Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

`புதுச்சேரிக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் தெலங்கானாவுக்குச் சென்றுவிட்டன!’ - எதிக்கட்சித் தலைவர்

புதுச்சேரி சட்டசபையில் 2021-22 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்ததையடுத்து அதன்மீது உறுப்பினர்கள் விவாதம் செய்துவருகின்றனர். அதனடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க-வின் எம்.எல்.ஏ-வுமான சிவா பேசும்போது, ``தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி இரண்டு முறையும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் புதுச்சேரிக்கு வந்து நிறைய வாக்குறுதிகள் கொடுத்தனர். நீங்களும் (முதல்வர் ரங்கசாமி) `மத்தியிலுள்ள ஆட்சியுடன் இணைந்து செயல்படக்கூடிய ஆட்சி புதுச்சேரியில் இருந்தால் நிதி நிறைய வரும், கடன் சுமை குறையும்’ என்றெல்லாம் கூறினீர்கள்.

அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தவுடன், பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தென்னிந்தியாவில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காகத் தேர்தலுக்குப் பின்னர் சபாநயாகர், அமைச்சரவை அமைப்பதில் மூன்று மாதங்கள் படாதபாடுபட்டு பதவிகளைப் பெற்றனர். இதனால் பட்ஜெட்டில் பொதுமக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 1.5 சதவிகிதம்தான் கூடுதல் நிதி கிடைத்துள்ளது. அதுபோல் மாநில அந்தஸ்து பற்றிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.

புதுச்சேரி பட்ஜெட்

கூடுதலாக ரூ.1,684 கோடி வருவாய் ஈட்டவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதைச் செய்ய முடியுமா? யதார்த்தமாகப் பார்த்தால் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது. ஆனால் வட்டி அதிகமின்றியும், கடனை நீண்டகாலம் செலுத்தும் வகையிலும் கேட்டுப் பெறலாம். புதுச்சேரியில் 22 பொதுத்துறை நிறுவனங்கள் மூடுவிழாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், பத்து நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதில் பணிபுரிந்த 10,000 பேர் எட்டு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள்வரை சம்பளம் இல்லாமலும், வேலை இல்லாமலும் கஷ்டப்பட்டுவருகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளால் தொடங்கப்பட்டது. தற்போது ரூ.500 கோடி முதலீடு செய்தால்கூட அது போன்ற ஆலையை ஆரம்பிக்க முடியாது. மூடப்பட்டிருக்கும் அந்த மில்லுக்கு ரூ.40 கோடி மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மில்லை மீண்டும் திறந்து இயக்குவது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. அந்தச் சர்க்கரை ஆலையில் எரிசாராயம், மின்சாரம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றைக் கூடுதலாக உற்பத்தி செய்து இயக்கலாம்.

தொழிலதிபர்கள் மாநாடு நடத்துவது ஒரு நாள் செய்தியாக மட்டுமே வரும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு தொழிற்சாலைகூட கொண்டுவரப்படவில்லை. வரும் தொழிலதிபர்கள் என்ன சலுகை தருவீர்கள் என்றுதான் கேட்பார்கள். எனவே, தனி நிதி பெற்று தொழிலதிபர்களுக்குச் சலுகையை அறிவியுங்கள். தொழிலதிபர்கள் மின் இணைப்பு பெறுவதற்கே நடந்து நடந்து இரண்டு ஜோடிச் செருப்பு தேய்ந்துவிடும். புதுச்சேரியில் ஒற்றைச்சாளர முறை இல்லை. எனவே இவற்றை முறைப்படுத்தி, சலுகைத் திட்டங்களை தொழில் தொடங்குபவர்களுக்கு அறிவிக்க வேண்டும். நாம் சொந்தக் காலில் நிற்கும் வகையில் வருமானம் ஈட்டுவதற்கு வழிகாண வேண்டும். நிலத்தடி நீர் எடுக்காத, மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளைக் கொண்டுவர வேண்டும். சலுகைகள் ஏதும் தரப்படாததால் புதுச்சேரிக்கு வர நினைத்த அனைத்துத் தொழிற்சாலைகளும் தெலுங்கானாவுக்குச் சென்றுவிட்டன.

முதல்வர் ரங்கசாமி

தொழிற்சாலைகள் கொண்டுவருவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம், சேதராப்பட்டில் இருபது ஆண்டுகளாக எதற்கும் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுவருகிறது. ஆவடியிலிருந்து 60 பேர்கொண்ட குழு இடம் ஒதுக்கிக் கொடுத்தால், தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை தொடங்குவதாகக் கூறி முன்வந்தது. அந்தக் கோப்பு மத்திய அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்தத் தொழிற்சாலை வந்திருந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். முதல்வர் ஒரு முறை டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும். சந்தித்துப் பேசினால் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கிடைக்கும்.

மானிய விலையில் 4,000 கறவை மாடுகள் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளீர்கள். அவற்றைக் கொண்டுவர 500 லாரிகள் தேவைப்படும். அது முடியுமா... வெறும் அறிவிப்பாக இருந்தால் 10,000 என்று அறிவிக்க வேண்டியதுதானே... மக்கள் சந்தோஷப்படுவார்களே?

Also Read: புதுச்சேரி: `மாநில அந்தஸ்து முதல் பணி நிரந்தரம் வரை!’ -முதல்வர் ரங்கசாமி உரையின் முக்கிய அம்சங்கள்

வீடற்ற ஏழைகளுக்கு மனைப்பட்டா கொடுப்பதே நின்றுவிட்டது. தகுதியானவர்களுக்கு இலவச மனைப்பட்டா கொடுங்கள். நன்றாக விளையும் இடங்களை மனைப்பட்டாக்கள் போட அனுமதிக்கின்றனர். கரம்பாகக் கிடக்கும் நிலங்களை விவசாய நிலங்கள் என்று மனைப்பட்டா போடுவதற்கு அனுமதி மறுக்கின்றனர். வில்லியனூர் தொகுதியில் 425 லே-அவுட் போட்டு விற்றுள்ளனர். பத்திரப்பதிவுத்துறை மிக மிக மோசமாகப் போய்விட்டது. மின்துறையை தனியார்மயமாக்க மாட்டோம் என்று அறிவியுங்கள். தற்போது மின்துறையிலுள்ள கட்டமைப்பை 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்தாலும் உருவாக்க முடியாது. இன உணர்வை மங்கச் செய்யும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவியுங்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-opposition-leader-slams-newly-formed-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக