Ad

செவ்வாய், 11 ஜனவரி, 2022

அனுமதியின்றி மதுரையில் அணுசக்தி துறை ஆராய்ச்சி; எதிர்க்கும் கிராம மக்கள்; என்ன நடக்கிறது?

ஊராட்சி நிர்வாகத்திடமோ, ஊர் மக்களிடமோ எந்தத் தகவலும் சொல்லாமல் அணுசக்தி துறை அதிகாரிகள் தங்கள் பகுதியில் ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

கம்பூர்

Also Read: புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம்... பின் ஏன் அணுசக்தி? #MustRead

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சிகுட்பட்ட பகுதியில் சில நாள்களுக்கு முன் அதிகாரிகள் அப்பகுதியில் அமைந்துள்ள மலைகளை உடைத்து ஆராய்ச்சி செய்தபோது அப்பகுதி இளைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாங்கள் அணுசக்தி துறை அதிகாரிகள் என்றும், அரசு அனுமதியுடன்தான் ஆய்வு செய்ய வந்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்காமல் எப்படி ஆய்வு செய்யலாம் என்று வாதம் செய்த ஊர்மக்கள், அவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்ய ஒப்புக்கொள்ளவில்லை.

மலையில் செய்யப்பட்ட ஆய்வு

அதைத்தொடர்ந்து அந்த அதிகாரிகள் அருகிலுள்ள அய்யவத்தான்பட்டிக்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். அங்கும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கலெக்டரிடம் அனுமதி வாங்கிவிட்டு வருகிறோம் என்று சொல்லி அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் பதற்ற மடைந்துள்ளனர். தங்கள் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறார்கள்.

இது குறித்து கம்பூர் இளைஞர் அமைப்பைச் சேர்ந்த செல்வராஜிடம் பேசினோம். ``இரண்டு வருடங்களுக்கு முன் இப்படித்தான் ஆய்வு செய்வதாக ஒரு குழு எந்தவொரு அனுமதியும் இல்லாமல் இங்கு செயல்பட்டனர். அப்போதும் அவர்கள் எந்த விவரமும் சொல்லவில்லை.

கம்பூர் செல்வராஜ்

டெல்டா மாவட்டத்தில் விவசாயத்தை அழிக்க வந்த மீத்தேன், ஹைட்ரோ கார்பன், திட்டங்களைப் போல இங்கேயும் எடுக்க வந்ததாகக் கேள்விப்பட்டு தொடர்ந்து ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தி அதை நிறுத்தினோம்.

இப்போது அணுசக்தி ஆராய்ச்சி என்ற பெயரில் எங்கள் பகுதி மலைகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் நல்ல நோக்கத்துக்காக ஆய்வு செய்ய வருகிறார்கள் என்றால் ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அதிகாரியிடம் முறையாகத் தகவல் சொல்லி ஆய்வு செய்யலாமே, அதைச் செய்யாமல் அவர்கள் இஷ்டத்துக்கு மலைகளை உடைத்து வருகிறார்கள்.

மிகவும் பின் தங்கிய பகுதியான இங்கு தட்டுத்தடுமாறித்தான் விவசாயம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கும் ஆபத்து ஏற்படுத்துவது போல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் உள்ளது.

கேட்ட பின்புதான் கலெக்டரிடம் அனுமதியோடு வருகிறோம் என்கிறார்கள். வெறும் ஆராய்ச்சி என்றால் ஊராட்சி நிர்வாகத்துக்கும், ஊர் மக்களிடமும் விளக்கி சொல்லிவிட்டு ஆய்வு செய்யலாமே. இதன் பின்னால் ஏதோ திட்டமிருப்பதுபோல் தெரிகிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலிருந்து தொடங்கி கொட்டாம்பட்டி வழியாக மதுரை அருகேயுள்ள மீனாட்சிபுரம் வரை மலைகளை ஆய்வு செய்ய உள்ளதாக சொல்கிறார்கள். இதிலுள்ள சாதக பாதகங்களை அரசு எங்களுக்கு விளக்க வேண்டும். கலெக்டர், எம்பி, எம்.எல்.ஏவிடம் முறையிட உள்ளோம்" என்றார்.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

இந்திய அணுசக்தித்துறையின் இன்னொரு பிரிவான அணு கனிம இயக்குனரகம் சார்பில் அணு சக்திக்கு தேவையான கணிம வளங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வை தமிழகத்தில் புதுச்சேரி, கடலூர் பகுதியிலும், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது சிங்கம்புணரி, கொட்டாம்பட்டியிலிருந்துமதுரை வரையிலும் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

கலெக்டர் அனீஷ் சேகர்

Also Read: மணலுக்கும் ஜல்லிக்கும் தரச்சான்றிதழ் தந்து விற்கும் மதுரை நிறுவனம்!

கம்பூர் பகுதி மக்களின் அச்சம் பற்றியும், இந்த ஆய்வுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதா என்றும் மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் ஐ.ஏ.எஸ்ஸிடம் கேட்டோம். ``இப்போதுதான் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்கள். இது ஆய்வு சம்பந்தப்பட்ட பணிதான். அச்சப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை. ஆனாலும், தீர விசாரித்த பின்பு அனுமதி அளிக்கப்படும்" என்றார்.

எந்த திட்டமாக இருந்தாலும் மக்களிடம் தெளிவுபடுத்தி செய்தால் சிறப்பாக அமையும்.



source https://www.vikatan.com/social-affairs/environment/madurai-village-people-oppose-atomic-energy-research-carried-out-without-permission

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக