திருச்சியில் பழிக்குப் பழி தீர்க்கும் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதனை குறைக்கும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களில் 120-க்கும் மேற்பட்ட ரெளடிகளை அதிரடியாகக் கைது செய்திருக்கிறது போலீஸ். பல ரெளடிகள் போலீஸாருக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துகொண்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் 13-ம் தேதி ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவறையில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்ற நிஷாந்த் என்பவரை ஒன்பது பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது. அந்தக் கொலைக்குக் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துவந்த நிலையில் நிஷாந்தின் நண்பர்கள் கும்பல், வாழைக்காய் விஜய் என்பவரை வெட்டிப் படுகொலை செய்கிறது. பதிலுக்கு விஜயின் தம்பி, அவரின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து நிஷாந்தைக் கொலை செய்தனர்.
இந்தச் சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் 15-ம் தேதி மாலை திருச்சி, கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சக்திவேலுக்கும், பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த அலெக்ஸுக்கும் நீண்ட நாள்களாக மோதல் இருந்துவந்திருக்கிறது.
அலெக்ஸ் மீது கடத்தல், கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாலையில் பொன்மலைப்பட்டி கடைவீதியிலுள்ள டாஸ்மாக் கடையில் சக்திவேலுவும், அவருடைய தம்பியான சின்ராஜும் முகத்தில் மாஸ்க் அணிந்து, டூ வீலரில் மது வாங்கச் சென்றிருக்கிறார்கள். அப்போது, அலெக்ஸ், சரத் உள்ளிட்ட எட்டுப் பேர் கொண்ட கும்பல், சக்திவேல் என நினைத்து சின்ராஜைத் தலையைத் துண்டித்துக் கொலைசெய்திருக்கிறது. சின்ராஜ் இறப்புக்கு அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில், 'விரைவில்...’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இதனால், பழிதீர்க்கக் கொலை நடக்கப்போகிறது என மக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் திருச்சி மாநகரில் உள்ள ரெளடிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என 14 சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களுக்கு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண் உத்தரவிட்டார். இதையடுத்து 14 காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் விசாரணை நடத்தி மாநகரில் உள்ள ரெளடிகளின் பட்டியலை தயாரித்து உள்ளனர்.
இதில் மாநகர பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 37 ரெளடிகளை கண்டறிந்து 18-ம் தேதி கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து 19-ம் தேதி அன்று இரவில் மட்டும் 79 ரெளடிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று நாட்களில் மொத்தம் 120 ரெளடிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல ரெளடிகள் வெளியூர்களில் தலைமறைவாகியுள்ளனர். தனிப்படை போலீஸார் அவர்களையும் தேடிவருகின்றனர். ரெளடிகளுக்கு யார் அடைக்கலம் கொடுத்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் எனக் கறாராக உத்தரவிட்டிருக்கிறார் மாநகர காவல்துறை ஆணையர் அருண்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/police-in-action-after-serial-murder-in-trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக