கூடிய விஷயமாகிவிடுகிறது. திரைகளின்றி, முகமூடிகளின்றி பெண்ணும் ஆணும் தமது தேவைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது அங்கு அத்துமீறல்களுக்கு இடமில்லாமல்போகிறது.

அன்றிலிருந்து சில நாள்களுக்குப் பிறகு சாங்கா தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார். ராணுவ விமானத்தில் சென்றவருக்கு செல்லும் வழியிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டதென்பது அவரின் மரண அறிவிப்புச் செய்தி வந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. சுமார் நாற்பது நாள்களுக்குமேல் நாகாலாந்து எல்லையில் அரசு மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்ற சாங்கா, தமது குடும்பத்தினரையும் சந்திக்காமல், என்னிடமும் திரும்பி வராமல், எங்கோ நடுவழியில் உயிர்நீத்திருந்தார். அவர் வெளிப்படுத்திய விருப்பத்தின் பின்னே பொதிந்திருந்த தவிப்பின் ஆழம், பிரிவுச் செய்தி இது எதுவுமே அப்போது புரியாமல் அவர் இனி திரும்பப்போவதில்லை என்று தெரிந்த பிறகே எனக்குப் புரிந்தது.

நாடோடிச் சித்திரங்கள்

நானும் அவரும் சேர்ந்து சென்ற கியோட்டோ மடத்தின் வாயிலில் அவர் வருகையை எதிர்பார்த்திருந்து வால் குழைத்தசைத்து காத்திருந்தன அவ்விரு நாய்கள். நான் அங்கு சென்றபோதெல்லாம் என்னை பார்த்ததும் வேகமாக அவை ஓடி வந்தன. என்னை மீறி, என்னைத் தாண்டி எனக்குப் பின்னே யாரையோ அவை தேடின. வெகுநேரம் யாரையோ தேடுவதுபோல் குரைத்தன. சில நாள்களில் அவற்றுடன் சேர்ந்து நானும் அவர் பின்தொடர்கிறாரா என்று திரும்பிப் பார்த்ததுண்டு. தரம்சாலாவில் எனக்கு வாய்த்த போதி தருணங்கள் அனைத்துக்கும் சாங்கா தாதாவின் சாயல்.

வாய்மையின் வேர்களைக் கண்டறியும் பயணங்கள் தொடரும்...



source https://www.vikatan.com/news/travel/a-travel-story-to-daramsala-nadodi-chithirangal-part-37

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக