Ad

சனி, 4 செப்டம்பர், 2021

ஹிட்மேன் ரோஹித்தின் கெத்தான சதம், புது யுக்திகளோடு புஜரா, களத்தில் கோலி... டாப் கியரில் இந்தியா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமாக ஆடி 171 ரன்கள் லீட் எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது. நேற்றைய நாள் முடிவில் இந்திய அணி 270 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. நேற்றைய நாளின் முக்கிய மொமன்ட்ஸ் இங்கே!

ஹிட்மேனின் ருத்ரதாண்டவம்!

ரோஹித் ஷர்மாவிடமிருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஓவர்சீஸ் சதம் நேற்று கிடைக்கப்பெற்றிருக்கிறது. 2013-ம் ஆண்டிலிருந்தே ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். சமீபமாக ஓப்பனராகவும் களமிறங்கி வருகிறார். ஆனால், இதுவரை அவர் வெளிநாட்டு மைதானங்களில் ஒரு சதத்தை கூட அடித்திருக்கவில்லை. சதம் என்பதைத்தாண்டி ஒரு நல்ல தாக்கம் ஏற்படுத்தும் இன்னிங்ஸ் கூட அவரிடமிருந்து வெளிப்பட்டதில்லை. இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பு வரை இந்திய மைதானங்களில் ரோஹித்தின் ஆவரேஜ் 80 ஆகவும் அதுவே வெளிநாட்டு மைதானங்களில் 30-க்கு கீழுமே இருந்தது. இதனாலயே வெளிநாட்டு மைதானங்களில் ரோஹித்தின் தேர்வு எப்போதுமே கேள்விக்குள்ளாக்கப்படும். பலராலும் விமர்சிக்கப்படும். டெஸ்ட்டில் ரோஹித்தின் ஆட்டமுமே ஒயிட்பால் ஹேங் ஓவரோடு ஒருநாள் போட்டிகளில் ஆடுவதைப்போலவேத்தான் இருக்கும் என்பதால் இந்த விமர்சனமும் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே இருந்தது.

ஆனால், அதெல்லாம் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்பு வரையே. இந்த தொடரில் தன்னை ஒரு முழுமையான டெஸ்ட் கிரிக்கெட்டராக உணர்ந்து அற்புதமான இன்னிங்ஸ்களை ரோஹித் ஆடி வருகிறார்.

லார்ட்ஸில் ராகுலுடன் இணைந்து சிறப்பாக ஒரு சென்சுரி பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தார் ரோஹித். அந்த இன்னிங்ஸிலேயே ரோஹித் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 86 ரன்களில் அவுட் ஆனார். அந்த இன்னிங்ஸில் தவறவிட்டதை நேற்று ஓவலில் சாத்தியப்படுத்தியிருந்தார். ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்குமே அவரிடம் ஒரு முழுமையான நிதானம் வெளிப்பட்டிருந்தது. 5-6 வது ஸ்டம்ப் லைன்களில் செல்லும் பந்தை அழகாக விலகி நின்று ஆடியிருந்தார். அதாவது பந்தை எதிர்கொள்ள முடியாமல் லீவ் செய்யாமல், நான் எப்போது நினைத்தாலும் உங்களுடைய பந்துகளில் ஷாட் ஆட முடியும் என்பது போல ரோஹித்தின் லீவ்கள் இருக்கும்.

சதமடித்த ரோஹித்

இது நேற்றுமே அற்புதமாக வெளிப்பட்டிருந்தது. ஃபுல் லென்த் பந்துகளில் அற்புதமாக ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடியிருந்தார். ஷார்ட் பாலை வைத்து கட்டம் கட்ட முயன்ற போது அவற்றையும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனேயே சமாளித்திருந்தார்.

மொயின் அலியின் பந்தில் இறங்கி வந்து லாங் ஆனில் கெத்தாக சிக்சர் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார் ரோஹ்த்.

256 பந்துகளுக்கு 127 ரன்களை எடுத்திருந்த போது ராபின்சன் வீசிய ஒரு ஷார்ட் பாலில் அரைகுறையாக சீக்கிரமே புல் ஷாட் ஆட முயன்று கேட்ச் ஆனார். இந்த ஒரு ஷாட்டை தவிர ரோஹித்தின் இன்னிங்ஸில் குறை சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமே இல்லை. இனி வெளிநாட்டு மைதானங்களில் ரோஹித் ஓப்பனராக இறக்கப்படும்போது அவரின் தேர்வு குறித்து யாருமே கேள்வி கேட்க முடியாது. ஹிட்மேன் அப்படி ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார்.

புஜாராவும் புதிய யுக்தி!

புஜாரா 127 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். கடந்த இரண்டு டெஸ்ட்களாகவே புஜாராவின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் இருப்பதை காண முடிந்தது. எப்போதும் அதிக பந்துகளை எதிர்கொள்வதில் மட்டுமே குறியாக இருக்கும் புஜாரா இப்போது கொஞ்சம் வேகமாக ரன்கள் சேர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறார். முன்பெல்லாம் முதல் ரன்னை எடுப்பதற்கு 20-30 பந்துகள் எடுத்துக்கொள்ளும் புஜாரா, இப்போது க்ரீஸுக்குள் வந்தவுடனேயே ஒரு பவுண்டரி அடித்து பாசிட்டிவாக தொடங்குகிறார். இன்ஸ்விங் அல்லது ஆங்கிள் இன் ஆக உள்ளே வரும் பந்துகளையும் லேட் ஸ்விங் ஆகி வெளியே செல்லும் பந்துகளையும் டிஃபெண்ட் செய்வதில் புஜாரா தொடர்ச்சியாக தடுமாறவே செய்திருந்தார். ஆனால், நேற்று அதற்கு ஒரு தீர்வோடு வந்திருந்தார். புஜாரா பேக் ஃபுட் ஷாட்களை ஆடுவார் எனினும் அது அவரின் பிரதான தேர்வாக இருந்ததில்லை.

புஜாரா
ஆனால், நேற்று பெரும்பாலான பந்துகளை பேக் ஃபுட்டில் எதிர்கொண்டார். அடித்த 9 பவுண்டரிகளில் பெரும்பாலானவை பேக் ஃபுட் ஷாட்டில் வந்தவை.

பந்து நல்ல மூவ் ஆகும் சமயத்தில் ஃப்ரன்ட் ஃபுட்டில் ஆடும்போது ஸ்விங்கை கணிப்பது கடினமாக இருக்கும். அதேநேரத்தில், பேக் ஃபுட்டில் ஆடும்போது பேட்ஸ்மேனுக்கு கூடுதலாக ஒரு மைக்ரோ செகண்ட் கிடைக்கும். ஸ்விங்கை கணித்து ஆட அது பெரிய உதவியாக இருக்கும்.

அதனால்தான் பேக் ஃபுட் ஷாட்களை பிரதான தேர்வாக எடுத்துக் கொண்டு ஆஃப் சைடில் அற்புதமாக ஷாட்களை ஆடினார். புஜாரா மாதிரியான ஈடு இணையற்ற வீரர்கள் ஃபார்ம் அவுட்டிலிருந்து மீண்டு வந்து சிறப்பாக ஆட தொடங்கியிருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

கோலியின் சர்ப்ரைஸும் பாசிட்டிவிட்டியும்!

முதல் இன்னிங்ஸில் ரஹானே இறங்க வேண்டிய நம்பர் 5 இடத்தில் ஜடேஜா இறங்கியிருப்பார். வேகமாக விக்கெட் வீழ்வதால் ரஹானேவை கொஞ்சம் சேவ் செய்து வைக்கலாம் என்பதற்காக கோலி இப்படி செய்திருக்கலாம். ஜடேஜாவும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு ஆடவில்லை என்பதால் ரஹானேவின் இடம் அவருக்கு மீண்டும் கிடைத்துவிடும் என்றே தோன்றியது. ஆனால், கோலி இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா வலுவாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த போதும் ஜடேஜாவையே நம்பர் 5-ல் இறக்கினார். இது இங்கிலாந்துக்கு சின்ன சர்ப்ரைஸாக இருந்திருக்கும். நியுபாலில் லெஃப்ட்-ரைட் காம்பினேஷன் இங்கிலாந்து பௌலர்கள் லைன் & லென்த்தைப் பிடிப்பதிலும் கொஞ்சம் சிரமத்தை கொடுத்தது. கோலி ஆண்டர்சன் பந்தில் கவர் டிரைவ் அடிப்பதை தவிர்க்க வேண்டும். சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கவர் ட்ரைவே இல்லாமல் அடித்த 241 * இன்னிங்ஸை கோலி பின்பற்ற வேண்டும் என பல அறிவுரைகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், கோலி அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எப்போதும் போல ஆண்டர்சனை அதுவும் நியுபாலில் அசால்ட்டாக டீல் செய்து டிரைவ் ஆடினார் கோலி. ஒரு வகையில் இந்த துணிச்சலும் பாசிட்டிவிட்டியுமே கூட பாராட்டுக்குரியதுதான்.
ராபின்சன்

இங்கிலாந்தின் சொதப்பல்!

லார்ட்ஸ் வெற்றிக்குப் பிறகு லீட்ஸில் இந்திய பௌலிங் எப்படி சொதப்பியதோ அப்படியே நேற்று இங்கிலாந்தின் பௌலிங்கும் சொதப்பியிருக்கிறது. ரோஹித் மற்றும் புஜாராவின் பார்ட்னர்ஷிப்பே இங்கிலாந்தின் கையிலிருந்த போட்டியை இந்தியா பக்கம் திருப்பியது. ஆனால், இந்த கூட்டணியை இங்கிலாந்து பௌலர்களால் பெரிதாக சிரமப்படுத்தக்கூட முடியவில்லை. அழுத்தத்தில் சில ரிவியூக்களையும் வீணாக்கினார்கள். கடைசியாக நியுபாலை எடுத்தவுடனேதான் இங்கிலாந்துக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது. ஒரே ஓவரில் ரோஹித்தையும் புஜாராவையும் வெளியேற்றியிருந்தார் ராபின்சன். அந்த ஒரு ஓவர் மட்டுமே நேற்று இங்கிலாந்துக்கு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

இந்திய அணி இப்போது வரை 171 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. '45 mins of Bad Cricket' எதுவும் நிகழாமல் இருந்து ரோஹித்தை போல கோலியும் சதமடித்து இந்திய அணி 300 ரன்களுக்கும் மேல் இங்கிலாந்துக்கு டார்கெட் வைக்க முடியும். அப்படி வைக்கும்பட்சத்தில் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு சாதகமாக அமைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.



source https://sports.vikatan.com/cricket/india-bouncing-back-with-rohits-tremendous-century

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக