புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் ஒன்பது மாவட்டங்களில் நடத்தப்படாமல் இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6, 9-ம் தேதிகளில் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் நேற்று (செப்டம்பர் 15-ம் தேதி) தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடப் பலரும் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
Also Read: ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் 333 பதற்றமான வாக்குச்சாவடிகள்; கட்டுப்பாட்டு அறை திறப்பு!
இந்த முறை உள்ளாட்சித் தேர்தல்களில் இளைஞர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் இளைஞர்கள் குழு சார்பாக வேட்பாளர்களைக் களமிறக்கவும் திட்டமிட்டு வருவதால், வழக்கமாகத் தேர்தலில் போட்டியிடும் பெரியவர்கள் கலக்கம் அடைந்திருக்கிறார்களாம்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன; பலரும் இளைஞர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவும் தெரிவித்துவருகிறார்கள்.
’புதுப்பட்டி ஊராட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்...’ என்ற தலைப்பில் இளைஞர்கள் வெளியிட்டிருக்கும் போஸ்டரில், ``ஊராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவுடன், தேர்தல் செலவு செய்த பணத்தை ஊராட்சியின் வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என நினைத்து யாரும் வர வேண்டாம்.
கிராமசபைக் கூட்டங்களில் புதுப்பட்டி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு, செலவு கணக்கு கேட்டு அறியப்படும். அந்தத் தகவல்கள் சரியானவைதானா எனத் தகவல் அறியும் சட்டத்தின்படி சரிபார்க்கப்படும். ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவரின் படத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன், புகார் அளிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
புதுப்பட்டி ஊராட்சி இளைஞர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் சார்பாக வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகின்றன.
source https://www.vikatan.com/news/general-news/thenkasi-village-youths-announcements-regarding-local-body-elections
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக