Ad

வெள்ளி, 17 செப்டம்பர், 2021

கொரோனா பணிக்குச் சேர்க்கப்பட்ட செவிலியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

``கருணையின் வடிவமாகவே செவிலியரைக் காண்கிறேன். அன்பு செலுத்து, அதை வெளிப்படுத்து இந்த இரண்டும் இணைந்தது தான் உங்களின் வாழ்க்கை. கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பற்றியும் கவலைப்படாது செயல்படும் செவிலியர்கள் அனைவரையும் மனதார நெஞ்சார வாழ்த்துகிறேன்"

-செவிலியர்கள் தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் கூறிய வரிகள் இது. அதே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசில் தான் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனக் குமுறுகிறார்கள் செவிலியர்கள். அதோடு, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் அவர்கள் தங்குவதற்கும் கூட சரியான எந்த வசதியும் செய்யப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் முதல் அலையின் தாக்கத்தை விட, இரண்டாம் அலையின் தாக்கம் மொத்த மாநிலத்தையும் நிலைகுலைய வைத்தது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு 36 ஆயிரத்திற்கும் அதிகமாகச் சென்றது. மருத்துவமனையில் இடம் கிடைக்காது ஆம்புலன்ஸ் நீண்ட வரிசையில் காத்திருந்த நிகழ்வையெல்லாம் நாம் கண்முன்னே கண்டோம். ``தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்பதினால், போர்க்கால அடிப்படையில் தடுப்புப்பணிகளை விரிவுபடுத்தியுள்ளோம். மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகம் தேவை. அவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு பணிக்காக 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மருத்துவத்துறை அமைச்சர் அப்போது தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து, மருத்துவத்துறை சார்பிலும், மாவட்ட அளவிலும் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அந்தந்த பகுதிக்கு ஏற்றாற்போல் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. இப்படி பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாதம் 12,000 முதல் 14,000 வரை சம்பளம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான செவிலியர்களும் தனியார் மருத்துவமனையில் தங்களின் பணியிலிருந்து விலகி இந்த பணியில் சேர்ந்தனர். காரணம், அரசு வேலை என்பதினால், பணி உறுதி இருக்கும் என்பதினால் தான்.

செவிலியர்

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறையவே, கடந்த இரண்டு மாதங்களாக, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 90 பேர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 70-க்கும் மேற்பட்டோர், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 63 பேர், மதுரை தோப்பூர் மருத்துவமனையில் கொரோனா பணியிலிருந்த செவிலியர்கள் 25 பேர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 15 செவிலியர்கள் உட்பட 27 பேர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் கொரோனா பணியில் கடந்த ஒரு ஆண்டாக பணியாற்றிய 20-க்கும் மேற்பட்டோர் என்று தமிழகம் முழுவதும் கொரோனா பணிக்காகத் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பாகத் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் பொதுச்செயலாளர், நே.சுபினிடன் பேசினோம். ``கொரோனா முதல் அலை சமயத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் பணிக்காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது அரசு. கொரோனா பணிக்காக AD-HOC முறையில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் பணியினை அரசு நீட்டிப்பு செய்துள்ளது. ஏற்கனவே ஒப்பந்த முறையில் 12,000 செவிலியர்கள் பணியிலிருந்த நிலையில் 1,212 செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்துள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கை 356-ல் குறிப்பிட்டுள்ளது போல அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்றார்.

நே.சுபின்

மேலும், ``ஏற்கனவே ஒப்பந்தப் பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு இரண்டு வருடத்தில் பணி நிரந்தம் செய்யப்படும் என்று 2015-ம் ஆண்டு பணி நியமன ஆணை வழங்கப்பட நிலையில், ஆறு வருடங்கள் ஆகியும் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதேபோல தற்போது இந்த செவிலியர்கள் அனைவருக்குமே குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படவேண்டும். பல்வேறு இடங்களில் கொரோனா பணி செய்யும் தற்காலிக செவிலியர்களுக்குச் சரியான தங்கும் இடமும் உணவும் கிடைக்கப்படுவதில்லை என்ற புகார்கள் வருகிறது. அந்த செவிலியர்கள் அனைவருக்குமே தங்கும் இடம் உணவு கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். தற்காலிக செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

தற்போது சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணிபுரியும் ஒருவரிடம் பேசினோம். தற்போது பணியில் இருப்பதால் பெயர் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையோடு பேசினார். ``நான் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அரசு வேலை என்பதினால் இங்கு பணிக்குச் சேர்ந்தேன். கொரோனா பணிக்காக எங்களை பணியமர்த்தினார்கள். கொரோனா வார்டில் டூட்டி, மற்றவர்களைக் காட்டிலும் எங்களுக்குத் தான் அதிக பணி வழங்கப்படும். மாத சம்பளம் 14,000 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. முதல்வர் அறிவித்த ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. கொரோனா நேரத்தில் தங்க இடம், உணவு எல்லாம் வழங்கப்பட்டது. தற்போது இரண்டுமே கிடையாது. வெளியில் தாங்கிக்கொள்ளுங்கள் என்று மருத்துவமனை தரப்பில் கூறிவிட்டனர்" என்றார்.

கொரோனா சிகிச்சை பிரிவு

தொடர்ந்து பேசியவர், ``நான் தூத்துக்குடியிலிருந்து இங்கு வந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். வாங்கும் சம்பளமே மிகவும் குறைவு, இதில் வெளியில் தாங்கிக்கொள்வது என்றால் வாங்கும் சம்பளம் அனைத்துமே இதற்கே சரியாகப் போகும். அதுமட்டுமில்லாது, செவிலியர் கொரோனா பணி என்றால் விடுதியிலும், வாடகைக்கு வீடும் கொடுக்க தயங்குகிறார்கள். இந்த கொரோனா காலத்தில் எவ்வளவோ ஆபத்துகளைத் தாண்டி பணியாற்றுகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துகொடுக்கவில்லை என்றால் என்ன நியாயம். இதற்கு ஒரு நல்ல தீர்வை அரசு தான் சொல்லவேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்களை அரசுப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். அதேபோல, கொரோனா பேரிடரின் போது அவசர நிலையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தொகுப்பூதிய பணியாளர்களால கருதவேண்டும்" என்று வேதனையுடன் பேசினார்.

Also Read: `உயிரைப் பணயம்வெச்சு பார்த்துகிட்டாங்க!' - செவிலியர்கள் பாதங்களில் பூ தூவிய வழக்கறிஞர்

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசினோம். ``தமிழகத்தில் செவிலியர்களுக்குப் பணி நியமனம் வழங்கும்போது, தற்போது கொரோனா பணியில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மட்டுமே ஒப்பந்தம் முடிந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதைப் பொறுத்தவரை, கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களின் பெயர் பட்டியல் தயாராகிக்கொண்டுள்ளது" என்றார்.

மா.சுப்பிரமணியன்

மேலும், ``இன்னும் ஓரிரு வாரங்களில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். செவிலியர்கள் தங்கும் இடத்தை பொறுத்தவரை, கொரோனா பேரிடர் காலங்களில் தனிமைப் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு அரசு சார்பில் இடம் ஏற்பாடு செய்துதரப்பட்டது. தற்போது நிலை சரியாகிக்கொண்டிருக்கிறது. எனவே தங்கும் இடங்களை அவர்களே தான் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்குப் பணி நியமனத்தில் கண்டிப்பாக முன்னுரிமை வழங்கப்படும்" என்று கூறினார்.

Also Read: கொரோனா வைரஸ் உருமாற்றம்: ஏன் இந்த வைரஸ் மட்டும் நமக்கு சவாலாக இருக்கிறது?

தற்காலிக செவிலியர்கள் பணிநீக்கம் ஒருபுறமிருக்க, தற்போது கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தங்குவதற்கும், உணவு வசதியையும் அரசு கண்டிப்பாக ஏற்படுத்தித் தரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!?



source https://www.vikatan.com/government-and-politics/politics/are-nurses-recruited-for-corona-work-being-ignored-by-tn-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக