Ad

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

உள்ளாட்சித் தேர்தல் : கட்சிகள் தனித்துப் போட்டியிட விரும்புவது ஏன்?

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததும், தனித்துப் போட்டி என அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன.

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், அக்டோபர் ஆறு, ஒன்பதாம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்கிற அறிவிப்பை கடந்த திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அன்று மாலையே, ''கட்சியின் வளர்ச்சி கருதி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க தனித்துப் போட்டியிடப்போகிறோம்'' என அறிவித்தது பா.ம.க. அதனைத் தொடர்ந்து தே.மு.தி.கவும் மக்கள் நீதி மய்யம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்துக் களமிறங்கப்போவதாக அறிவித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்துக் களமிறங்க முடிவு செய்து, வேட்பாளர் தேர்வுவரை வேலையை முடித்துவிட்டது.

மாநில தேர்தல் ஆணையம்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். அதில் ஒன்றியக் கவுன்சிலர் மற்றும் மாவட்டக் கவுன்சிலர் தேர்வுக்கு மட்டுமே கட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதில் வெற்றி பெற்றவர்கள், ஒன்றியச் சேர்மன் மற்றும் மாவட்டச் சேர்மனைத் தேர்வு செய்வார்கள். அதேபோல, உள்ளாட்சித் தேர்தலில், சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களைப்போல, கூட்டணிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் தலைமை நிர்வாகிகள் பேசி முடிவு செய்யமாட்டார்கள். அந்தந்த மாவட்ட பிரநிதிகளுக்குள் பேசி முடிவெடுத்துக்கொள்ள கட்சித் தலைமை அறிவுறுத்திவிடும். அதனால், இடப்பங்கீட்டில் பல்வேறு சிக்கல்கள் எழும். சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் சீட் கிடைக்காத அதிருப்தியில் ஒன்றிரண்டு தொகுதிகளில் போட்டி வேட்பாளர்கள் நிற்பார்கள். ஆனால், உள்ளாட்சித் தேர்தல்களில் ஒவ்வொரு இடங்களிலும் அதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் எந்தளவுக்கு இருக்கும் என்றும் சொல்லமுடியாது.

''அரசியல் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதற்கான பிரதான காரணம் இதுவென்றாலும் அதைத்தாண்டி ஒவ்வொரு கட்சிக்கும் தனியாக பல அரசியல் கணக்குகள் இருக்கத்தான் செய்கின்றன'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அவர்கள் இதுகுறித்துப் பேசும்போது,

பாட்டாளி மக்கள் கட்சி ; 

'' கூட்டணி குறித்து கட்சிகளுடன் பேச போதிய அவகாசம் இல்லை. நிர்வாகிகள் பெரும்பாலானோரின் கருத்துகள் அடிப்படையிலேயே தனித்துப்போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என பா.ம.க சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றை மட்டுமே நாம் காரணமாகப் பார்க்கமுடியாது. இந்த முடிவில் பல அரசியல் கணக்குகளும் இருக்கத்தான் செய்கின்றன. தேர்தல் நடக்கப்போகிற ஒன்பது மாவட்டங்களில், ஏழு மாவட்டங்கள் வன்னியர் வாக்கு வங்கி அதிகம். தனித்துப் போட்டியிட்டு தங்களின் செல்வாக்கைக் காட்டினால்தான், அடுத்ததாக நடக்கப்போகும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி சேர்மன் பதவிகளை கூட்டணிக் கட்சியிடம் கேட்டுப் பெறமுடியும்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்குள், பா.ம.க கூட்டணி மாறுவதற்கான வாய்ப்புகளும் தென்படுகின்றன. ஏற்கெனவே, 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் மரணமடைந்தவர்களுக்கு மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம், சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் திருவுருவச் சிலை என வன்னிய சமூக மக்களைக் கவருகின்ற வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதனால், பா.ம.க தி.மு.கவுடன் கூட்டணி வைத்தாலும் மிகப்பெரிய அளவில் அந்த சமூக மக்களிடம் அதிருப்தி ஏற்படாது. அந்தக் கூட்டணி 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் நீண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Also Read: பாமக தனித்துப் போட்டி: தற்காலிகமா, ‘தற்காலிக' நிரந்தரமா?!

மக்கள் நீதி மய்யம் ;

மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை, போட்டியிட்ட முதல் தேர்தலில் 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்ற அந்தக் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் 2.4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. அந்தக் கட்சிக்கு கிராம அளவில் கட்டமைப்பு இல்லாததே அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. 2019-ல் 27 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ம.நீ.மய்யம் போட்டியிடாமல் தவிர்த்தது மிகப்பெரிய தவறு என அந்தக் கட்சியினரே உணர்ந்திருக்கிறார்கள். தவிர, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது மக்கள் நீதி மய்யம். ஆனால், மிகப்பெரிய அளவில் தேர்தலில் அது கைகொடுக்கவில்லை. அதனால், இந்தத் தேர்தலில் தனித்துக் களமிறங்கி தங்களை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

பிரசாரத்தில் தே.மு.தி.க

தே.மு.தி.க ;

ஒருகாலத்தில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தே.மு.தி.க கடந்த சட்டமன்றத் தேர்தலில், அ.ம.மு.க கூட்டணியில் அறுபது தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தமாகவே இரண்டு லட்சம் வாக்குகளை மட்டும் பெற்றது. அந்தக் கட்சியின் வாக்கு சதவிகிதம் நோட்டாவுக்கும் கீழே சரிந்தது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலிலாவது கணிசமான வெற்றிகளைப் பெற்றுவிட வேண்டும் என நினைக்கிறது அந்தக்கட்சி. தி.மு.க தலைமையின் ஆதரவும் தே.மு.தி.கவுக்குக் கிடைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தவிர, உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போகும், தென்காசி, திருநெல்வேலி தவிர மற்ற ஏழு மாவட்டங்களில் அ.ம.மு.கவுக்கு மிகப்பெரிய செல்வாக்கும் இல்லை. அதனால்தான், தனித்துப் போட்டி என்கிற முடிவை எடுத்திருக்கிறது தே.மு.தி.க. பா.ம.கவைப் போல, தே.மு.தி.கவுக்கும் எதிர்கால அரசியல் கணக்குகள் இருக்கின்றன.

புதிய தமிழகம் ;

1996 சட்டமன்றத் தேர்தலில், ஒட்டபிடாரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதே ஒட்டபிடாரம் தொகுதியில் அவர் பெற்ற வாக்குகள் வெறும், 6,544. ஆனால், அதே தொகுதியில், தனித்துக் களமிறங்கிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர், சுப்புலட்சுமி பெற்ற வாக்குகள் 22,413. கடைசி நேரக் கூட்டணிக் குழப்பங்களும் தனித்தன்மையை இழந்ததுமே இதற்கான பிரதான காரணங்களாகச் சொல்லப்பட்டன. அதை, சரிசெய்வதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் கிருஷ்ணசாமி. ஒன்பது மாவட்டங்களில், திருநெல்வேலி மற்றும் தென்காசியில் அந்தக் கட்சிக்கு ஓரளவுக்குச் செல்வாக்கு இருக்கிறது.

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி ; 

நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை தனித்துப் போட்டியிடுவதை தங்கள் கட்சியின் கொள்கையாகவே கடைபிடித்து வருகிறார்கள். இதுவரை பங்கேற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தனித்து மட்டுமே போட்டியிட்டிருக்கிறார்கள். கடந்த 2019-ல் 27 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரேயொரு ஒன்றியக் கவுன்சிலர் இடத்தை மட்டுமே அந்தக் கட்சி பெற்றது. ஆனால், சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த, 30 லட்சம் வாக்குகள் மூலம், இந்தமுறை உள்ளாட்சியில் அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுவிடலாம் நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/why-do-parties-want-to-stand-alone-in-local-elections

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக