Ad

சனி, 18 செப்டம்பர், 2021

குஜராத்: மொத்த அமைச்சரவையும் மாற்றம்; 8-வது முறை ஆட்சி அமைக்க பாஜக வியூகமா?!

கடந்த ஐந்து மாதங்களில் பாஜக ஆளும் நான்கு மாநிலங்களில் ஆறு முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா மாற்றப்பட்டு அவருக்கு பதில் பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார். அஸ்ஸாம் முதல்வராக இருந்த சரபானந்த சோனோவால் மாற்றப்பட்டு ஹிமாந்த பிஸ்வா சர்மா முதல்வராக்கப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் மட்டும் இரண்டு முறை முதல்வர்களை மாற்றியிருக்கிறது பா.ஜ.க. தீரத்சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகிய இருவர் அடுத்தடுத்து மாற்றப்பட்டு புஷ்கர் சிங் தாமி தற்போது முதல்வராக இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து தற்போது குஜராத்தின் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மாற்றப்பட்டு, பூபேந்திர படேல் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கிறார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய் ரூபானி, ``பாஜக-வில் பொறுப்புகள் மாறிக்கொண்டேயிருக்கும். அதுதான் அந்தக் கட்சியின் சிறப்பு. புதிய முதல்வரின் கீழ் ஆட்சி புதிய உற்சாகத்துடன் நடக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேர்தலைச் சந்திக்கப்போகிறோம். புதிய உத்வேகத்தோடு கட்சியில் பணியாற்றத் தயாராக இருக்கிறேன்” என பதிலளித்தார். மற்ற மாநிலங்களில் முதல்வரை மட்டும் மாற்றிய பாஜக, குஜராத்தில் மட்டும் முதலமைச்சரோடு சேர்ந்து ஒட்டுமொத்த அமைச்சரவையையும் மாற்றி அமைத்திருக்கிறது.

குஜராத் அமைச்சரவை

முதல்வர் பூபேந்திர படேலுடன், பதவியேற்ற 25 உறுப்பினர்கள்கொண்ட புதிய அமைச்சரவையில் 10 பேர் கேபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சர்களாக இருக்கின்றனர். முதல்வர் உட்பட பெரும்பாலானோர் புதுமுகங்கள். ஏழு முறை குஜராத்தில் ஆட்சி அமைத்த பாஜக, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் இந்த மாற்றத்தைச் செய்திருக்கிறதா... இந்த மாற்றம் பாஜக-வின் வியூகமா?

Also Read: உத்தரப்பிரதேசம் முதல் குஜராத் வரை... சட்டமன்றத் தேர்தல்களுக்கான பாஜக-வின் அதிரடி நகர்வுகளின் பின்னணி

குஜராத்தில் நடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின்போது விஜய் ரூபானிதான் முதல்வராக இருந்தார். முதல்வராக அவர் எதிர்கொண்ட ஒரே சட்டமன்றத் தேர்தலும் அதுதான். 2012-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 115 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, 2017 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 99 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஓராண்டில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் அதிருப்தியைச் சம்பாதித்திருக்கும் விஜய் ரூபானியை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை எனச் சொல்கிறார்கள். எனவேதான் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்கின்றனர். விஜய் ரூபானி பதவி விலகியதும், நிதின் படேல், சி.ஆர்.படேல், மன்சுக் மாண்டவியா போன்ற பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் யாராவது முதல்வராகக்கூடும் என்ற பேச்சு நிலவியது. ஆனால், யாரும் எதிர்பார்க்காதவிதமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடைய பூபேந்திர படேல் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பூபேந்திர படேல் இளங்கலை படித்தவர். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுவந்தவர். இதுவரை அமைச்சர் பொறுப்பில்கூட இருந்ததில்லை. கட்லோடியா சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதன்முறையாக 2017-ம் ஆண்டுதான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் அமைச்சர்கள்

குஜராத்தில் தொடர்ந்து பாஜக-வுக்கு ஆதரவாக இருக்கும் பட்டேதார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை சிறிது காலமாகவே கட்சிக்குள் இருந்துவந்திருக்கிறது. அதேநேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பட்டேதார் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தாதவராக இருக்க வேண்டும் எனவும் பா.ஜ.க விரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

2022-ம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பா.ஜ.க-வுக்கு பட்டேதார்களின் ஆதரவு தேவை. அதேநேரத்தில் அவருக்கு எதிர்ப்பும் இருக்கக் கூடாது. ஆனால், பட்டேதோர் சமூகத்தைச் சேர்ந்த நிதின் படேல் போன்றோருக்குக் கட்சியில் பெரிய அளவில் எதிர்ப்பு இருந்தால், தேர்தல் வேலைகளில் தொய்வு ஏற்படும் என்பதாலும் பூபேந்திர படேல் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த தேர்தல்வரை ஆட்சியை நடத்துவதற்கு தாங்கள் எதிர்பார்த்த மேற்குறிப்பிட்ட தகுதிகளோடு இருந்த பூபேந்திர பட்டேலை நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் தேர்வு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

கடந்த தேர்தலில் பா.ஜ.க-வை 100 இடங்களுக்குள் சுருக்குவதில் வெற்றி பெற்ற காங்கிரஸ், குஜராத் மாநிலத்தில் முன்னர் இருந்த அமைச்சரவையின் செயல்பாடு பற்றி மக்களிடம் இருந்த அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு பா.ஜ.க-வை தாக்கத் தொடங்கினால், அது கட்சிக்கு பலவீனமாக அமைந்துவிடும் என்பதால் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் மாற்றியிருக்கிறது பாஜக. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நடப்பது வரையில் வருகிற எல்லா மாநிலத் தேர்தல்களுமே மோடி - அமித் ஷா இரட்டையர்களுக்கு விஷப் பரீட்சைதான் என்றபோதும் கால் நூற்றாண்டாக ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் குஜராத் மாநிலத் தேர்தலில் வெற்றிபெறுவது மிக முக்கியமானது.

அமித் ஷா - நரேந்திர மோடி

சொந்த மாநிலத்தில் தோற்பது என்பது மோடியின் எதிர்கால அரசியலுக்கு மிகவும் ஆபத்தானது. எனவேதான் இந்த மாற்றத்தைச் செய்திருக்கிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவுகளில்தான் பாஜக செய்த மாற்றங்கள் எந்த அளவுக்கு அவர்களுக்குக் கைகொடுத்தன என்பது தெரியவரும். அதுவரை நடக்கும் அரசியல் ஆட்டத்தை வெளியிலிருந்து நாம் வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்!



source https://www.vikatan.com/government-and-politics/politics/total-cabinet-reshuffled-in-gujarat-is-it-a-strategy-to-rule-for-the-8th-time

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக