Ad

புதன், 5 ஜனவரி, 2022

`இனி புகாருக்கு இடம் அளிக்க கூடாது!’ - நன்றி தெரிவிக்க வந்தவர்களிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி தஞ்சையில் அறிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்க, இந்தச் சங்கங்களின் நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்தார்கள். அப்போது சங்கங்களின் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஓர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதால், விவசாயிகளின் பணம் சுரண்டப்படுவதாக கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது. ஆனால் இதுகுறித்து பேசும் நெல் கொள்முதல் நிலையோ ஊழியர்களோ, தங்களுக்கு மிகவும் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதால்தான், தாங்கள் இத்தகைய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாக ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில்தான் கடந்த டிசம்பர் 30-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, மாத ஊதியமாக பட்டியல் எழுத்தருக்கு ரூ.5,285, உதவியாளர்களுக்கு ரூ.5,218 என உயர்த்தி வழங்கப்படும். இதில், அகவிலைப்படி ரூ.3,499-ம் சேர்த்து வழங்கப்படும். இதேபோல, சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.3.25 என்பது ரூ.10 என உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது” என தெரிவித்தார். இந்நிலையில்தான் இவர்களது நீண்ட கால கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளதாக இச்சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்

முதல்வர் ஸ்டாலின்

மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஏஐடியுசி தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சி.சந்திரகுமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சண்முகம், அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் மா. பேச்சிமுத்து, மாநில பொதுச் செயலாளர் வள்ளுவன், ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர்.சாமிக்கண்ணு, மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் சென்றனர்.

அப்போது தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டவர்கள் உடனிருந்தார்கள். ``நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச சம்பள சட்டப்படியான சம்பளம் வழங்கப்படாமல் சென்ற ஆட்சியில் காலம் கடத்தப்பட்டு அமல்படுத்தாமல் அநீதி இழைக்கப்பட்டது. தற்போது இது அமல்படுத்தப்படுத்தப்பட்டிருப்பது மகழ்ச்சிக்குரியது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூன்று மடங்கு கூலி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது’’ என இச்சங்கங்களின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

Also Read: `ஊதியம் உயர்த்துவதால் மட்டுமே ஊழல் ஒழிந்துவிடாது முதல்வரே!' - நெல் கொள்முதல் நிலைய நிலவரம்

அப்போது இவர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``மிகுந்த நிதி நெருக்கடியிலும் கூட விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலன் காக்கும் விதத்தில் ஊதிய உயர்வு அறிவித்துள்ளோம். இனி, புகார்களுக்கு இடமின்றி குறைபாடுகள் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும்’’ என கண்டிப்புடன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு தொழிற்சங்க நிர்வாகிகளோ, ``குறைபாடுகள் இன்றி கொள்முதல் செய்வதற்கான முழு முயற்சி மேற்கொள்ளப்படும்” எனவும் குறைகளைக் களைய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள்ளப்படும் எனவும் உறுதி அளித்திருக்கிறார்கள். இந்த சந்திப்புக்கு பின்னராவது, விவசாயிகளுக்கு விடிவு பிறக்கட்டும்.



source https://www.vikatan.com/news/politics/stalin-request-to-union-members-who-were-went-to-thank-him-for-salary-hike-announcement

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக