Ad

புதன், 12 ஜனவரி, 2022

ராகுலைத் தேடும் காங்கிரஸ் - தேர்தல் அறிவிப்புக்குப் பின்பும் வெளிநாட்டிலிருந்து திரும்பாதது ஏன்?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 27-ம் தேதி சொந்த அலுவல் காரணமாக ஐந்து நாள் பயணமாக இத்தாலி சென்றார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும் எனவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 7-ம் தேதி இருக்கும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருப்பது கட்சியினரிடையே முணுமுணுப்பைக் கிளப்பியிருக்கிறது. மேலும், பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட்டில் காங்கிரஸுக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ராகுல் காந்தி வெளிநாடு சென்றிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஜனவரி 3-ம் தேதி பஞ்சாப்பின் மொகாவில் காங்கிரஸ் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடியும் ஜனவரி 5-ம் தேதி இங்கு நடைபெற இருந்த கூட்டத்தில் பேசுவதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் இந்த இரு கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் ராகுல் காந்தி ஜனவரி 15-ம் தேதி இங்கு பிரசாரம் செய்வார் எனத் தேதி குறிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் ராகுல் காந்தி தனது வெளிநாட்டுப் பயணத்தை நீட்டித்திருப்பதால் அந்தக் கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராகுல் தேர்தல் பரப்புரையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அது காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

ப்ரியங்கா, ராகுல்

கட்சிக்காக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ராகுல் காந்தி இருக்கிறார். ஆனால், இந்த நேரத்தில் தனது வெளிநாட்டுப் பயணத்தை நீட்டித்திருக்கிறார். மிக முக்கியமான காலகட்டத்தில் கட்சிப் பணியை விட்டு ராகுல் தனது வெளிநாட்டுப் பயணத்தை நீட்டித்துக்கொண்டே இருப்பதற்கான காரணம் என்ன என விசாரித்தோம்...

Also Read: பாஜக - 2; காங்கிரஸ், ஆம் ஆத்மி எத்தனை? - ஐந்து மாநிலத் தேர்தல் களத்தில் முந்துவது யார்?!

``தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் பஞ்சாப்பில் தன் ஆட்சியைத் தக்க வைப்பதுடன், உத்தரகண்ட் மற்றும் கோவாவில் விட்ட ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் காங்கிரஸுக்குத் தற்போது பிரகாசமாக உள்ளன. உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது முதல் பம்பரம் போலச் சுழன்று தேர்தல் பணிகளைப் பார்த்து வருகிறார். எனவே, அங்கு ராகுலின் தேவை அதிகமிருக்காது. ஆனால், மற்ற மூன்று மாநிலங்களில் ராகுலின் வருகை, பிரசாரம் உள்ளிட்டவை தேர்தல் வெற்றியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை அளிக்கும் எனக் கட்சியினர் கருதுகின்றனர். இப்படியான நேரத்தில் கட்சி நடவடிக்கைகளிலிருந்து ராகுல் காந்தி விலகியிருப்பது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கும் ராகுல் குறித்து பதிலளிப்பதே டெல்லி தலைமையின் பெரும் பணியாகிவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால் மாநிலத் தலைவர்களே வேட்பாளர் தேர்வில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனாலும் இறுதி அறிவிப்பு டெல்லி தலைமையிடமிருந்துதான் வரவேண்டும். இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியாகும் முன்பாவது ராகுல் காந்தி இந்தியா வந்துவிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

பிரியங்கா காந்தி பிரசாரம்

ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பு வெளியாகியும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் பயணத்தை ரத்து செய்து திரும்பாமல் இருப்பதால் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்” எனக் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பதவியிலிருக்கும் சிலர் ராகுலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விரக்தியோடு பதிலளிக்கின்றனர்.

``உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் இந்தியாவுக்கான சர்வதேச விமானச் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இத்தாலியிலிருந்து ராகுல் காந்தி இந்தியா வருவதில் தொடர்ந்து சிக்கல்கள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் ராகுல் காந்தி இந்தியா வராமல் தனது பயணத்தை நீட்டித்துக்கொண்டிருக்கிறாரே தவிர வேறு காரணங்கள் ஏதுமில்லை. ராகுல் காந்தி வெளிநாட்டில் உள்ள போதிலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தொடர்பிலேயே இருக்கிறார். ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு முக்கிய சமயங்களில் செல்வது முதன்முறையல்ல. டிசம்பர் 2020-ல் கடைசி வாரத்திலும் இத்தாலிக்குச் சென்றிருந்தார். அக்டோபர் 2019-ல் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார். 2015-ல் பிப்ரவரி 16-ல் ஆசிய நாடுகளுக்குக் கிளம்பிய ராகுல் 60 நாள்களுக்குப் பின் நாடு திரும்பி இருந்தார். எனவே, இது வழக்கமான ஒன்றுதான். இத்தாலியிலிருந்து ராகுல் காந்தி வந்தாலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரத்துக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவு இருக்கிறது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி திரும்பி வந்தாலும் சில காலம் கழித்தே பிரசாரத்தில் கலந்து கொள்வார். ஆனால், நிச்சயம் பிரசாரத்தில் கலந்து கொள்வார். தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் ராகுலின் வெளிநாட்டுப் பயணத்தைச் சர்ச்சைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்” என்கின்றனர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-did-rahul-gandhi-still-didnt-come-to-india-even-after-the-election-announced

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக