Ad

புதன், 5 ஜனவரி, 2022

திண்டுக்கல்: `ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருகிறேன்!’ - மோசடி வழக்கில் பெண் சாமியார் கைது

திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியில் வசித்து வருபவர் பபிதா என்ற பவித்ரா. இவர் தான் காளி என்றும் தனக்கு காளியின் பரிபூரண அருள் இருப்பதாக கூறி ஆசி வழங்கி வருகிறார். திண்டுக்கல்லில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் விடுதியில் தான் காளி என்று கூறி தன்னிடம் ஆசி பெற்றுக் கொள்ளுமாறு விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் பல்வேறு இடங்களில் ஆசி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து மக்கள் அருள் புரிவதாக கூறி தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியாரிடம் கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி 5.50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 60 சவரன் தங்க நகையை பெற்றுள்ளார். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தவயோகி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பவித்ராவை தேடிவந்தனர்.

பவித்ரா

இந்நிலையில் கடந்த ஆறு மாத காலமாக தேடப்பட்டு வந்த பவித்ரா திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெரு பகுதியில் உள்ள அவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக நிலக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நிலக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குரு வெங்கட் மற்றும் சார்பு ஆய்வாளர் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையினர் திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா கோவில் தெருவில் அவரின் வீட்டில் தங்கியிருந்த பவித்ரா, அவரின் தங்கை ரூபாவதி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நிலக்கோட்டை அழைத்துச் சென்றனர்.

அண்மையில் அன்னப்பூரணி அரசு அம்மா என்ற பெயரில் ஒரு பெண் ஆசி வழங்கவதாகக் கூறி வைரல் ஆனார். இந்நிலையில் திண்டுக்கல்லில் பெண் சாமியார் மோசடி வழக்கில் போலீஸாரால் கைது செய்து அழைத்துச் சென்ற விவகாரத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



source https://www.vikatan.com/news/crime/female-preacher-arrested-in-fraud-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக