விகடனின் Doubt of Common Man பக்கத்தில் கலைச்செல்வன் என்ற வாசகர், "ரயில் தண்டவாளங்களில் ஜல்லிக் கற்கள் போடுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
ரயில் பயணங்களின் போதும், ரயில்வே கிராஸிங்குகளைக் கடக்கும் போதும், தண்டவாளங்களில் ஜல்லிக் கற்கள் போடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஏன் ஜல்லிக்கற்களை தண்டவாளத்தில் போட்டு வைத்திருக்கிறார்கள் என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா?! நமது வாசகர் ஒருவருக்கும் அப்படியான ஒரு யோசனை வந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.
இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்
ரயில் தண்டவாளங்களில் ஏன் ஜல்லிக் கற்களைப் பயன்படுத்துகிறார்கள் எனக் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தோம். ரயில் தண்டவாளங்களில் போடப்படும் கற்களுக்கு 'Track Ballast' என்று பெயர். தண்டவாளங்களில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு ஒன்றல்ல, பல காரணங்கள் இருக்கின்றன. ரயில் தண்டவாளங்களை வைப்பதற்கான தளமாக இவை உருவாக்கப்படுகின்றன. அதாவது தரையின் மேலே கற்களைக் கொட்டித் தளம் அமைத்து அதன் மேலேயே ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.
குறைந்தபட்சம் 6 இன்ச் அள இந்த கற்களைக் கொட்டித் தளம் அமைப்பார்கள். நிலத்தின் தன்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப தளத்தின் அளவும் மாறுபடும். சுற்றுப்புறத்தில் நிறைய கட்டடங்களைக் கொண்ட இடம் என்றால் குறைந்தபட்சம் 12 இன்ச் அளவுக்காவது இந்தக் கற்தளம் அமைக்கப்பட்டிருக்கும். 12 இன்ச்சுக்கு மேல் இருந்தால்தான், ரயில் ஓடும்போது ஏற்படும் அதிர்வுகளை இந்தக் கற்தளம் தாங்கிக் கொள்ளும். அதற்கும் கீழே அமைக்கப்பட்டிருந்தால் ரயில் பாதைக்கு அருகில் இருக்கும் கட்டடங்களுக்குச் சேதாரம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிவேக ரயில்கள் பயணிக்கும் ரயில் தண்டவாளங்களில் 20 இன்ச் வரை கூட இந்தக் கற்தளம் அமைக்கப்படும்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்
இந்தக் கற்களின் முக்கியமான பணி ரயில் தண்டவாளங்களைப் பாதுகாப்பதுதான். தொடர்ந்து பல ரயில்கள் தண்டவாளத்தில் ஓடினாலும், அதன் அதிர்வைத் தாங்கிக் கொண்டு தண்டவாளங்கள் அதன் இடத்தில் இருந்து விலகாமல் பார்த்துக் கொள்வது இந்தக் கற்கள்தான். ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் அதிக நேரம் மூழ்கி இருக்க நேர்ந்தால் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மழைக் காலங்களில் ரயில் தண்டவாளங்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் இந்தக் கற்கள்தான். இந்தக் கற்கள் ஒரு வடிகாலாகச் செயல்பட்டு எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளும். ரயில் தண்டவாளங்களில் களைகளும் தேவையற்ற செடிகளும் வளராமல் தடுப்பதும் இந்தக் கற்களின் பிரதான வேலைதான். இந்தக் கற்கள் ரயில்கள் தண்டவாளத்தில் ஓடும்போது ஏற்படும் சத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
எல்லாக் கற்களையும் ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்த முடியாது. அதில் பயன்படுத்தக்கூடிய கற்கள் கரடுமுரடாக இருக்க வேண்டும், கூர்மையான முனைகளைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் அதன் அளவும் மிகவும் சிறியதாகவோ பெரிதாகவோ இல்லாமல் சரியான அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் மேற்கூறிய படி அதன் செயல்பாடுகள் இருக்கும். தண்டவாளங்களைப் போல இந்தக் கற்களையும் சீரிய இடைவெளியில் பராமரிக்க வேண்டும். இதனைப் பராமரிப்பதற்கென்றே Ballast Cleaning Machines (BCM) என்ற இயந்திரம் ஒன்றும் இருக்கிறது. மேலும், குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பழைய கற்கள் நீக்கப்பட்டு புதிய கற்கள் பயன்படுத்தப்படும்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
source https://www.vikatan.com/oddities/miscellaneous/doubt-of-common-man-what-is-the-purpose-of-track-ballasts
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக