Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

`வெளிநாடுவாழ் தமிழர்களின் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை!’ - மாநிலங்களவை எம்.பி அப்துல்லா

மாநிலங்களவை எம்.பி-யாக திமுக-வைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.பி- ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்துக்கு வந்தார் எம்.எம்.அப்துல்லா. அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி அப்துல்லா, ``திமுக., இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருப்பவர்களை ஒருபோதும் கைவிடாது என்பதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் எம்.பி பதவி. நாடாளுமன்றத்தில் எந்த விஷயத்தைக் கையில் எடுக்க வேண்டும், எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிடுகிறதோ, அதுவே என்னுடைய குரலாக நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும்.

`வெளிநாடுவாழ் தமிழர்களுக்காகத் தனித்துறையை உருவாக்குவோம்’ என்று திமுக., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் என்னுடைய குரல் இருக்கும். வெளிநாடுவாழ் தமிழர்களுக்குப் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றை ஒன்றிய அரசு மூலமாகத் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுப்பேன்.

Also Read: மாநிலங்களவை சீட் எவ்வளவு முக்கியம் தெரியுமா? - கடுப்படித்த அமித் ஷா; அமைதிகாத்த அ.தி.மு.க

பேங்க் ஆஃப் தமிழ்நாடு குறித்து இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் பேங்க் ஆஃப் தமிழ்நாடு தொடங்கப்படும். அதற்கு முன்னதாக பேமென்ட் பேங்க் விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. அதன் பிறகு வங்கி முழுநேரம் செயல்படத் தொடங்கும். இந்த வங்கியில் தமிழக அரசுதான் பங்குதாரராக இருக்கும். இது ஒரு ஷெட்யூல்டு பேங்க். நம் நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்கள் மற்ற வங்கிகளில் முதலீடு செய்கிறார்கள். அதை நாம் பேசி பேங்க் ஆஃப் தமிழ்நாடு-வில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/action-to-solve-the-problem-of-tamils-living-abroad-dmk-mp-abdullah

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக