அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பெர்டூ பல்கலைக்கழகத்தில் (Purdue) உலகிலேயே வெண்மையான பெயின்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் சந்தைக்கு வர இருக்கும் இதனைப் பயன்படுத்துவதன் மூலம் ஏசி பயன்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் உலகின் வெண்மையான பெயிண்ட் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது இந்த பெயின்ட்.
பெர்டூ பல்கலைக்கழக பொறியியல் பேராசிரியர் ஜியுலின் ருவான் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பருவநிலை மாற்றம் மற்றும் மின்சக்தி சேகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீவிரமாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார். "மிக அதிக அளவில் 98.1 சதவிகிதம் சூரிய ஒளியை எதிரொளிப்பதுடன் இன்ஃப்ராரெட் கதிர்களின் வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதனால் பெயின்ட் உறிஞ்சிக்கொள்ளும் வெப்ப அளவு மிககுறைவு. ஆயிரம் சதுர அடிக்கு இந்த பெயிண்ட்டை பூசினால் குளிர்சாதனப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் 10 கிலோ வாட் மின்சாரம் குறைக்கும்" என ஜியுலின் ருவான் தெரிவித்திருக்கிறார்.
அதிக வெண்மையைப் பெற அழகுசாதன பொருள்கள் மற்றும் புகைப்படங்கள் அச்சிடும் காகிதத்தில் பயன்படுத்தப்படும் பேரியம் சல்பேட் மற்றும் பிற உட்பொருள்கள் கொண்டு இந்த வெள்ளை பெயிண்டை உருவாக்கியுள்ளார் ஜியுலின் ருவான். சாதாரண வெள்ளை பெயின்ட் 80-90% மட்டுமே பிரதிபலிக்கின்றன. அதனால், அவற்றால் அறையைக் குளிர்விக்க இயலாது. மாறாக, வெப்பத்தை வெளிப்படுத்துபவையாக அவை இருக்கும்.
பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாக்கம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்குச் சிறிய அளவிலாவது தீர்வாக அமையும் வெண்மை பெயின்டை சந்தைக்குக் கொண்டுவரும் முயற்சிகளை பல்கலைக்கழகமும் அமெரிக்க அரசும் தொடங்கி உள்ளன. வெற்றிகரமாக இந்த பெயின்ட் சந்தைக்கு வந்தால் ஏசிக்கான தேவையே இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
source https://www.vikatan.com/technology/tech-news/worlds-whitest-paint-will-it-bring-down-the-need-for-air-conditioners
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக