Ad

செவ்வாய், 11 ஜனவரி, 2022

வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் என்ன கிடைக்கும்? - ஏ.பி.என் சுவாமிகள்!

மார்கழி மாதம் பெருமாள் வழிபாட்டுக்குக்குரியது. ஆண்டாள் மார்கழி முப்பது நாளும் பெருமாளை வழிபட வேண்டிய முறையை நமக்கு விளக்கியிருக்கிறாள். மார்கழியில் நோன்பிருந்தால் கிடைக்கும் பலன்களையும் ஆண்டாள் நாச்சியாரே சொல்லியிருக்கிறாள். பெருமாள் கோயில்களில் இந்த மாதம் உற்சவங்கள் களைகட்டும். அவற்றில் மிக முக்கியமானது வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி நாளில்தான் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அந்த நாளில் பெருமாளை தரிசனம் செய்தாலே பல்வேறு நற்பலன்கள் கிட்டும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட வைகுண்ட ஏகாதசி யின் சிறப்புகள் என்ன? அன்று பெருமாளை வழிபடுவதால் என்ன கிடைக்கும் என்பன குறித்து ஆன்மிகச் செயல்பாட்டாளர் அனந்த பத்மநாபாசார்யரிடம் கேட்டோம்.

”மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு இரண்டு விதமான ஆகமங்கள் உள்ளன. ஒன்று வைகானசம், மற்றொன்று பாஞ்சராத்ரம். இந்த இரண்டு ஆகம முறைகளின் படி மகாவிஷ்ணுவை வழிபடலாம். உதாரணத்துக்கு ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆலயங்கள் போன்றவை பாஞ்சராத்ர முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் கோயில்கள். திருப்பதி, திருவயிந்திபுரம் போன்றவை வைகானச ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்கள். இந்த இரண்டு ஆகமங்கள்தான் பிரமாணங்கள். அதாவது, வேதங்கள் எப்படியோ திவ்ய பிரபந்தங்கள் எப்படியோ அப்படி விஷ்ணுவின் பெருமையைப் பேசக்கூடியவை இந்த ஆகமங்கள் எனப்படும் பிரமாணங்கள்.

வரதராஜப் பெருமாள்

இந்த ஆகமங்களின் பெருமைகள் பிரம்ம சூத்திரத்தில் காணப்பட்டாலும் அவற்றுக்கான வியாக்யானங்களை ஆளவந்தார் அருளிச் செய்திருக்கிறார். இந்த ஆகமங்கள் விஷ்ணுவுக்கான பூஜைகள் குறித்துச் சொல்லிவரும்போது மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியைச் சிறப்பித்துச் சொல்கிறது. அதாவது விஷ்ணுவையும் விஷ்ணுவின் பக்த பிம்பங்களையும் (ஆழ்வார்களையும்) பத்து பத்து நாள்கள் உற்சவங்கள் செய்து கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதைத்தான் பகல்பத்து, ராப்பத்து என்று கொண்டாடி வருகிறோம். வளர்பிறை ஏகாதசிக்கு முந்தைய பத்து நாள்கள் பகல்பத்து உற்சவமாகவும் ஏகாதசி அன்று தொடங்கி பத்து நாள்கள் ராப்பத்து உற்சங்களாகவும் நடைபெறும்.

இந்த உற்சவத்தின் போது பெருமாள் வடக்கு வாசலின் வழியாகவே புறப்பாடு கண்டருள வேண்டும். அந்த வடக்குத் தோரண வாயிலே வைகுண்ட வாசல் என்று போற்றப்படும். அதைத்தான் பொதுவாக சொர்க்கவாசல் என்று சொல்கிறார்கள். அந்தக் கோயிலில் எந்த திசையில் வாசல் இருந்தாலும் இந்த உற்சவத்தின் போது புறப்பாடு வடக்குத் தோரண வாயிலான வைகுண்ட வாசலிலிருந்தே கண்டருள வேண்டும்.

ஏன் வைகுண்ட வாசல் புக வேண்டும்?

பெருமாள் வைகுண்ட வாசல் வழியாக எழுந்தருளும்போது அவரைப் பின் தொடரும் பக்தர்கள் அவரோடு வைகுண்டத்தில் பிரவேசிப்பார்கள் என்பதுதான் அதன் தாத்பர்யம். இறைவனின் அருளால் பக்தர்களுக்குப் பரம பதப் பிராப்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாகவே ஏகாதசி திதி என்பது விரதமிருந்து பெருமாளை வழிபட உகந்த தினம். அதிலும் மார்கழியில் வரும் சுக்லபட்ச ஏகாதசி ரொம்பவே சிறப்பு என்கின்றன புராணங்கள்.

மார்கழி மாதம் என்பது சம்வச்சர பிரம்ம முகூர்த்தம். அதாவது தேவர்களின் ஒரு நாளின் பின் இரவுப் பொழுது. நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் தட்சிணாயனம் என்றும் தை முதல் ஆனி முதலான மாதங்களை உத்தராயணம் என்று குறிப்பிடுவது வழக்கம். தட்சிணாயணம் தேவர்களின் இரவுப் பொழுது. உத்தராயணம் பகல் பொழுது. இதில் மார்கழி மாதம் என்பது பிரம்ம முகூர்த்தமாக அமைவது. பொதுவாக காலை 4.30 மணியை ஒட்டிய நேரம். அந்த பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் எழுந்து பெருமாளை வழிபடவேண்டும். ஹரி என்னும் பேரரவம் என்பாள் ஆண்டாள் நாச்சியார். அப்படி ஹரியைத் துதிக்க வேண்டிய வேளை பிரம்ம முகூர்த்தம். ஆண்டு முழுவதும் தினமுமே நாம் பிரம்ம முகூர்த்தத்தில் பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது விதி. அப்படிச் செய்தால் நமக்குப் பரமபதம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

அனந்த பதம்நாபாச்சார்யர்

ஆனால் அது அநேகருக்கும் சாத்தியமில்லை. அதற்கு மாறாக வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலை வேளையில் நாம் பெருமாளை வணங்கினால் அது ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனைத் தருவதோடு வைகுண்டப் பதவியையும் வழங்கும். அப்படிப் பட்ட வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பெருமாளை வழிபடுவதை உறுதி செய்யவே நம் முன்னோர்கள் அந்த நாளில் வைகுண்ட வாசல் திறப்பையும் அதுசார்ந்த வழிபாடுகளையும் பிரதானப் படுத்தினார்கள்.

மறுமையில் வைகுண்டம் மட்டும் அளிப்பவன் அல்ல பெருமாள். இம்மையிலும் நாம் கேட்கும் வரம் தரும் தயாளன். எனவே இந்த நாளில் தவறாமல் பெருமாளை வணங்கி அவனின் அருளைப் பெற்று மகிழ வேண்டும் என்று பக்தர்களைப் பிரார்த்திக்கிறேன்” என்றார் அனந்த பத்மநாபாசார்யர்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி

பொதுவாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் ஒரே நாளிலேயே வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சில உற்சவங்கள் தை மாதம் முதல் தேதியில் நடைபெற இருக்கும் காரணத்தால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் மட்டும் கார்த்திகை மாதமே வைகுண்ட ஏகாதசி பண்டிகையைக் கொண்டாடிவிட்டனர்.

ஸ்ரீரங்கம் தவிர்த்த பிற பெருமாள் கோயில்களில் 13.1.2022 அன்றே வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.


source https://www.vikatan.com/spiritual/functions/why-should-we-worship-lord-perumal-on-the-vaikuntha-ekadashi-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக