விகடன் வாசகர்களுக்கு வணக்கம். வாசகர்களுக்கு சுவாரஸ்யமான தகவல்களையும், உறுதிப்பட்ட தரவுகளையும் வழங்குவதில் விகடன் எப்போதும் முன்னணியில் நிற்கும். தற்போது விகடன் இணையதளத்தின் வழியே அப்படியானதொரு அனுபவத்தை மீண்டும் வழங்கவிருக்கிறோம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை புதிய தொடர்கள் வெளிவரவிருக்கின்றன. சமூகத்துக்காக களத்தில் நின்று அறத்தின் குரலாக ஒலிக்கும் மனிதர்கள், வாழ்வின் நிதர்சனங்களை உணர்த்தும் புனைவுகள், பயணங்களின் வழியே கண்டடைந்த மானுடத்தின் தரிசனம் என பலதரப்பட்ட தளங்களில் புதிய தொடர்கள் 20-09-2021 முதல் விகடன் இணையதளத்தில் www.vikatan.com வெளிவரவிருக்கின்றன.
திங்கள்கிழமை:
இவர்கள் - லஷ்மி சரவணகுமார்
``பிரபஞ்சம் எல்லா உயிர்களுக்குமானது. இந்தப் பிரபஞ்சத்தைச் சிதைக்காமல் பாதுகாக்க வேண்டுமென்பதற்காகத்தான் இயற்கை மனிதனை அறிவு மிக்கவனாகப் படைத்தது. நம்மையறியாமலேயே நாம் நுகர்வின் மீது பேரார்வம் கொண்டவர்களாக மாறிப்போயிருக்கிறோம். நுகர்வு வெறி நம்மை சுயநலமிக்கவர்களாக மாற்றி, சமூகத்தின் மீதான அவதானங்களும் அக்கறைகளும் அற்றவர்களாக மாற்றிவிட்டது. சுயநலமிக்க இந்தச் சமூகத்திலிருந்து விலகி, எந்த வெளிச்சத்தையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக ஏதோவொரு வகையில் களத்தில் நின்றுகொண்டிருப்பவர்களையும், எளிய மனிதர்களாகயிருந்து பெரும் போராட்டங்களைக் கடந்து மேலே வந்தவர்களையும் அடையாளப்படுத்தவிருக்கும் தொடர் இது. நம்பிக்கையின்மை தீராத நோயைப்போல் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கும் வேளையில் நம்பிக்கையை விதைக்கும் மனிதர்களை அறிந்துகொள்வது அவசியமானது. வாழ்வையும் சமூகத்தையும் உற்றுநோக்குவதற்காக உங்களை விரல்பிடித்து அழைத்துச் செல்லும் எளிய முயற்சிதான் இந்தத் தொடர்." - லஷ்மி சரவணகுமார்
செவ்வாய்க்கிழமை:
செம்பா - மாயா
``வழமையெனும் வரம்பைத் தாண்டுகிற கதைகளை மானுடம் எப்போதும் மறப்பதில்லை. கற்பனைச்சுவை கூட்டி அக்கதைகளைக் காலங்காலமாகப் பேசிக்களித்து பண்பாட்டுப் பொதிக்குள் பொதிந்துவைத்துக்கொள்கிறது. வரலாறு சொல்ல மறந்த பல கதைகள் வாழ்ந்திருப்பது இதனால்தானே! செம்பாவின் கதையும் அப்படியானதொன்றுதான். அது வரலாறல்ல. அது கல்லில் வடிக்கப்பெறவில்லை. அது கடல் தாண்டி வேறொரு நிலத்தின் காற்றில் வரையப்பட்டிருக்கிறது.கடல் தாண்டிக் கிளைத்த தமிழ் வேர்களுள் ஒரு சிறு துண்டு. எனினும், தமிழ்நிலத்துக்கும் கொரிய தீபகற்பத்துக்குமான உறவைத் துல்லியமாகப் பறைசாற்றும் வலிமை இன்னும் அதற்குக் கைகூடவில்லை. இது இப்படித்தான் நடந்ததென்ற தெளிவுமில்லை, இப்படி நடந்திருக்கலாமென்ற அனுமானமுமில்லை, இப்படி நடந்திருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையே. திறந்த மனதோடு வாருங்கள். காற்றாகிக் கரைந்து, காலமெனும் கரை தாண்டி, கடல் கடந்து, செம்பாவின் கதைக்குள் செல்வோம்!" - மாயா
புதன்கிழமை:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு - ப.தெய்வீகன்
``ஈழத்திலிருந்தும் ஆப்கன், இராக் போன்ற நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அகதிகள், ஆஸ்திரேலியாவை நோக்கி படகுகளில் படையெடுத்தனர். தத்தமது நாடுகளில் ஏற்பட்ட கொடிய போரிலிருந்து, ராணுவ நெருக்கடியிலிருந்து தப்பித்துப் படகேறி, ஆஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் கரையொதுங்கினர். நான் மெல்போர்ன் அகதிகள் இடைத்தங்கல் முகாமில் மூன்று வருடங்களாக வேலை செய்திருக்கிறேன்.
வெவ்வேறு நாட்டு அகதிகளின் ஓலங்களை, முகாம் வாழ்வின் மனவலியை ஜீரணிக்க முடியாமல் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதற்கு மேற்கொண்ட காயங்களை, தனிமையின் சிதைவைப் பொறுக்க முடியாத தற்கொலை முயற்சிகளை எனப் பல துயரங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தத் தொடர், மெல்போர்னின் அகதிகளின் கண்ணீர் தாங்கிய முகாம் குறித்து மட்டுமல்ல... அவர்களின் கண்ணீரால் நிரம்பிய கடல் பயணம் குறித்தும் பேசும்." - ப.தெய்வீகன்
வியாழக்கிழமை:
ஊசிப் புட்டான் - வாஸ்தோ
``சென்ற நூற்றாண்டின் அந்திமக் காலத்தில், அதாவது 90-களின் தொடக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ரௌடிகளின் சாம்ராஜ்யமாகவும், அதன் பிற்பகுதி காலகட்டம் என்பது அவர்களில் ஒவ்வொருவராக அழிந்த காலகட்டமாகவும் இருந்தது. நீதிமன்றத்துக்குள் புகுந்து நீதிபதியின் கண்முன்னே ஒருவனை வெட்டிச் சாய்த்தது தொடங்கி கிளைச் சிறைச்சாலையினுள் இறங்கி தண்டனைக் குற்றவாளியின் தலையை அறுத்து பலரும் கூடும் டவுன் பேருந்து நிலையத்தின் சாக்கடைக் கால்வாயில் வீசியெறிந்தது வரையிலும் நிகழ்ந்திருக்கின்றன.
ஒருவகையில் பார்த்தால் கன்னியாகுமரி மாவட்டத்தின் அந்த இருண்ட காலத்தை எந்தவோர் இலக்கியமும் ஆவணப்படுத்தவில்லை. அந்த இருண்ட காலகட்டத்தில், ஏதேனும் சாகசம் செய்துவிட ஏங்கும் பதின்ம வயது சிறுவனின், அதிலும் உடலளவில் பலவீனமான அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை புனைவாக்கி இருக்கிறேன். எங்கள் மாவட்டத்தின் வாழ்க்கையையும், வன்முறை மட்டுமே சாகசமல்ல என்பதையும் சொல்ல முடிவதில் மகிழ்ச்சியடைகிறேன்." - வாஸ்தோ
வெள்ளிக்கிழமை:
க்ரைம் டேப்ஸ் - வெற்றி
``தமிழ்நாட்டை உலுக்கிய க்ரைம் சம்பவங்களும், அதன் வழக்கு விசாரணையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களையும் வெளிக்கொண்டுவரும் தொடர். குற்ற வழக்கில் கைதுசெய்யப்படுபவர்கள் குற்றவாளிகள் அல்லர். குற்றம் சுமத்தப்பட்டவர்களே! பல காலம் கழித்து உண்மை வெளிவரும். சினிமா திரைக்கதைகளை விஞ்சும் உண்மைகள் அவை. இது குறித்த ஒரு `க்ரைம் ரிப்போர்ட்டரின் டைரி குறிப்பு’ தான் க்ரைம் டேப்ஸ் தொடர்!" - வெற்றி
சனிக்கிழமை:
நாடோடிச் சித்திரங்கள் - ஷாலினி பிரியதர்ஷினி
``வாழ்வின் பெரும்பகுதியை இலக்கற்ற பயணங்களில் கடந்து வந்தவளின் அனுபவப் பகிர்வுகள் இவை. மரங்களை ஆறத் தழுவி அவற்றோடு உரையாடும் மூதாட்டி ஒருவரை நானறிவேன். மரங்களும் மலைகளும் காலத்தின் சாட்சியங்கள். அவற்றின் மொழி பழகிவிட்டால் மனிதன் பேராசையை அறவே விட்டொழித்துவிடுவான். அவை பேரழிவுகளையும், பெரும் பிரளயங்களையும் கண்ட சாட்சியங்கள்.
நமக்கு அவை உணர்த்த விரும்புவதும் அதுவே. உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்டது என்பதெல்லாம் மனிதர்கள் கட்டமைத்த தற்காலிக நம்பிக்கை அவ்வளவே. மனிதன் தன் கால்களை நம்பிப் பயணிக்கும்போதெல்லாம், பூமியும் அதன் எல்லைகளை அவனுக்காக புதுப்பித்துக்கொண்டேயிருக்கும். அப்படி நான் கண்டு வந்த சில புது பரிமாணங்களின் பகிர்வுகள் இவை." - ஷாலினி பிரியதர்ஷினி
source https://www.vikatan.com/news/general-news/article-about-new-series-live-on-vikatan-website-from-22-09-2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக