உத்தரப்பிரதேசத்தில், அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளக் கட்சிகள் அனைத்தும் அதற்கான பணிகளைச் செய்யத் தொடங்கியிருக்கின்றன. 2002-ம் ஆண்டிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் மாறி மாறி உத்தரப்பிரதேசத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தன. தொடர்ந்து, 2017-ம் ஆண்டு தேர்தலில், 312 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது பாஜக. தனித்துப் போட்டியிட்ட மாநிலக் கட்சிகளும், காங்கிரஸும் படுதோல்வியைத் தழுவின.
அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் முனைப்போடு தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுவருகிறது பாஜக. கடந்த இரு தினங்களுக்கு முன்னர்கூட ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. செப்டம்பர் 15-ம் தேதியன்று உ.பி-யின் அலிகரில் நடந்த விழாவில் ஜாட் அரசர் மகேந்திர பிரதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான அடிக்கல்லையும் நாட்டினார் அவர். இது தேர்தலையொட்டி ஜாட் சமூகத்தினர் வாக்குகளைக் கவரும் வகையில் வெளியிடப்பட்ட அறிவிப்புதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இருப்பதால், உத்தரப்பிரதேசத்தின் ஒரு பகுதி மக்கள் முழுவதும் பாஜக-வுக்கு எதிராக நிற்கிறார்கள். இருந்தும், அயோத்தியில் அமையவிருக்கும் ராமர் கோயில் உள்ளிட்ட முக்கியமான சில திட்டங்களின் மூலம் மக்களைக் கவர்ந்து, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது பாஜக.
இந்தநிலையில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகப் பல்வேறு தலைவர்கள் களமிறங்கியிருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்பதை அடுத்தடுத்த பத்திகளில் காணலாம்.
சமாஜ்வாடி
2017 சட்டமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் அனைத்தும் மண்ணைக் கவ்வியபோது, ஓரளவுக்கான வெற்றியைப் பெற்றிருந்தது சமாஜ்வாடி கட்சிதான். அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி கடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றி, உ.பி-யில் எதிர்க்கட்சியாக இருந்துவருகிறது. கடந்த மே மாதத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வின் கோட்டைகளான அயோத்தி, வாரணாசி ஆகிய இடங்களில் பா.ஜ.க-வைப் பின்னுக்குத் தள்ளி அதிக வார்டுகளைக் கைப்பற்றியது சமாஜ்வாடி. சிறிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து 2022 தேர்தலில் களம் காணவிருக்கிறார் அகிலேஷ் யாதவ். பா.ஜ.க மீதிருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி, விவசாயிகளின் ஆதரவோடு தேர்தலைச் சந்திக்கும் முடிவிலிருக்கிறார் அகிலேஷ்.
Also Read: உ.பி உள்ளாட்சித் தேர்தல்: பிரதமர் மோடியின் வாரணாசி, அயோத்தி தொகுதிகளில் பாஜக பின்னடைவு!
பகுஜன் சமாஜ்
கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 18 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பகுஜன் சமாஜ், இந்தத் தேர்தலிலும் தனித்தே களம் காணவிருக்கிறது. கட்சியின் தலைவர் மாயாவதி இதற்காகச் சில வியூகங்களை வகுத்துவருகிறார். உ.பி-யில் 10-12 சதவிகித பிராமணர்களின் வாக்குவங்கி இருக்கிறது. 2007-ம் ஆண்டு தேர்தலையொட்டி பிராமண சார்புக் கூட்டங்களை நடத்தி, பெருவாரியான பிராமணர்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தார் மாயாவதி. அதே திட்டத்தை தற்போதும் கையிலெடுத்துக் களமிறங்கியிருக்கிறார் மாயாவதி. பா.ஜ.க ஆட்சியில் பிராமணர்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கும் பகுஜன் சமாஜ், அவர்களுக்கு நாங்கள்தான் மாற்று என்று பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
காங்கிரஸ்
ஒருகாலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது உ.பி. ஆனால், கடந்த தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்தது வெறும் ஏழு தொகுதிகள் மட்டுமே. உ.பி-யைக் கைப்பற்றும் கட்சிதான் மத்தியில் ஆட்சியமைக்கும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. அதனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, உ.பி-யில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செயல்பட்டுவருகிறது காங்கிரஸ் கட்சி. உ.பி தேர்தலுக்கான முழுப் பொறுப்பையும் பிரியங்கா காந்தியிடம் ஒப்படைத்திருக்கிறது கட்சி மேலிடம். இரண்டு ஆண்டுகளாக உ.பி தேர்தலுக்கான பணிகளைச் செய்துவருகிறார் பிரியங்கா.
Also Read: உத்தரப்பிரதேசம்: `காங். வலுப்பெறும்; பாஜக வீழ்த்தப்படும்’ -பிரியங்கா காந்தியின் திட்டங்கள் எடுபடுமா?
``இந்தத் தேர்தலைத் தனித்தே எதிர்கொள்ளவிருக்கிறோம்'' என்று கங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டிருக்கிறார். முதற்கட்டமாக முக்கியத் தொகுதிகளில் மக்களை நேரில் சென்று சந்தித்து, குறைகளைக் கேட்டறியும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது காங்கிரஸ். மேலும், உ.பி முழுவதும் பிரியங்கா தலைமையில் 12,000 கி.மீ யாத்திரை சென்று மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
ஆம் ஆத்மி
இந்தியா முழுவதும் பிரபலமான கட்சியாக இருந்தாலும், டெல்லியில் மட்டுமே ஆட்சியிலிருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி. இன்னும் சில ஆண்டுகளில் ஆம் ஆத்மியை வலுவான தேசியக் கட்சியாக்கிவிட வேண்டுமென்கிற எண்ணத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பஞ்சாப், கோவா, உ.பி தேர்தல்களில் தனித்துப் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். உ.பி-யில் ஆட்சியமைத்தால், `விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், நிலுவையிலுள்ள மின்சாரக் கட்டணங்கள் தள்ளுபடி, தடையில்லா மின்சாரம், மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம்' ஆகிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து முதற்கட்ட பிரசாரங்களை ஆரம்பித்திருக்கிறது ஆம் ஆத்மி!
சிவசேனா
கிடைக்கும் கேப்புகளிலெல்லாம் பா.ஜ.க-வை ஒருகை பார்த்துவரும் சிவசேனா, உ.பி., கோவா சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது. ``மேற்கு உ.பி-யிலுள்ள விவசாயிகள் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, அங்கிருக்கும் சிறு சிறு கட்சிகளை ஒன்றிணைத்து 80 முதல் 100 தொகுதிகளில் போட்டியிடுவோம்'' என்றிருக்கிறார் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்.
Also Read: கெஜ்ரிவாலுடன் சந்திப்பு... பஞ்சாப் தேர்தல்! - பாஜக-வால் குறிவைக்கப்படுகிறாரா நடிகர் சோனு சூட்?!
ஏ.ஐ.எம்.ஐ.எம்
அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி, உ.பி-யின் சிறு சிறு கட்சிகளோடு இணைந்து 100 இடங்களில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 7-ம் தேதியே, அயோத்தியிலிருந்து தேர்தலுக்கான பிரசாரப் பணியைத் தொடங்கிவிட்டார் ஒவைசி. ``பா.ஜ.க-வை வீழ்த்தவே உ.பி-யில் போட்டியிடுகிறோம்'' என்றிருக்கிறார் அவர். 2020 பீகார் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு, ஐந்து இடங்களைக் கைப்பற்றியது ஒவைசி கட்சி. அதே எனர்ஜியோடு, உ.பி-யில் பா.ஜ.க ஆட்சிக்கு இருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதிகளைக் கைப்பற்றும் நோக்கோடு செயல்பட்டுவருகிறது அந்தக் கட்சி.
ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில், பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என நான்கு முனைப் போட்டி இருந்துவருகிறது. இந்தநிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய கட்சிகள் போட்டியிடவிருப்பதால், உ.பி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது!
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-2022-uttar-pradesh-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக