ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ம் நாள் உலகம் முழுவதும் உலகத் தூய்மை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தினமும் பல்வேறு விதமான குப்பைகளை பல்வேறு விதமான பயன்பாடுகளின் மூலம் மனிதர்களாகிய நாம் உருவாக்குகிறோம். அது இயற்கையில் எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. இந்த உலகைக் குப்பைக் கூளமாக மாற்றக் கூடாது என நமக்கு நாமே நினைவுப்படுத்திக் கொள்வதற்காக இந்த உலக தூய்மை நாளைக் கடைப்பிடிக்கிறோம்.
நாம் நிலத்தில் மட்டுமல்லாது கடலிலும் பல விதமான குப்பைகளை உருவாக்கி விட்டுச் செல்கிறோம். பிளாஸ்டிக் பொருட்கள் முதல் மீன்பிடி வலைகள் வரை பல்வேறு விதமான குப்பைகளைக் கடலில் விட்டு கடலையும் குப்பையாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் பயன்படுத்தி வீசும் குப்பைகள் வெறும் குப்பைகளாக மட்டும் இல்லாமல், கடல் வாழ் உயிரினங்களுக்கு எமனாகவும் மாறுகின்றன. நாம் விட்டு வருகிற மீன்பிடி வலைகளில் சிக்கி மீள முடியாமல் பல கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன.
இப்படிக் கடலில் நாம் போடும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்வு ஒன்றை சில அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்கத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் மீன்பிடி வலைகள் மற்றும் பிளாஸ்டிக்கினால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு ஊர்தியும், கடலின் ஆரோக்கியத்துக்கு ஆமைகள் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆமை மிதவை ஊர்தி ஒன்றையும் தயாரித்திருந்தனர்.
நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட இரு ஊர்திகளையும் அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பு துணைத்தூதர் கேத்ரீன் ப்ளக்ஸ்பர்ட்டும் (Kathryn Flachsbart) இந்தியக் கடலோர காவல்படை அதிகாரியும் காணொளி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். கடல் வாழ் உயிரினங்களின் மாதிரிகளையும், பெருங்கடல் மாதிரியையும் கொண்டிருக்கும் இந்த ஊர்திகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்தும் ஆமைகள் பாதுகாப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை நீலாங்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக மகாபலிபுரம் வரை சென்றது. மேலும், இந்த ஊர்திகள் நவம்பர் மாதம் வரை முப்பது மீனவக் கிராமங்களிலும், இரண்டு கடற்கரைகளிலும், ஒரு சுற்றுலாத் தளத்திலும் மற்றும் ஒரு மீன்பிடி துறைமுகத்திலும் விழிப்புணர்வுக்காகப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
நாமும் இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் செயல்படுவோம் என உறுதியேற்போம்.
source https://www.vikatan.com/events/environment/american-consulate-organized-a-mobile-turtle-float-in-chennai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக