Ad

சனி, 1 ஜனவரி, 2022

பத்ம விருதுகளின் கதை உங்களுக்குத் தெரியுமா?! | ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 2

போற்றத்தகுந்த சேவைகளும் துறை சார்ந்த பெரிய பங்களிப்புகளும் வழங்கிய தன் குடிமக்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவிக்குது. இந்த விருதுகளை பொதுவா பத்ம விருதுகள்ன்னு சொல்வாங்க. இந்த விருதுகளை, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், 1954 ஜனவரி 2 அன்றுதான் அறிமுகப்படுத்தினார். 68 ஆண்டுகளுக்கு முன்னால இதே நாள்லதான் அந்த கௌரவமிக்க விருதுகள் முதல்முறையா அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதா பாரத ரத்னா விளங்க, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் தேசத்தோட அடுத்தடுத்த பெரிய விருதுகளா திகழுது.

அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, பண்பாடு, இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை, சமூக நலம்ன்னு பல்துறைகள்ல சிறந்த முறைல பணியாற்றியவங்களுக்கு, சேவை செய்தவங்களுக்கு, பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருது.

இந்தியப் பிரதமரால் ஒவ்வோர் ஆண்டும் அமைக்கப்படும் பத்ம விருதுகள் கமிட்டி தர்ற பரிந்துரைகள் அடிப்படையில விருதுகள் அறிவிக்கப்படும். இந்தக் குழுவுக்கு அமைச்சரவை செயலாளர் தலைமை வகிப்பார். உள்துறை செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர் தவிர, நான்கு முதல் ஆறு பிரபலங்கள் உறுப்பினர்களாக இருப்பாங்க. இக்குழு தேர்வு செய்யிற பரிந்துரைகள் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவங்க பத்ம விருதாளர்கள் பட்டியல இறுதி செய்வாங்க.

பாரத ரத்னா

இனம், தொழில், பதவி, பாலினம் வேறுபாடின்றி தகுதிவாய்ந்த எல்லோருக்குமே பத்ம விருதுகள் வழங்கப்படுறதுண்டு. ஒருவர் தனக்காகவும் விண்ணப்பிக்கலாம்; பிறரையும் பரிந்துரைக்கலாம். உயிரிழந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குவது பெரும்பாலும் தவிர்க்கப்படுது. அதே நேரம், மிக தகுதி வாய்ந்த நபரா இருந்தா, அவர் இறந்து ஓராண்டு நிறைவடையாத நிலையில அவர் பெயரைப் பரிந்துரைக்கலாம். பொதுத்துறை நிறுவனங்கள் உள்பட அரசுத் துறைகள்ல வேலை பார்க்கிறவங்களுக்குப் பத்ம விருதுகள் வழங்கப்படுறதில்ல. மருத்துவர்கள், விஞ்ஞானிகளுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு அளிக்கப்படுறதுண்டு.

மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவங்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில சேவையாற்றியவங்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், எந்தத் துறையிலயும் தலைசிறந்து பணியாற்றியவங்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்படும். இந்த விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்டு, மார்ச் - ஏப்ரல் மாதங்கள்ல குடியரசுத் தலைவர் மாளிகையில நடக்குற பிரமாண்ட விழாவில வழங்கப்படுது.

Also Read: ஆங்கிலப் புத்தாண்டும், அதன் மாதங்களும் உருவான கதை! ஒன்று, இன்று, நன்று - டெய்லி சீரிஸ் - 1

பத்ம விருதுகள் பெறுபவர்களுக்கு பணபலன் எதுவும் கிடையாது. விதி எண் 18-1-ன்படி இந்த விருது வாங்குறவங்க, தங்கள் பேருக்கு முன்னாடியும் பின்னாடியும் இவ்விருதோட அடைமொழியை பயன்படுத்தக்கூடாது. 1954-ல இருந்து ஒவ்வொரு வருஷமும் விருதுகள் வழங்கப்பட்டுவந்தாலும், 1978-79க்கான விருதுகள் அறிவிக்கப்படவும் இல்லை வழங்கப்படவும் இல்லை. 1993 முதல் 1997 வரையிலான ஆண்டுகள்லயும் விருதுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்துச்சு.

1954-ல் முதல் பத்ம விபூஷன் விருது, சத்யேந்திர நாத் போஸ், நந்தலால் போஸ், வி.கே.கிருஷ்ண மேனன் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்பட்டுச்சு. 2020 வரை 314 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டிருக்கு. இந்திராகாந்தியின் முதன்மைச் செயலாளரா இருந்த பி.என். ஹஸ்கர், சித்தார் கலைஞர் விலாயட் கான், கேரளாவின் முதல் முதலமைச்சர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், பத்திரிகையாளர் எம்.சி.ராவ் உள்ளிட்ட 5 பேர் விருதைத் திருப்பி அளிச்சுட்டாங்க.

பத்ம விருதுகள்
முதல் பத்மபூஷன் விருது ஹோமி பாபா, சுகுமார் சென், அமர்நாத் ஜா உள்ளிட்ட 23 பேருக்கு, 1954ல வழங்கப்பட்டுச்சு. அதுல கே.எஸ்.கிருஷ்ணன், ஏ.லக்‌ஷ்மண சுவாமி முதலியார், எம்.எஸ்.சுப்புலஷ்மி ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவங்க. பீர் பான் பாட்டியா, மதுரா தாஸ், பாக் மேத்தா உள்ளிட்ட 17 பேருக்கு முதல் வருஷத்துல பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கு.

சில ஆண்டுகளுக்கு முன்புவர இந்த விருதுக்குத் தகுதியானவங்களை, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் பரிந்துரை செய்வாங்க. பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, அதில் தகுதியானவங்கள மத்திய அரசு தேர்வு செஞ்சு, விருதுகளை அறிவிக்கும். ஆனா, சமீப ஆண்டுகளாக இதுவரை அடையாளம் காணப்படாத, புகழ் வெளிச்சத்துக்குள்ள வராத, அதே நேரம் தங்கள் துறையில் சத்தமில்லாமல் மிகப்பெரிய சாதனைகள நிகழ்த்திய நபர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுவருது. இந்த ஆண்டும், அடிமட்ட அளவில் தன்னிகரற்ற சேவையை அளித்து பெரிதும் பிரபலம் அடையாதவர்களை பத்ம விருதுக்குப் பரிந்துரைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.



source https://www.vikatan.com/news/india/the-story-and-history-of-indias-one-of-the-highest-civilian-honors-padma-awards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக