Ad

செவ்வாய், 11 ஜனவரி, 2022

திருப்பள்ளியெழுச்சி - 8: கல் ஒன்று கடவுளாகும்போது, கடவுளை வணங்கும் நாமும் கடவுளாகலாம் தானே!

கல் ஒன்று கைதேர்ந்த சிற்பியால் கடவுளாக மாறும்போது, கனிவான மனம் ஒன்றை நிச்சயம் சிவம், அதுவாகவே ஆக்கிக் கொள்ளும் எனலாம்.

"முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்

மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்

பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்

பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!

செந்தழல் புரை திருமேனியும் காட்டித்

திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி

அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்

ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!"

லிங்கம்

அகிலம் முழுதும் படைத்த நீயே முதலும் இறுதியும் நடுவுமாக இருந்து அருள்கிறாய்! பழையோனே, தேவரும் யாவரும் அறியவொண்ணா உன்னை நாங்கள் மட்டும் எப்படி அறிந்து கொள்ள முடியும்! மெல்லிய விரல்களைக் கொண்ட உமையம்மையின் துணைவனே, நீயும் உன் துணையும் அடியார்கள் உய்யும் வண்ணம் அவர்களின் இல்லங்களுக்கே எழுந்தருளும் கருணை கொண்ட தூயவனே! பக்தியால் உனைத் தொழுது அறிய விரும்பியவர்களுக்கு நீ அனலாக எழுந்து அருள் காட்டினாய். அழுதழுது உனைப் பற்றிக்கொள்ள துடித்தவருக்கு திருப்பெருந்துறை எனும் மோட்ச வீட்டைக் காட்டினாய்! மறையோனாக வந்து உன்னைக் காட்டி அருளிய என் தெய்வமே, திகட்டவே திகட்டாத ஆரமுதே! எங்களைக் காக்கும் பொருட்டு இங்கு எழுந்தருள வேண்டும் என் ஐயனே!

தியாகமே வடிவாகக் கொண்ட தெய்வம் ஈசன். அவன் மட்டுமே தியாகராஜன் என்று போற்றப்படுகிறான். எக்காலத்தும் நிலைத்து நிற்கும் சிவபெருமான், தேவர்களுக்குக் கூட அனலாக, பெரும் வெளியாக மட்டுமே காட்சி தந்துள்ளான். எவருமே அறிய முடியாத அந்த பரம்பொருள் அடியார்களுக்கு மட்டுமே நேரடியாக ஓடோடி வந்து அருள் தந்து காட்சி தந்துள்ளது. அரிவாட்டாய நாயனார், இளையான்குடி மாறனார், சிறுத்தொண்டர், விறன்மிண்ட நாயனார் என பலருக்கும் நேரில் தோன்றி அருள் செய்த அற்புத தெய்வம் ஈசன். அன்பெனும் சிறைக்குள் மட்டுமே அகப்பட்டுக் கொள்ளும் அந்த அருள் ஜோதி என்னையும் மறையோன் வடிவில் ஆட்கொண்டது. அதுமட்டுமின்றி பிறவிப்பெருங்கடலை நீந்த உதவும் திருப்பெருந்துறை எனும் அருள் கோயிலையும் அடையாளம் காட்டியது.

ஈசன்

ஈசன் மட்டும் வாதவூராரை ஆட்கொண்டிராவிடில் நமக்கு திருவாசகம் இல்லை. ஞான வழியில் பக்தி என்ற மார்க்கமும் கிட்டி இருக்காது. ஆணாகிப் பெண்ணாகி அனைத்துமாய் நிற்கும் ஈசன், மிக அழகாக மிகத் தெளிவாக இந்த உலகை இயக்கி வருகிறார். எந்த பந்தபாசத்துக்கும் அடங்கி நிற்காத அந்த பேரருள், அடியார்களின் நேசத்துக்கு அடங்கி நிற்கிறது. அவர்கள் அன்பு நெஞ்சத்துள் நிலைத்து வாழ்கிறது. நினைக்கும்தோறும் இன்பத்தை வழங்கும் சிவம் 'சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்...' என சிவனடியார்களின் சிந்தையில் வாழ்வதாக மாணிக்கவாசகர் கூறுவார். அப்படி அடியார்களின் மத்தியில் வாழும் ஈசன், மற்றவர் உய்யும் பொருட்டு இங்கே எழுந்தருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொருள். மேலும் முதன்மைப் பொருளான சிவத்தின் தன்மையாக உருகிப்போய் எழுதுவார்...

"ஆக்கம் அளவிறுதி இல்லாய், அனைத்துலகும்

ஆக்குவாய்; காப்பாய்; அழிப்பாய்; அருள்தருவாய்;

போக்குவாய்; என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே

மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே!"

சிவபுராணத்தின் இந்த ஐந்து வரிகளில் உருகிப் போய் நிற்கும் அத்தனை ஆன்மாக்களிலும் ஈசன் எழுந்தருளி நிற்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். திருவாசகத்தின் பாடல்களுக்கு உருகும் அத்தனை அன்பர்களின் நெஞ்சத்திலும் நிச்சயம் ஈசன் வாழ்கிறார் என்பதே உண்மை. அதுவே திருவாசகத்தின் பயன் என்றும் கொள்ளலாம். எளியவர்களின் இல்லங்களில் எழுந்தருளும் ஈசனுக்கு வேண்டியது என்று ஒன்றும் இல்லை. உங்களின் தூய்மையான இதயத்தைத் தவிர, ஈசன் வந்து செல்லும் கோயிலாக உங்கள் உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் போதும். எளியோர்க்கு எளியோனாக, ஏழைகளுக்கு ஏழையாக விளங்கும் ஈசன் நிச்சயம் உங்கள் இதயத்தில் குடி கொள்வான்.

ஈசன்

ஈசன் குடி கொண்ட உள்ளம், மாசு மருவில்லாத வாழ்க்கையை மேற்கொள்ளும். அதனால் ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு சிவசாரூபமும் கொள்ளும். இதுவே சைவ சித்தாந்தம் சொல்லும் அடிப்படை. மற்ற தெய்வங்களை வணங்கினால் சில சில பயன்கள் கிட்டலாம். சிவத்தை வணங்கினால் மட்டுமே சிவமாகவே மாறவும் முடியும். கல் ஒன்று கைதேர்ந்த சிற்பியால் கடவுளாக மாறும்போது, கனிவான மனம் ஒன்றை நிச்சயம் சிவம், அதுவாகவே ஆக்கிக் கொள்ளும் எனலாம். அதையே மாணிக்கவாசகர்,

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட

அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே!"

முக்தி நெறிக்கு வரும் எல்லா ஆன்மாக்களும் சிவமாகும் என்பதை அறுதியிட்டுக் கூறிவிட்டார் மணிவாசகர். அதனால் சித்தமலம் எனும் குற்றமான எண்ணங்களை விட்டுவிட்டு சிவத்தின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் சிவத்தோடு நெருங்கி, சிவமாக மாறலாம் என்பது நிச்சயம். மார்கழியின் இந்த அதிகாலையில் நம் தேவனாம் சிவனைத் துதித்து அவனுக்குப் பிரியம் ஆவோம். எங்களைக் காக்கும் பொருட்டு இங்கு வந்து எழுந்தருள வேண்டும் ஈசனே! என்கிறார் வாதவூர் வள்ளல்.



source https://www.vikatan.com/spiritual/gods/margazhi-utsavam-day-28-thiruppalliezhuchi-song-28-by-manickavasagar-worshipping-thiruperunthurai-lord-siva

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக