Ad

செவ்வாய், 11 ஜனவரி, 2022

Fact Check: `குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்து' - வாட்ஸ்அப் வைரல் வீடியோவும், மருத்துவ விளக்கமும்

``உங்களுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஆபத்தானது" என அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் பேசும் ஃபார்வேர்டு காணொளியை வாட்ஸ்அப்பில் நீங்கள் பார்த்திருக்கலாம். தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளைச் செய்யும் விஞ்ஞானியே தடுப்பூசி குறித்து எதிர்மறையாகக் கூறியது வேகமாக வைரலாகி வருகிறது. சர்ச்சைக்குரிய இந்த வீடியோவை ட்விட்டர் தன்னுடைய பக்கத்தில் இருந்து நீக்கியது. தொடர்ந்து தற்போது யூ-டியூபும் இந்த வீடியோவை நீக்கியுள்ளது.

Vaccine (Representational Image)

வீடியோ நீக்கப்பட்ட நிலையில், அதில் அவர் குறிப்பிட்ட கருத்துகள் எழுத்து வடிவில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அப்படி அவர் என்னதான் கூறியிருக்கிறார்?

அமெரிக்காவைச் சேர்ந்த வைரஸ் மற்றும் தடுப்பூசி குறித்து ஆராயும் விஞ்ஞானியான ராபர்ட் மலோனே ஒரு நேர்காணலில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது குறித்துப் பேசினார். அதில், ``நான் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல ஒரு தந்தை மற்றும் ஒரு தாத்தாவும்கூட. அதனால் இதைக் கூற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

உங்கள் குழந்தைகளின் உடலில் m-RNA தடுப்பூசியைச் செலுத்தும்போது அவற்றுக்கு எதிராக குழந்தைகள் உடலில் உருவாகும் ஸ்பைக் புரோட்டீன் நச்சுத்தன்மைமிக்கது. இது குழந்தைகளின் உடம்பில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். நரம்பு மண்டலம், மூளை, இதயம், ரத்தக்குழாய், இனப்பெருக்க மண்டலம் போன்றவற்றில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசிகளே சோதனை தடுப்பூசிகள்தான். உண்மையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசியே தேவையில்லை. அவர்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே கொரோனா நோய்த் தொற்றிலிருந்து அவர்களைக் காப்பாற்றிவிடும். குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளால் நன்மை ஒன்றும் இல்லை. பாதிப்புகள் ஏற்படவே வாய்ப்பு அதிகம்" எனக் கூறியிருந்தார்.

Children Vaccination

m-RNA தடுப்பூசிகள்

கொரோனா வைரஸின் மரபு சங்கிலியான RNA-க்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுபவை m-RNA தடுப்பூசிகள். அமெரிக்காவின் ஃபைஸர் மற்றும் மாடர்னா தயாரித்த தடுப்பூசிகள் இந்த வகையைச் சார்ந்தவை. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளில் `அடினோவைரஸ்' என்று சொல்லப்படும் வைரஸில், கொரோனா வைரஸ் போல சில மாற்றங்களைச் செய்து உடலுக்குள் செலுத்துவார்கள். இந்த அடினோவைரஸ் சாதாரணமாக நமக்கு சளி போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

இந்த வகை தடுப்பூசிகள் உடலை பாதிக்காது. உடல் கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள உதவும். இப்படிச் செலுத்தப்படும் வைரஸால் உடலில் பெருக்கம் செய்ய முடியாது. எனவே நம்முடைய எதிர்ப்பாற்றல் மண்டலம் இந்தக் கிருமியை எளிதாக அழிப்பதோடு, அதற்கு எதிரான ஆன்டிபாடியை உருவாக்கும். இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசி என்று அழைக்கப்படும் HGCO19 இன்னும் சோதனை நிலையில்தான் உள்ளது. இந்தியாவுக்கும் mRNA தடுப்பூசிக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில்தான் இந்தத் தகவல் நம் வைரலாக சுற்றிக் கொண்டிருக்கிறது.

Pfizer-BioNTech COVID-19 vaccine

அமெரிக்காவில் கடந்த அக்டோபர் முதலே ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கு இருந்ததுபோல தலைவலி, உடல்வலி, அசதி போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டன. வேறு பெரிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. விஞ்ஞானி ராபர்ட் மலோனே ஒருகாலத்தில் m-RNA தடுப்பூசிகள் குறித்த ஆய்வில் இருந்தவர்தான். ஆனால், m-RNA தடுப்பூசிகளால் மலோனே குறிப்பிடுவது போல் எவ்வித நிரந்தர ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதே அமெரிக்காவின் பல விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் ஒருமித்த கருத்து.

இந்தக் காணொளி குறித்து அமெரிக்க குழந்தை மருத்துவர்கள் அகாடமியைச் சேர்ந்த மருத்துவர் டெபோரா கிரீன்ஹவுஸ் கூறுகையில், ``மலோனே குறிப்பிடுபவை முற்றிலும் ஆதாரமற்றவை. குழந்தைகளின் முக்கிய உறுப்புகளுக்கு தடுப்பூசிகள் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கெல்லாம் ஆதாரமே இல்லை. அவர் கூறுவது போல் குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையே இல்லை என்று சொல்லிவிட முடியாது. இப்படிப் பொய்யான தகவல்களைப் பரப்பும் காணொளி முற்றிலும் ஆபத்தானது. இது போன்ற செயல்கள் சரியான மருத்துவ அறிவு இல்லாத பெற்றோரின் மனதில் பயத்தை உண்டாக்கும் " என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நல மருத்துவர் கண்ணன்

இந்தியாவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது பற்றி மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் கண்ணனிடம் கேட்டோம். ``தடுப்பூசிகள் செலுத்தப்படுவதை வைத்து Risk-Benefit ratio என்பதைக் கணக்கிடுவார்கள். அந்தக் கணக்கீட்டின்படி தடுப்பூசிகள் செலுத்துவதில் ஆபத்தைவிட பலன்கள் அதிகமாக இருந்தால் அதற்கு ஒப்புதல் கிடைக்கும். அந்த வகையில் கோவிட் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பாதிப்பு ஒன்றுமில்லை.

நாம் முதன்முதலில் பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கு காரணமே அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருந்ததால்தான். இனி படிப்படியாக சிறுவர்களுக்கு, குழந்தைகளுக்கு என‌ நாம் தடுப்பூசி செலுத்த வேண்டும். குழந்தைகளுக்குப் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்தான். ஏற்கெனவே நிறைய‌ குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அப்படி இருக்கும் குழந்தைகளின் உடலில் இயற்கையாகவே கொரோனாவிற்கு எதிரான‌ ஆன்டிபாடி உருவாகியிருக்கும். அப்படி எந்தெந்த குழந்தையின் உடலில் ஆன்டிபாடி உள்ளது எனக் கண்டுபிடிப்பது சாத்தியமில்லாத காரியம். எனவே‌ அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவாக தடுப்பூசி செலுத்துவதே அறிவுபூர்வமானது.

Children Vaccination

Also Read: புதுச்சேரி: `இனியும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பது மன்னிக்க கூடியதில்லை!’ - ஆளுநர் தமிழிசை

பெரியவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. தடுப்பூசிகளால் யாருக்கும் பெரிய ஆபத்து எதுவுமில்லை. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா வந்தாலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. அதனைத் தொடர்ந்து போதிய ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, தற்போதுதான் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கியுள்ளோம். தடுப்பூசி குறித்து எதிர்மறையான கருத்துகளை பலர் தெரிவித்தாலும் முறையான‌ ஆதாரங்கள் எதுவும் இல்லாதவரை அவை வதந்திகளே "என்றார்.



source https://www.vikatan.com/health/healthy/fact-check-on-viral-video-which-claims-m-rna-covid-vaccines-are-not-safe-for-children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக