Ad

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

பேசுதல் - கேட்டல் குறைபாடு... ஐஏஎஸ் தேர்வைத் தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற ரஞ்சித்!

கோயமுத்தூர் காளப்பட்டியைச் சேர்ந்த பேச்சு மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள ரஞ்சித் குமார் என்ற இளைஞர், இந்தியக் குடிமைப் பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடிமைப் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் 5 லட்சத்துக்கும் குறைவானவர்களே முதல் நிலைத் தேர்வை எழுதுகின்றனர். இதில் 5 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்குச் செல்கின்றனர். நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுபவர்களே குடிமைப் பணி அதிகாரிகளாகத் தேர்வாகின்றனர். இந்தப் பின்னணியில், இந்திய அளவில் 750-வது இடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கும் ரஞ்சித், இத்தேர்வைத் தமிழில் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

“பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் நான்காம் இடம்; +2-வில் 1117 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பெற்றேன். பிறகு பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில், மெக்கானிக்கல் படிப்பில் சேர்ந்தேன். கேம்பஸ் மூலம் தேர்வாகி வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், என்னுடைய திறன் சார்ந்த சந்தேகம் எல்லா இடங்களிலும் இருந்தது. என் அண்ணன் எல்லோரிடமும் வந்து ‘இவர் நன்றாக வேலை செய்வார்’ என்று சொல்லிப் புரிய வைத்தபோதும் கூட யாரும் நம்பத் தயாராக இல்லை.

ரஞ்சித் குமார்

இந்தப் பின்னணியில்தான், நாம் ஒரு மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றால், சிவில் சர்வீஸுக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் மனதில் இருந்ததால், என்னுடைய சிரமங்கள் எதுவுமே எனக்குத் தெரியவில்லை. சாதிக்க வேண்டும் என்கிற வெறி மட்டும்தான் என் கண் முன்னே இருந்தது. அதனால்தான் என்னால் இவ்வளவு தூரம் வர முடிந்தது” ரஞ்சித்தின் ஒவ்வொரு சொற்களிலும் வெளிப்படுகிறது தன்னம்பிக்கையின் கனம்.

“50 மாணவர்கள் இருக்கும் வகுப்பில், ரஞ்சித்தை மட்டுமே பார்த்துப் பேச வேண்டியது எங்களுக்குப் பெரிய சவால். கேட்க முடியாது என்பதால், உதட்டின் உச்சரிப்பைக் கவனித்து ரஞ்சித் குறிப்புகள் எடுப்பார். அதனால், வகுப்பில் எப்போதும் முதல் வரிசையில் அவருக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். வேறு யாரும் அந்த இடத்தில் உட்கார மாட்டார்கள். சாதாரணமாக ஒருமணிநேரத்தில் முடிகிற வகுப்பில், ரஞ்சித்துக்குக் கவனம் கொடுக்கும்போது சில சமயம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதற்கு மற்ற மாணவர்களும் ஒத்துழைப்பார்கள்.

சபரிநாதன்

பேசுவது சிரமம் என்பதால், தனித் தேர்வர் வைத்துக் கொண்டு இவரால் தேர்வு எழுத முடியாது. ஆக, அவருடைய சொந்த முயற்சியில் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். இந்தப் பின்னணியில், விருப்பப் பாடமாகத் தமிழிலக்கியத்தை எடுத்திருந்த ரஞ்சித், ஜெனரல் ஸ்டடீஸும் தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ்நாடு கொண்டாட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி இது!” என்று பெருமை பொங்கப் பேசுகிறார் ரஞ்சித் பயிற்சி பெற்ற ஐஏஎஸ் மைய பயிற்சியாளர் சபரிநாதன்.

“ரஞ்சித் ஏழு மாதக் குழந்தையாக இருக்கும்போது, அவனுக்குக் காதுகேட்கவில்லை என்பதைக் கண்டுபிடித்தோம். நம் குழந்தைக்கு ஒரு குறைபாடு இருக்கிறது என்பதை மனதார ஒத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழந்தையை முன்னுக்குக் கொண்டுவர முழு முயற்சி எடுக்கவேண்டும். அந்த மனப்பான்மை இருந்தாலே குழந்தை பாதியளவு முன்னேறிவிடுவார்கள். ரஞ்சித்தை நாங்கள் அப்படித்தான் வளர்த்தோம். ‘என்ன உங்க பையன் கலெட்டராகவா வரப்போகிறான்’ என அன்று கேட்டவர்கள் நிறையப் பேர்; இன்று எங்கள் மகன் அதைச் சாதித்திருக்கிறான். இது ரஞ்சித்தைப் போன்ற எல்லா குழந்தைகளுக்கும் உத்வேகம் தருவதாக இருக்கும். நம் குழந்தைகளுக்குக் காது கேட்கவில்லை என்றாலும் சாதிக்க முடியும்” ரஞ்சித்தின் பெற்றோர் அமிர்தவள்ளி, தர்மலிங்கம் சொற்களில் அனுபவத்தின் ஆழம்.

அமிர்தவள்ளி - தர்மலிங்கம்
ரஞ்சித் குமாரின் வெற்றிக் கதை, வீடியோ வடிவில்...


source https://www.vikatan.com/social-affairs/education/speech-and-hearing-impaired-ranjith-kumar-succeeds-in-upsc-exam-in-first-attempt

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக