Ad

புதன், 1 செப்டம்பர், 2021

`வித்தியாச அரசியலைச் சட்டமன்றத்தில் காட்டுங்கள்; பல்கலைக்கழக இணைப்பில் அல்ல!’ - அண்ணாமலை

மாமன்னர் பூலித்தேவரின் 306-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெற்கட்டும் செவலிலுள்ள பூலித்தேவரின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தமிழக பாஜக-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்கூட விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைக் கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு மக்களுடைய பாரம்பர்யப் பழக்கங்களையும், உணர்வுகளையும் மதிக்கக்கூடிய வகையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன்கூடிய அனுமதி அளிக்க வேண்டும்.

அண்ணாமலை

அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் அதிமுக- பாஜக இரண்டு கட்சிகளும் தமிழகத்தின் நலனுக்கான விஷயங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகின்றன. வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த இடம் புனரமைக்கப்பட்டதன் மூலம் தியாகிகள் வரலாறு சிதைக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்‌ ராகுல் காந்தி மட்டுமே குற்றம்சாட்டியிருக்கிறார்.

Also Read: பாஜக அண்ணாமலை: டாஸ்மாக் நடத்தலாம், சதுர்த்தி பேரணி நடத்தக் கூடாதா?|வருகிறது வலிமை சிமெண்ட்|Quicklook

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரான அம்ரீந்தர் சிங், ஜாலியன்வாலா பாக் நினைவிடம் புனரைமைக்கபட்டதை `அழகு’ என்று குறிப்பிட்டு வரவேற்றிருக்கிறார். எனவே, கட்சிக்குள்ளேயே முரண் கருத்துகள் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தியாகிகள் நினைவிடத்தைச் செம்மைப்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. கடந்த 1958 முதல் தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் முந்தைய முதலமைச்சரின் பெயரில் ஒருவர் செய்ததை மற்றொருவர் எடுப்பதும், மாற்றுவதும் தொடர்கதையாக நடந்துவருகிறது. இந்த நடைமுறையை இந்த அரசாவது கைவிட வேண்டும். அதன்படி பல்கலைக்கழகங்களை இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்.

அண்ணாமலை

`தமிழகத்தில் வித்தியாசமான அரசியலை காட்டப்போகிறோம்’ என தி.மு.க-வினர் சொன்னார்கள். அவர்கள், வித்தியாசமான அரசியலை சட்டப்பேரவையில்தான் காண்பிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை இணைப்பதில் அரசியலைக் காட்டக் கூடாது. பல்கலைக்கழகங்கள், அதன் பெயரிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழகங்களை இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்பதையே பாஜக வலியுறுத்துகிறது” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-state-leader-slams-dmk-government-in-jayalalitha-university-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக