Ad

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

''விஜய் சேதுபதி, ஜெய்சங்கர் மாதிரி... ஆனால், அவரை கெடுக்க ஒரு கூட்டம்!'' - 'லாபம்' விழா ஹைலைட்ஸ்!

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்த 'லாபம்' திரைப்படம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. விஜய்சேதுபதியும், அவரது நீண்டகால நண்பரும் இயக்குநருமான பி.ஆறுமுககுமாரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனை நினைவுகூறும் வகையில் இந்தப்படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது. நிகழ்வின் முக்கிய தருணங்கள் இங்கே!

* விழாவுக்கு விஜய்சேதுபதி, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், சித்ரா லட்சுமணன், கே.ரங்கராஜன் மற்றும் படத்தில் நடித்த ப்ரித்வி, டேனி உள்பட பலரும் வந்திருந்தனர். விழா தொடங்குவதற்கு முன் அனைவரும் எழுந்து நின்று எஸ்.பி.ஜனநாதனுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினார்கள்.

* விஜய்சேதுபதி மேடை ஏறும் போது நிகழ்ச்சி தொகுப்பாளினி சௌம்யா, ''தமிழ்சினிமா உலகில் நடிகர் ஜெய்சங்கர் ஒருவருக்குத்தான் ஒரே மாதத்தில் நான்கு படங்கள் வெளியாகியிருக்கிறது. அடுத்து விஜய்சேதுபதிக்குத்தான் இப்படி ஒரே மாதத்தில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிறது. வாழ்த்துகள் சார்' என்றார். இதைக் கேட்டு சிரித்தபடியே மேடையேறிய விஜய்சேதுபதி, ''இதுக்கு நான் காரணமல்ல. கொரோனாதான் காரணம். நீங்க கொரோனாவுக்குத்தான் நன்றி சொல்லணும்" என்றார்.

jananathan

* நிகழ்ச்சியில் டேனியல் ரொம்பவே எமோஷனல் ஆனார். ''ஜனநாதன் சார் என் நடிப்பை ரொம்பவும் ரசிப்பார். பாராட்டுவார். ஒருநாள் எருமை மாடுகளோடு நானும் ஸ்ருதியும் நடிக்கிற காம்பினேஷன் காட்சி படமாக்கப்பட்டுச்சு. அன்னிக்கு சரியான வெயில், ஸ்ருதிஹாசன் முகம் சுருங்கிபோச்சு. என் முகமோ இன்னும் கருத்துப் போச்சு. நான் ஜனநாதன் சார்கிட்ட ரொம்ப வெயிலா இருக்கு சார். எங்க அப்பா 'நீ மாடு மேய்க்கத்தான்டா லாயக்கு'னு சொன்னது ஞாபகத்துல வந்திடுச்சு சார்னு சொன்னேன். இதைக் கேட்ட ஜனா சார், 'உங்க அப்பாவுக்கு போன் போடு'ன்னார். எங்கப்பா அப்பா இறந்துட்டார் சார்னு சொன்னேன். இதைக் கேட்ட அவர், 'உங்க அப்பா இருந்திருந்தா, நீ மாடு மேய்க்கக் கூட லாயிக்கு இல்லைனு சொல்லலாம்னு நினைச்சேன்'னார். அப்படி செமையா என்னை கலாய்ச்சிருக்கார்'' என்றார் டேனி.

* இயக்குநர் சித்ராலட்சுமணன் பேசும்போது, ''சினிமாவில் ஜெய்சங்கர் நல்லவர்னு பெயரெடுத்தவர். அவருக்கு அடுத்து அவரை மாதிரி நிறைய பேர் வந்திருந்தாலும், அவரை மாதிரியான ஒருத்தர் விஜய்சேதுபதி. சினிமாவுல ஒருத்தர் நல்லவரா இருந்தா அவரை கெடுக்கறதுக்குனு ஒரு கூட்டம் இருக்கும். எனவே கவனமா இருங்க. உதவும் உங்க குணத்தை விட்டுடாதீங்க'' என்றார். இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ''எல்லாருக்கும் வாழ்க்கை லாபத்தில் தொடங்கி இயற்கையில் முடியும். ஜனநாதனுக்கு 'இயற்கை'யில் தொடங்கி 'லாப'த்தில் முடிந்திருப்பது ஒரு பக்கம் பெருமையா இருக்கு" என்றார்.

* நிறைவாக விஜய்சேதுபதி பேசினார். இயக்குநர் ஜனநாதனுடனான நட்பு பற்றியும், அவரது நினைவுகளையும் பகிர்ந்தார். அப்படி ஜனநாதன் பேசிய விஷயங்களை மேடையில் சொல்லும்போது விஜய் சேதுபதியின் குரல் தழுதழுத்தது. தொண்டை அடைத்தது. அருகில் இருந்தவர்கள் ''குடிக்க தண்ணீர் வேண்டுமா'' எனக்கேட், ''அதெல்லாம் இல்ல... இது தம் பண்ற வேலை" என வெளிப்படையாகவே சொன்னார் விஜய் சேதுபதி. ''ஜனநாதன் சார் அப்டேட் செஞ்சுட்டே இருப்பார். எந்த ஒரு விஷயத்தையும் அவ்ளோ டீட்டெயிலா தெரிஞ்சு வெச்சிருப்பார். அவரோட இரண்டு படங்கள்ல நடிச்சிருக்கேன். அவரது கடைசி படத்தை நான் தயாரிக்க நேர்ந்தது, எங்க முன்னோர்கள் செஞ்ச புண்ணியம்' என நெகிழ்ந்தார் விஜய் சேதுபதி.



source https://cinema.vikatan.com/tamil-cinema/vijay-sethupathi-compared-with-yesteryear-actor-jai-shankar-in-laabam-movie-release-function

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக