Ad

சனி, 4 செப்டம்பர், 2021

நெல் திருவிழா முதல் இலவச பாரம்பர்ய விதைகள் வரை; புதுச்சேரி வேளாண் மானியக்கோரிக்கை ஹைலைட்ஸ்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2021-22 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை ஆகஸ்ட் 26-ம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீது எம்எல்ஏக்கள் பேசியதற்கு பதிலளித்துப் பேசிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ``பாரம்பர்ய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவித்திடவும், அத்தகைய நெல் ரகங்களை பாதுகாத்திடவும் வருடம் தோறும் தை மாதத்தில் நெல் திருவிழா நடத்தப்படும்.

வேளாண் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் தேனீ சி.ஜெயக்குமார்

இதில் விவசாயிகளுக்கு பாரம்பர்ய நெல் விதைகள் இரண்டு கிலோ இலவசமாக வழங்கப்படும். காய்கறிகளின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் மாடியில் அல்லது வீட்டுத் தோட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு `என் வீடு என் நலம்’ என்ற புதிய திட்டம் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்தத் திட்டம் புதுவை பிராந்தியத்திலுள்ள பொதுமக்களுக்கும் தோட்டக்கலை ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில், பரிட்சார்த்த முறையில் செயல்விளக்க மாதிரித் திட்டமாக இவ்வாண்டு அறிமுகப்படுத்த இருக்கிறோம். ரூ.5,000 மதிப்பிலான காய்கறி விதைகள் அல்லது பழ மரக்கன்றுகள், தோட்டக்கலை உபகரணங்கள், நிழல்வலைக் கூடங்கள் போன்றவை பாசிக் மூலமாக இலவசமாக வழங்கப்படும். குறைந்தபட்சம் 15 நபர்கள் முதல் அதிகபட்சமாக 30 நபர்களை கொண்ட குழுக்களுக்கு தொகுப்பு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் மூலமாக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்படுவது தொடரும். அதேசமயம் விவசாயிகளுக்கு தேவையான தோட்டக்கலை பயிர் விதைகள் அனைத்து பிரிவினருக்கும் 50% மானியத்தில் வழங்கப்படும்.

புதுச்சேரி சட்டப்பேரவை

Also Read: பெண் விவசாயிகளுக்கு மானியம், புது கால்நடை மருத்துவமனை; வேளாண் மானிய கோரிக்கை அறிவிப்புகளின் ஹைலைட்ஸ்

கடந்தாண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட நிவர் மற்றும் புரவி புயல் மற்றும் அதிக அளவில் பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3.11 கோடி நிவாரணமாக அளிக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த தொகை விரைவில் விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாசிக் உழவரகங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகளின் விருப்பம் மற்றும் சந்தை தேவைகள் காரணமாக விற்பனையாகாமல் தேங்கிவிட்ட துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளுக்கு இழப்பீட்டு தொகையை விதை உற்பத்தியாளர்களுக்கு வழங்க இந்த அரசு முடிவெடுத்திருக்கிறது.

அனைத்து கறவைப் பசுக்களுக்கும் மாநில அரசு நிதி மூலமாக முற்றிலும் இலவச காப்பீடு செய்யப்படும். புதுச்சேரி மாநிலத்தில் புரத உணவை அதிகரிப்பதற்காகவும், ஆடு வளர்ப்பு அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்காகவும் ஆடு வளர்க்கும் 200 விவசாயிகளுக்கு 90% மானிய விலையில் 10 பெட்டை ஆடுகள் மற்றும் ஒரு கிடா ஆடு வழங்கப்படும். எம்.எஸ்.சி பயோ டெக்னாலஜி என்ற புதிய முதுகலை பட்டப்படிப்பை 20 இடங்களுடன் தொடங்க முன்மொழியப்பட்டு இருக்கிறது. இந்த படிப்பு உயிர் அறிவியலின் பல்வேறு பாடப்பிரிவுகளில் பி.எஸ்.சி படித்த மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் சிறப்பு முக்கியத்துவம் கொண்டது.

ஆடு

Also Read: “விவசாயிகள் மாணவர்களாக இருக்க வேண்டும்!” - புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் விருப்பம்!

`பருவநிலை மாற்றமும் கால்நடைகளில் அதன் தாக்கமும்’ என்ற ஆய்வினை மேற்கொள்ள பெங்களூரில் உள்ள கால்நடை தீவன மற்றும் உடலியக்கவியல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மக்தூபில் உள்ள மத்திய வெள்ளாடு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆடுகளைத் தாக்கும் புதிய நோய்கள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. துரித நோய் கண்டுபிடிப்பு மருத்துவம் நோய் சிகிச்சை மற்றும் நோய் தடுப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் புதுச்சேரி மற்றும் இந்தியாவில் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள் இதன் மூலம் ஆடுகளின் பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்தி அதிகரிக்கும்” என்றார்.



source https://www.vikatan.com/news/agriculture/puducherry-govt-announces-new-agricultural-schemes-on-demand-for-grants-session

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக