Ad

வியாழன், 6 ஜனவரி, 2022

டாஸ்மாக் கடைகள் மீது கை வைக்காமல், புதிய கொரோனா கட்டுப்பாடுகள் சரியா?!

இந்தியாவில் கொரோனா முதல் அலையின் தாக்கத்தை விட, இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. பாதிப்பு எண்ணிக்கை யாருமே நினைத்துப் பார்த்திடாத வகையில் மிக அதிகமாகக் காணப்பட்டது. தலைநகர் டெல்லி முதல் தமிழகம் வரை கொரோனா தொற்று பாதிப்பு கடுமையாக இருந்தது. ஒரு கட்டத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இடம் கிடைக்காது மருத்துவமனை வாசலில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலமும் நடந்தது.

கொரோனா பாதிப்பு

இரண்டாம் அலையின் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்ததற்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவல் தான் காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த வகை வைரஸ் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையின் தாக்கம் மெல்ல மெல்லக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் தற்போது உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமைக்ரான் வைரஸ், தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் அதிவேகமாகப் பரவிவருகிறது. இந்த வகை வைரஸ் அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றாலும், டெல்டா வகை வைரஸ் போல அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த வகை வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இந்த வகை பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,000-யை தாண்டியுள்ளது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட பலரும் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 121 நபர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 110 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களில் சிலர் வீட்டுத் தனிமையில் இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாகச் சென்னையில் மட்டும் 93 நபர்களுக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஒமைக்ரான்: டெல்லி முதல் கர்நாடகா வரை... இரவு நேர ஊரடங்கு அமல்! - தமிழகத்தில் இப்போது அவசியமா?

தமிழகத்தில் கடந்த வாரத்தைப் பொறுத்தவரை நாளொன்றுக்கு 600 நபர்களுக்குப் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது. தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 4,862-க்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. குறிப்பாகச் சென்னையில் மட்டும் 2,481-க்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. தற்போதைய நிலையில், 16,577 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதில் சென்னையில் மாட்டும் 7,878 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1,711 பேரும், கோவையில் 1,089 பேரும் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

முதல்வர் ஆய்வு

கடந்த சில நாள்களாகத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், மற்றும் அந்த துறை சார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில், தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை ஐந்து மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, உணவகங்கள், திரையரங்குகள் போன்ற பல்வேறு இடங்களில் இருக்கை கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிலை என்ன?

இரவு ஊரடங்கு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் விற்பனை நேரம் குறைப்பது தொடர்பாகவோ, பார்களின் நேரம் குறைப்பது, தடை விதிப்பது குறித்தோ, அந்த 15 பக்க அறிக்கையில் எந்த வித அறிவிப்பும் இடம்பெறவில்லை. வழிபட்டு தலங்களுக்கும், திரையரங்குகளிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவந்துள்ள நிலையில், டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மே 7-ம் தேதியில் அன்றைய அதிமுக அரசு, தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் டாஸ்மாக் திறக்க அனுமதி வழங்கியது. டாஸ்மாக் திறப்பதைக் கடுமையாக எதிர்த்தது அன்றைய திமுக.

``கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், நிவாரணம் - மீட்பு - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமல், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம்!" இதைக் கூறியவர் அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான். ``இந்த கொரோனா ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழர்களின் #குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்'' என்று கூறியவர் உதயநிதி ஸ்டாலின். பள்ளி, கல்லூரிகளை மூடியிருக்கும் நிலையில், டாஸ்மாக் மட்டும் திறந்திருப்பது எந்த வகையில் நியாயம் என்றும். எதிர்க் கட்சியாக இருந்த நேரத்தில் டாஸ்மாக் திறப்பதைக் கடுமையாக எதிர்த்து போராட்டம் செய்த கட்சி, இப்போது அதையே செய்துவருகிறது என்றும் நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினரும் விமர்சனம் செய்துவருகிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/omicron-spreading-fast-still-no-restrictions-against-tasmac

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக