வயதான பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறோம். கடந்த ஒன்றரை வருடமாக என் பெற்றோரை வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை. இப்போது கோயில்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள். அப்படிச் செல்வது அவர்களுக்குப் பாதுகாப்பானதா?
- சுகந்தி (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.
``உங்கள் பெற்றோர் இன்னும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களாகவோ, நீரிழிவு, இதய பாதிப்புகள் உள்ளிட்ட இணைநோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் அவர்களை வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கச் சொல்வதே சிறந்தது. இணை நோய்கள் இல்லை, இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டார்கள் என்றால் முகக் கவசமும் , கைகளுக்கு கிளவுஸும் அணிந்தபடி வீட்டுக்கு அருகிலுள்ள கோயில்களுக்குச் செல்ல அனுமதிக்கலாம்.
மற்றபடி கோயிலுக்குள் எந்த இடத்தையும் எந்தப் பொருளையும் தொடாமல் இருப்பது கூடுதல் பாதுகாப்பு. கோயில் தீர்த்தம், பிரசாதங்கள் உள்ளிட்ட எதையும் வாங்குவதைத் தவிர்க்கச் சொல்லலாம். கூட்டம் அதிகமில்லாத நாள் மற்றும் நேரத்தில் சென்றுவருவது அவசியம். அங்கேயும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கோயிலைவிட்டு வெளியே வரும்போது கிளவுஸை அப்புறப்படுத்திவிடலாம்.
Also Read: Covid Questions: கல்லூரி செல்லும் பிள்ளைகளால் வீட்டிலுள்ள முதியவர்களுக்குத் தொற்று ஏற்படுமா?
பொதுவாக கோயில்களுக்குச் சென்று வீடு திரும்பினால் கைகால்களைக் கழுவக்கூடாது என்ற நம்பிக்கை சிலருக்கு இருக்கிறது. கோவிட் காலத்தில் அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்காமல், கோயில் உட்பட எங்கே வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாலும் உடனே குளித்துவிடுவது அல்லது முகம், கைகால்களை சோப் உபயோகித்துக் கழுவிவிட்டு, உடைகளை மாற்றிக் கொள்வது மிக முக்கியம். இந்தப் பழக்கம் உங்களை மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தார், உங்களைச் சார்ந்தவர்கள் என பலரையும் பாதுகாக்கும்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/can-old-age-people-go-to-temples-amidst-covid-pandemic
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக