Ad

வியாழன், 2 செப்டம்பர், 2021

வரக்கால்பட்டு வாடகை சைக்கிளும் அமெரிக்க பயணமும்! - கிராமத்தானின் பயணம் – 8

“Drop down” மூலம் பாகம் 1-7 படிக்காதவர்கள் படிக்கலாம்

போன வாரம் வாடகை வண்டி வியாபாரம் வரக்கால்பட்டிலிருந்து துவங்கியிருக்கலாம் என்று என் அறிவுக்கு (!!) எட்டியதை சொன்னேன். எப்படி என்று பார்ப்போம்.

வரக்கால்பட்டின் உயிர்நாடி கடலூர் பிரதான சாலை. பேருந்து நிறுத்தத்தின் பெயர் வெள்ளைகேட். அங்கு வந்துதான் பேருந்து பிடித்து நெல்லிக்குப்பம் பள்ளிக்கு செல்லவேண்டும். அங்கே இறங்கிதான் சாலையை கவனமாக கடந்து புகைவண்டி தடம் ஓரம் குட்டையை கடந்து வீட்டுக்கு வருவோம். வெள்ளைகேட் திங்கள் கிழமைகளில் பரபரப்பாகிவிடும். அன்றுதான் ஊர் சந்தை கூடும்.

சந்தை

ஆடு, மாடு, கோழி, காய்கறிகள் விற்க வாங்க என சுத்துப்பட்டு கிராம விவசாயிகள் கூடுவார்கள். மொத்தத்தில் வெள்ளைகேட் சுறுசுறுப்பாக இயங்கும் சந்திப்பு. அந்த இடத்தில் தான் மாமாவின் கடை. முதலில் பெட்டி கடையாக ஆரம்பித்தது. பெரிய கண்ணாடி பாட்டில்களில் "மல்லாட்டை உண்டை", "கை முறுக்கு", "தேன் மிட்டாய்" என தின்பண்டங்கள். இடையில் நல்ல தேக்கு மரத்தாலான கல்லாப்பெட்டி. பின்பக்கம் பெரியவர்களுக்கான பீடி, சுருட்டு, புகையிலை, வெற்றிலை பாக்கு, மூக்கு பொடி. அந்த புகையிலை ஒரு மாதிரி மெல்லிய வண்ண வண்ண பிளாஸ்டிக் தாள்களில் கட்டி வரும். வாங்குபவர்கள் அந்த தாள்களை அங்கும் இங்கும் எறிவார்கள். பல வண்ண தாள்களை நானும் சேகரித்தேன். எங்கே எப்போது யாருக்கு கொடுத்தேன் என்று தெரியவில்லை. அது மட்டுமல்ல நான் பள்ளி செல்லும் தினசரி பேருந்து பயணசீட்டுக்களை கூட சேகரித்து ரப்பர் பேண்ட் போட்டு கட்டி வைத்து இருந்தேன்.

விடுமுறை நாட்களில், அப்பாவின் பழைய அலுவலக பையை நடத்துனர் பையாக பாவித்து சில்லறையை குலுக்கி பயணசீட்டு கொடுப்பேன். நெல் மூட்டைகள்தான் பேருந்து. நான் எப்போதும் நடத்துனர். ஏனெனில், TST டவுன்பஸ்ஸில் நடத்துனராக அப்போது இருந்த பாலு என் கனவு நாயகன். சுத்தமான காக்கி உடை, எண்ணெய் தேய்த்து தூக்கி சீவிய முடி, நெற்றியில் திருநீறு, காலில் நீல நிறத்தில் சிங்கப்பூர் செருப்பு (Bun Cheppal). பெண்களிடம் சிரிக்க சிரிக்க பேசுவதும், பேருந்தின் ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து நின்று வருவதும், வாய்ப்பே இல்லை. வற்புறுத்தி அப்பா அம்மா என்னை CA படிக்கவைத்தார்கள். இல்லையென்றால் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு "சூப்பர் ஸ்டார்" கிடைத்திருக்கலாம்.

Representational Image

குறைந்தபட்சம் கடலூர் நெல்லிக்குப்பம் தடத்தில் பிரபலமான நடத்துனராக இருந்திருப்பேன். இப்போது வருத்தப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. அப்புறம் நான் நடத்துனர் வேலை பார்த்த அந்த நெல் மூட்டை பஸ்ஸில் ஓட்டுநர் வேலை பார்த்த சித்தப்பா பையனும் நன்கு படித்து நல்ல உத்தியோகத்துக்கு போய்விட்டார்.

ஊர் வளர வளர மாமா கூடுதலாக வாடகை மிதி வண்டி நிலையம் ஆரம்பித்தார். கூடவே சர்பத், டீயும்.விடுமுறை நேரத்தில் மாமாவுக்கு உதவியாக வாடகை எடுக்க வரும் நபர் பெயர், ஊர், எடுத்த நேரம் எல்லாம் ஒரு நீண்ட குறிப்பேட்டில் பதிவு செய்வேன். அப்போது ஆதார் அட்டையோ கை பேசியோ புழக்கத்தில் இல்லை. எல்லாமே ஒரு நம்பிக்கையின் பேரில்தான்.

பார்த்த மாத்திரத்தில் நம்பிக்கை வரவில்லை என்றால் எந்த ஊர், எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் போன்ற வாடகைதாரர் பற்றிய அடிப்படை கேள்விகள் கேட்கவேண்டும். (KYC முக்கியம்). மாமா ஊதியமாக ஒரு சர்பத் கொடுப்பார். முதலில் பெரிய ஐஸ் கட்டிகளை ஒரு பிரத்யேக பையில் போட்டு மர சுத்தியால் தூளாக்குவார். பக்கத்திலேயே ஒரு பாத்திரத்தில் ஏற்கனவே கண்ணாடி டம்பளர்கள் கழுவிய நீரில் ஒரு கண்ணாடி டம்ளரை கழுவி அதில் அந்த நொறுக்கிய ஐஸ் தூளை இடுவார். பின் நீண்ட பாட்டில்களில் இருந்து ஒன்றிரண்டு வண்ண திரவங்களை சேர்ப்பார். அடுத்து ஒரு சிறு கரண்டியில் நன்னாரி திரவம். அதன் மேல் ஒரு எலுமிச்சம்பழத்தை நன்கு அழுத்தி பிழிந்து சக்கையை தூக்கி பக்கத்தில் உள்ள புதரில் எறிவார்.

Representational Image

கடைசியில் தேவையான அளவு தண்ணி சேர்த்து விருட் விருட்டென்று ஒருவித இசை எழுப்பவுதுபோல் சிறு கரண்டியால் கலக்கி கண்ணாடி டம்பளரை இடது கையால் உயர்த்தி கீழே இருக்கும் தண்ணீரை வலது கையால் துடைத்து என் கையில் கொடுப்பார். சமயத்தில் மாமா வேலையாய் இருக்கும்போது சர்பத் பண்ண வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மாமாவின் லாவகம் வராது. அது ஒரு கலை. நல்ல வெய்யில் காலத்தில் நன்னாரி சர்பத் போல ஒரு சுகம் இல்லை. அதற்கு ஒரே போட்டி கடலூர் பேருந்து நிலைய லஸ்ஸி.

மேலே சொன்னதுபோல் 40-45 வருடத்துக்கு முன்பேயே மிதிவண்டிகளை வாடகைக்கு விடும் தொழில் வரக்கால்பட்டில் தழைத்தோங்கியது. ஆகவேதான் சொன்னேன், இந்த ரெண்ட்-எ-கார் தொழிலுக்கு ஆரம்பமே வரக்கால்பட்டாக இருக்கக்கூடும் என்று (!!).

நான் வாடகைக்கு எடுத்த முதல் வாகனம் "அரை சைக்கிள்". ஆனால் அதுல பாருங்க மாமா கடையில் "அரை சைக்கிள்" கிடையாது. அதற்கு கடைத்தெருவுக்குத்தான் போகவேண்டும். தண்டபாணி ஹோட்டல் (கீற்று கொட்டகை, 10 மர இருக்கைகள், ஒரு கண்ணாடி அல்மிரா. போண்டா, பகோடா, மிக்ஸர், காராசேவ்) தாண்டி ஒரு சவுண்ட் சேவை கடை (எப்போதும் ஒலிபெருக்கி பழுது பார்த்துக்கொண்டு). அடுத்து அரை சைக்கிள் கடை. வீட்டில் ஒப்புதலும், 25 பைசாவும் வாங்கி, சைக்கிள் எடுக்கும்போது ஏதோ ரிச்சர்ட் பிரான்சன் விண்வெளிக்கு போன மாதிரி ஒரு குதுகூலம். 30 நிமிடம்தான். அதில் அண்ணனோ சித்தப்பாவோ அக்காவோ கற்றுத்தருகிறேன் பேர்வழி என்று முதுகில் குத்துவதும் திட்டுவதும் நான் கீழே விழுந்து சிராய்த்துக்கொள்வதும் நடக்கும்.

சைக்கிள் கடை

பின்னர் சித்தப்பாவின் பெரிய மிதி வண்டி எடுத்து குரங்கு பெடல் செய்து நன்கு தைரியம் வந்தபின் முழு பெடல் என படிப்படியாக முன்னேறி கற்றுக்கொண்ட சைக்கிள் பிற்காலத்தில் நான் தன்னிச்சையாக "டியூஷன்" சென்று வரவும், பூங்காவனம்மாள் வராவிட்டால், அப்பாவின் மதிய உணவை அவரின் வேலையிடத்துக்கு (ஆலை) எடுத்து செல்லவும் மிகவும் உதவியது. சில நேரங்களில் சாலையில் மற்ற வாகனங்கள் இல்லாதபோது இரண்டு கைகளையும் எடுத்துவிட்டு தெனாவட்டாக ஓட்டும் அளவுக்கு வளர்ந்தேன். அம்மாவுக்கு தெரியாது நான் இந்த குரங்கு வேலையெல்லாம் செய்வேன் என்று. நம்பி அனுப்பிவைப்பார்.

எனக்கும் என் மனைவிக்கும் இந்த மாதிரி பழங்கதைகளை அசை போடுவது மிகவும் பிடிக்கும். என்ன செய்வது, வாலிப வயசில்லையா? நான் வரக்கால்பட்டு என்றால் மனைவி வேலப்பாடி (வேலூர்) கதை ஆரம்பித்துவிடுவார், தாத்தா கடை ரோஸ் மில்க், ஜாப்பனீஸ் கேக், மாம்பழ சீசன், பலாப்பழம் என்று. நிச்சயமாக எல்லோருக்குமே கடந்த காலத்தை நினைத்து அசைபோடுவது மகிழ்ச்சிதான். நிகழ்காலத்துக்கு வருவோம். எங்கே இருந்தேன். ஹாங். டென்வர் இரவு தங்கினோமா. அடுத்து கியர்நீ.

மே 22 - கியர்நீ - Kearney (Nebraska) - ஓரிரவு ஓய்வு.

மே 23-24 - அமிஸ் (Ames, Iowa) - முந்தைய இரவு (May 22, 2019, US Time). இந்திய தேர்தல் முடிவுகள் வெளியானது. நான் விடிய விடிய டிவி பார்த்துக்கொண்டிருந்தேன். மறுநாள் 640 கிமீ ஓட்டவேண்டும். மனைவி கண்டிப்பாக சொல்லிவிட்டார்கள் நான் ஓட்டவேகூடாதென்று. சோதனையாக கியர்நீ - அமிஸ் சாலை சரக்கு லாரிகளால் நிரம்பி வழிந்தது. மனைவி பத்திரமாக அமிஸ் கொண்டு சேர்த்தார். அமிஸ் போக முக்கிய காரணம் கோயம்புத்தூர் நண்பர். அவருடன் தொழில் சம்பந்தமாக ஒரு சின்ன வேலை. ஸ்டோரி சிட்டி என்ற இடத்தில் ஏறக்குறைய 50 அமெரிக்கர்களை அமர்த்தி வாகன உதிரிபாக தொழிற்சாலை வைத்துள்ளார். ஸ்டோரி சிட்டி ஒரு ரம்மியமான கிராமம்.

மே 25-26 மேடிசன் (Wisconsin): புகழ் பெற்ற "விஸ்கான்சின்" பல்கலைக்கழகம் சுற்றிப்பார்த்தோம். மென்டோடா ஏரி கரையோரம் உள்ளது. சில சிறிய ஷாப்பிங் செய்துவிட்டு மேடிசன் மாநில "கேபிடல்" கட்டிடம் சுற்றி பார்த்தோம்.

Down town, Story city

மே 27-28 சிகாகோ (Illinois): இங்குதான் எங்கள் விடுதி கட்டணம் மிக அதிகம். ஹில்டன். ஓரிரவு வாகனம் நிறுத்த மட்டும் US$ 100 (இன்றைய 7,500 ரூ). மேடிசனிலிருந்து சிகாகோ போகும் வழியில் "வாய்ன்" என்ற இடத்தில ராதாகிருஷ்ணன் கோவில். பளிங்கு கற்களால் இழைத்து கட்டியுள்ளார்கள்.

சிகாகோ நகரின் மய்யத்திலே அழகான மில்லினியம் பூங்கா, கிளவுட் கேட் சிற்பம் (அனிஷ் கபூர், இந்தியா வம்சாவளி, உருவாக்கியது) உள்ளன. அந்த பிரதான சாலையே மிகவும் அழகானது.

சிகாகோவில் இருந்து 60 கிமீல் அரோராவில் பாலாஜி கோவில். நல்ல புளியோதரை முறுக்கு சாப்பிட்டுவிட்டு (சாமி கும்பிட்டபிறகுதான்) இரவுக்கும் சேர்த்து வாங்கி வந்து அறையில் உட்கார்ந்து "அ னு ப வி த் து" சாப்பிட்டோம். ஒரே குறை இன்னும் கொஞ்சம் வாங்கவில்லையே என்று.

அடுத்த நாள் சிகாகோவில் வசிக்கும் என் பால்ய நண்பனுடன் (வரலாறு பாடத்தின்போது பக்கத்தில் தூங்கியவன்) சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டே பழையகாலத்தை அசைபோட்டோம். எதிர்பாராவிதமாக ஒரு பிச்சைக்காரர் உள்ளே வந்து விடாப்பிடியாக 1 டாலர் கேட்டு தொந்தரவு செய்தார். என் நண்பனோ கண்டு கொள்ளாதே என்று சொல்லிவிட்டான். அவரோ நகர்வதாக இல்லை. இந்த மாதிரி காபி ஷாப்பில் வந்து தொந்தரவு செய்வது நிச்சயமாக இயல்பான விஷயம் இல்லை. நல்ல வேலை கடை சிப்பந்தி அவரை கையில் 1 டாலர் கொடுத்து வெளியேற்றினார். நண்பனிடம் எங்கள் பயணம் இதுவரை இனிமையாகவும் பாதுகாப்பாகவும் இருந்ததாக சொன்னேன். அதற்கு "நீ மிகவும் பாதுகாப்பான இடங்களிலேயே தங்கி பாதுகாப்பான இடங்களையே பார்த்ததால் அப்படி சொல்கிறாய். சிகாகோ மிகவும் வன்முறை நிறைந்த இடம். வருடத்திற்கு 600-700 பேர் கொல்லப்படுகிறார்கள்" என்று சொன்னான்.

Chicago Illinois - Cityscape

நிறைய கதை கேட்டிருக்கிறேன் என் சொந்தங்களிடமிருந்து. எப்போதும் சிறிய அளவு டாலர் கையில் வைத்துக்கொள்ளுங்கள். யாரேனும் கேட்டால் 5-10 கொடுத்து காப்பாற்றிகொள்ளுங்கள். சில நேரங்களில் 5-10 க்காக உங்களை தாக்கவோ சுடவோகூட செய்வார்கள் என்று.

மே 29 இண்டியானாபோலிஸ் (Indianapolis) & மே 30 கொலம்பஸ் (Ohio): ஓரிரவு.

மே 31-ஜூன் 1 மன்ரோவில் (Pennsylvania) - கொலம்பஸிலிருந்து 340 கிமீ. இங்கிருந்து பிட்ஸ்பர்க் பெருமாள் கோவில் மற்றும் ISKCON (West Viriginia) கோவில் சென்று வந்தோம். ISKCON ஏறக்குறைய ஒரு மலை முழுதும் பரவி உள்ளது. உள்ளேயே கோஷாலா, குதிரைகள், மயில்கள், த்யான மண்டபம் என மிக பரந்து விரிந்து மிக அமைதியான சூழலில் அமர்ந்திருந்தது. அட இடம் அமைதியாக உள்ளது. உணவும் நன்றாகவே உள்ளது. பேசாமல் அங்கேயே தங்கிவிடலாமா என்ற எண்ணம் தோன்றியது. கண்டுகொள்ளாதீர்கள். இந்த மாதிரி எனக்கு நிறைய வினோத எண்ணங்கள வரும். அப்புறம் போய்விடும்.

ஜூன் 2-4 ஹைட்ஸ்டவுன் (New Jersey) - நியூ ஜெர்ஸி போகும் வழியில் பாலாஜி (!!) டிரைவ் என்ற சாலையில் பாலாஜி கோவிலில் சாமி கும்பிட்டு மெக்ஸிகன் அமெரிக்கன் சுட்ட தோசையை சாப்பிட்டு கிளம்பினோம். கோவிலின் பிரகாரத்தைவிட கான்டீன் தான் நிரம்பி வழிந்தது. சாப்பிட்டபிறகு காரணம் விளங்கியது. அவ்வளவு ருசி. இங்கே அந்த வினோத எண்ணம் வரவில்லை.

மன்ரோவில்-நியூ ஜெர்சி சாலை சற்றே கலக்கமூட்டியது. நியூ ஜெர்சி மிக பெரிய நகரம். அங்கேயும் ஒரு நண்பரோடு தொழில் சம்பந்தமாக சின்ன வேலை. மிக விசாலமான சாலைகள். பரபரப்பாக இயங்கிய போக்குவரத்து. நியூ ஜெர்சி சற்றே பாதுகாப்பற்ற ஊர்போலவும் தோற்றமளித்தது. நல்ல வேலை தங்கிய விடுதி சற்று தள்ளி ஹைட்ஸ்டவுன் என்ற அமைதியான சிற்றூரில். வேலை, ஷாப்பிங், நிறைய ஓய்வு. இடையில் வில்மிங்டன் (Delaware) என்ற அழகிய சிற்றூருக்கு சென்று மதிய உணவு அருந்தி திரும்பினோம். வில்மிங்டன் சற்றே ஏழ்மையான ஊர்போல தோற்றமளித்தது.

Iskcon Temple

ஜூன் 5 மில்போர்ட (Connecticut) - எங்கள் மகளை பார்ப்பதற்கு முன் கடைசி நிறுத்தம். புகழ்பெற்ற யேல் (Yale) பல்கலைக்கழகம் சுற்றிப்பார்க்கத்தான். ஊரே பல்கலைக்கழகத்தை சுற்றிதான். அங்கு படிக்கத்தான் முடியவில்லை பார்க்கவாவது முடிந்ததே என்று சந்தோஷப்பட்டு அடுத்த இடத்துக்கு ஆயத்தமானோம்.

ஜூன் 6-12 வைட் ரிவர் ஜங்ஷன் (Vermont) & ஹனோவர் (New Hampshire). வை.ரி.ஜ என் மகள் வசிக்கும் இடம். ஹனோவர் அவள் கல்லூரி உள்ள இடம். இந்த வாரம் அவள் படித்து முடித்து பட்டம் பெறும் வைபவம். வாழ்க்கையில் ஒரு முக்கிய நாள். மகள் நண்பர்களோடு வீடு எடுத்து தங்கியிருந்தாள். ஆகவே நாங்கள் வை.ரி.ஜ Holiday Inn-ல் தங்கினோம். என் இன்னொரு மகளும் கனடாவில் இருந்து வந்திருந்தாள். அந்த விடுதி சிப்பந்தி என்னை ஒரு மாதிரி பார்த்தார். எனக்கும் அந்த முகம் பரிச்சயமாக தோன்றியது. 2018இல் தங்கியபோது இதே பெண்மணிதான் பணியில் இருந்தார். அவர்களும் என்னிடம் கேட்டார்கள் நான் இதற்கு முன் தங்கி இருக்கின்றேனா என்று. என் கோரமுகம் அவர்கள் மனதில் அவ்வளவு ஆழமாக இடம்பிடித்துவிட்டது போலும்.

மிக அருமையான இடங்கள் வை.ரி.ஜ ம் ஹனோவரும். மலைகள் சூழ்ந்து பல வண்ண மரங்களால் (பருவ நிலை மாறும்போது இலைகள் நிறம் மாறி அதை பார்க்கவே சுற்றுலா பயணிகள் வருவதுண்டு). விடுதிக்கும் என் மகளின் வீட்டிற்கும் கல்லூரிக்கும் ஒரு வாரத்தில் 20 முறை போய் வந்திருப்பேன். அங்கு வாகனம் ஓட்டுவது அவ்வளவு இனிமையான அனுபவம்.

எல்லாம் முடிந்து இரு வருடம் கழித்து மகள் வெற்றிகரமாக MBA பட்டம் வாங்கும் அந்த தருணம் மிக நெகிழ்ச்சி. அந்த மாணவர்களில் 20-25% இந்தியர்கள்/ வம்சாவழியினர். பாதிக்குமேல் பெண்கள். மகள்கள் எங்களை விட்டு வெகுதூரம் போய் சுதந்திரமாக தற்சார்புடன் படித்து வெற்றிகரமாக வந்தது சந்தோஷம். அதே நேரம், இனிமையான படிக்கும் பருவம் முடிவுக்கு வந்து, நண்பர்களை பிரிந்து, பழகிய இடம் விட்டு விலகி அடுத்த கட்டமாக வேலை, குடும்பம் என்று பொறுப்புகள் அதிகரிக்கும். அதானே வாழ்க்கை.

White's Beach- Vermont

நன்கு ஞாபகம் இருக்கிறது. என் அக்கா கல்லூரியில் படிக்கும்போது 1 மணி நேரம் தாமதமாக வீடு திரும்பியபோது வீடே அல்லோலகல்லோல பட்டது. அவ்வளவு புத்திமதி அக்காவுக்கு. இன்று பாரதியின் கனவு ஓரளவுக்கு மெய்த்து நம் பெண்கள் உலகெங்கும் கொடி கட்டுகிறார்கள். பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்து இல்லை. அதே சமயம் பொதுவாக நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கடைபிடித்து வேலை/தொழிலிலும் வெற்றி பெற்று வருகிறார்கள். சந்தோஷத்துடன் அமெரிக்காவுக்கும், பத்திரமாக அரவணைத்த ஹயிலாண்டருக்கும் நன்றி சொல்லி, பாஸ்டன் மூலம் ஜூன் 12 துபாய் வந்தோம். 37 நாட்கள், 20 மாநிலங்கள், ஏறக்குறைய 8,000 கிமீ வாகனத்திலேயே பயணம், அளவிடமுடியாத அனுபவங்கள். இருக்கும்வரை நினைத்து அசைபோட்டு சந்தோஷப்படலாம். அதற்கப்புறம்? அதைப்பற்றி கவலைப்பட்டால் எல்லாமே விரயம்போல் தோன்றலாம்.

மேலே சொன்ன பயணங்கள் 2019இல். 2018இல் கிழக்கில் இருந்து மேற்கு பக்கம் சென்றோம், முற்றிலும் வேறு பாதையில். (Maine to San Fracisco). விமான/வாகன பயணம். பின் கனடா பற்றி பார்க்கும்போது அதையும் சேர்த்து பார்க்கலாம். அடுத்த வாரம் நான் ஒரு வருடம் வாழ்ந்த மற்றும் என் மனம் கவர்ந்த அழகான க்ரகோவ், போலந்துக்கு (Krakow, Poland) போய் வரலாம்.

-சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-article-about-village-man-travel-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக