'அமைதியான நகரம்' எனப் பெயர் எடுத்திருந்த திருச்சி மாநகரில் சமீப காலமாகவே பழிக்குப் பழியாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு, அடுத்தடுத்து நடந்த இரண்டு கொலைகள், மக்களை மிரட்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சம்பவம் -1
திருச்சி பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். பிரபல ரெளடியான இவர் மீது தில்லை நகர், காந்தி மார்க்கெட், கோட்டை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த `வாழைக்காய்’ விஜய் என்பவருக்கும் காந்தி மார்க்கெட், பால்பண்ணை பகுதிகளில் கஞ்சா விற்பனை தொழில் போட்டியில் முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது.
கடந்த ஆண்டு நிஷாந்த், அவரின் நண்பர்கள் என 9 பேர் சேர்ந்து வாழைக்காய் விஜயைப் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். இவ்வழக்கில் நிஷாந்த், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த மாதம் சிறையிலிருந்து வெளி வந்தார், நிஷாந்த். கடந்த செப்டம்பர் 13ம் தேதி, ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவறையில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்ற நிஷாந்த்தை ஒன்பது பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர்.
இக்கொலை குறித்து, காந்தி மார்க்கெட் போலீஸார் விசாரணை நடத்தி, வாழைக்காய் விஜய்யின் சகோதரரான அரவிந்த், அவருடைய நண்பர்களான சுரேந்தர், மணிகண்டன், குருமூர்த்தி, காட்டு ராஜா, வேலு உள்ளிட்ட 9 பேரை கைதுசெய்தனர். 'விஜயின் ஆன்மா சாந்தி அடைவதற்காக நிஷாந்தைக் கொலை செய்தோம்.
இதற்காக ஸ்கெட்ச் போட்டு பத்து நாள்கள் காத்திருந்து கொலை செய்தோம்' என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறது, கைதான கொலைக் கும்பல். உளவுத்துறையினர் 'நிஷாந்தை கொல்லப்போகிறார்கள்' என்று காவல்துறையினருக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. போலீஸார் கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் நிஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.
Also Read: `இந்த ஏரியாவுல யார் கஞ்சா விற்பது.. யார் பெரிய ரெளடி?’ - திருச்சியை பதற வைத்த ரெளடி கொலை
சம்பவம் - 2
திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சக்திவேலுக்கும், பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸுக்கும் நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. அலெக்ஸ் மீது கடத்தல், கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனிடையே கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாலையில் பொன்மலைப்பட்டி கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சக்திவேலும் அவரது தம்பியான சின்ராஜூம் முகத்தில் மாஸ்க் அணிந்து, டூவீலரில் மது வாங்கச் சென்றிருக்கிறார்கள்.
அப்போது, அலெக்ஸ், சரத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல், சக்திவேல் என நினைத்து சின்ராஜை தலையைத் துண்டித்துக் கொலை செய்திருக்கிறது. சின்ராஜ் இறப்புக்கு அந்தப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில், 'விரைவில்...’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இதனால், பழிதீர்க்க கொலை நடக்கப்போவது ஊர்ஜிதமாகியிருக்கிறது.
Also Read: திருச்சி: தலை துண்டிக்கப்பட்ட ரெளடி... கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் `விரைவில்' - அச்சத்தில் மக்கள்
இக்கொலைகள் குறித்துப் பேசிய பாரத முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பாரதராஜா-விடம் பேசினோம். ”தொடர் கொலைகளால் கொலைநகரமாக மாறிக் கொண்டிருக்கிறது, திருச்சி. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்வதால், மக்கள் வெளியில் நடமாடவே பயப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
தவறான வழியில் சென்று, சிறு குற்றங்களுக்காக சிறை செல்லும் இளைஞர்கள், சிறையில் கிடைக்கும் ரெளடிகளின் சகவாசத்தால் கூலிப்படைகளாக உருவெடுக்கிறார்கள். காவல்துறையினர் மீது அச்சமில்லாத காரணத்தால்தான் தைரியமாக பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கொலை செய்யத் துணிகிறார்கள். காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலைகளைத் தடுக்க வேண்டும்" என்றார்.
Also Read: திருச்சி: தலை துண்டிக்கப்பட்ட ரெளடி... கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் `விரைவில்' - அச்சத்தில் மக்கள்
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருணிடம் பேசியபோது, "தொடர் கொலை சம்பவங்களைத் தடுப்பதற்காகத் தனிப்படை உருவாக்கியுள்ளேன். ஒரே இரவில் மட்டும் மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ரெளடிகளைச் சுற்றி வளைத்துப் போலீஸார் தூக்கியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு சம்பவத்திலும் நன்கு விசாரித்து, கொலைசெய்தவர்கள், பின்புலத்தில் இருந்தவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிஷாந்த் கொலையில் தகவல் கிடைத்தும் அலட்சியமாக நடந்துகொண்ட போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் போகிறோம். ரெளடிகளோடு தொடர்பில் இருப்பவர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/serial-killings-in-trichy-shocks-public
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக